You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை' - கணவருக்கு எழுதிய கடிதத்தில் குழந்தை பற்றி என்ன கூறியிருந்தார்?
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
சிந்தம் மனிஷா என்ற 25 வயதான திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, "என்னால் இந்த எறும்புகளோடு வாழ முடியாது. குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார் அந்தப் பெண்.
"எறும்புகள் மீதான ஃபோபியா (பயம்) காரணமாக மனிஷா தற்கொலை செய்துகொண்டதாக நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பதன்சேறு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேஷ்.
"ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இருக்கும் போதோ அல்லது ஏதாவது ஒரு விஷயத்தைப் பார்க்கும் போதோ மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அதீத பயமும் கவலையும் தான் ஃபோபியா" எனக் குறிப்பிட்டார் மனநல மருத்துவர் எம்.ஏ.கரிம்.
எறும்புகள் மீதான பயத்துக்குப் பெயர் மிர்மெகோஃபோபியா (Myrmecophobia)
என்ன நடந்தது?
சங்காரெட்டி மாவட்ட காவல்துறையின் கூற்றுப்படி, 'மன்சிரியாவைச் சேர்ந்த சிந்தம் ஶ்ரீகாந்த் - மனிஷா தம்பதியர் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனவர்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சங்காரெட்டி அமினாபூரில் உள்ள நவ்யா ஹோம்ஸில் கடந்த ஓராண்டாக அவர்கள் வசித்து வந்துள்ளனர். நவம்பர் நான்காம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது நவ்யா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.'
பதஞ்சேறு தாசில்தார் மற்றும் போலீஸ் முன்னிலையில் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தது.
எறும்புகள் மீதான அதீத பயத்தால் மனிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இன்ஸ்பெக்டர் நரேஷ் கூறினார். இந்த வழக்கில் விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
"நவம்பர் நான்காம் தேதி தன் வீட்டை சுத்தம் செய்யவேண்டும் என்று சொல்லி நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில் தன் குழந்தையை விட்டிருக்கிறார் மனிஷா. வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வரும் போது குழந்தைக்காக தின்பண்டம் வாங்கி வருமாறு கணவருக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்" என்றும் அவர் சொன்னார்.
"அவர் வீட்டை சுத்தம் செய்யும் போது எறும்புகளைப் பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் கணவருக்கு அவர் தற்கொலைக் குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், 'ஶ்ரீ, என்னால் இந்த எறும்புகளோடு வாழ முடியாது. குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது" என்றும் நரேஷ் கூறினார்.
அந்தக் குறிப்பில், குழந்தைக்காக ஶ்ரீகாந்த் செய்த சத்தியங்களை நிறைவேற்றுமாறு மனிஷா கேட்டுக்கொண்டிருப்பதாக நரேஷ் குறிப்பிட்டார்.
விசாரணையின் ஒரு பகுதியாக மனிஷாவின் பெற்றோர்களிடமும் கணவர் ஶ்ரீகாந்திடமும் போலீசார் கேள்விகள் கேட்டனர்.
"மனிஷாவுக்கு எறும்புகள் மீது சிறு வயதில் இருந்தே பயம் இருந்திருக்கிறது. இந்த பிரச்னைக்காக அவர் மஞ்சேரியில் உளவியல் ஆலோசனை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது" என்று காவல்துறை ஆய்வாளர் நரேஷ் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மனிஷாவின் குடும்பத்தாரிடம் பேச பிபிசி மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை.
'இது நோய் அல்ல, உளவியல் பிரச்னை'
கரிம்நகரை சேர்ந்த மனநல மருத்துவர் எம்.ஏ.கரிம், இது அதீத பயத்தால் ஏற்பட்டது என்றே இவ்வழக்கின் விவரங்கள் சொல்வதாக பிபிசி-யிடம் தெரிவித்தார்.
"இதுவொரு மனநல பிரச்னை, நோய் அல்ல. சிறு வயதில் தோன்றும் பயம் அதிகமாக அதிகமாக, அது ஃபோபியாவாக மாறுகிறது. அது பிரம்மைகளை (hallucinations) ஏற்படுத்தும். இந்த ஃபோபியா இருப்பவர்கள் சில நேரங்களில் ஒரு சிறிய எறும்பைக்கூட யானையாகப் பார்த்து பயத்தின் உச்சத்தை அடைவார்கள். அதன்பின் அவர்களால் எறும்புகளைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
"இதுதான் தற்கொலைக்குக் காரணமா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இதுவெறும் அனுமானம் தான்" என்று அவர் கூறினார்.
இது மரபணு கோளாறு அல்ல என்று சொல்லும் கரிம், இதனால் பாதிக்கப்பட்டவர்களிடையே, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral Therapy - CBT) மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று கூறினார்.
மிர்மெகோஃபோபியா என்றால் என்ன?
கிரேக்கத்தில் மிர்மெக்ஸ் என்றால் எறும்பு என்று அர்த்தம். எறும்பு மீதான பயம்தான் மிர்மெகோஃபோபியா
போபியாக்கள் பல காரணங்களால் வரலாம்: பரிணாம காரணங்கள் (உதாரணமாக, பாம்பு போன்ற விஷமுள்ள விலங்குகளைப் பற்றிய இயற்கையான பயம்), தனிப்பட்ட அனுபவங்கள், கலாசார தாக்கங்கள் மற்றும் எறும்புகள் போன்றவற்றைச் சார்ந்த பொதுவான மன அழுத்தப் பிரச்னைகளும் அடங்கும்.
"மற்ற ஃபோபியாக்கள் அளவுக்கு அறியப்படாவிட்டாலும், மிர்மெகோஃபோபியா அரிதானது அல்ல" என்று கூறுகிறது ஃபோபியா சொல்யூஷன் வலைதளம்.
"உலகில் 7-9% மக்களுக்கு ஏதோவொரு ஃபோபியா இருக்கிறது. சிலர் உதவிகளை நாடாததாலும், சிலருக்கு தாங்கள் பயப்படுவதன் காரணம் ஃபோபியா தான் என்று தெரியாததாலும், எத்தனை பேருக்கு ஃபோபியா இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது" என்றும் ஃபோபியா சொல்யூஷன்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு