You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோவிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
அவரை உள்ளே அனுமதிக்காததற்கு அவரது சாதி தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கோவில் விதிகளின் படி அர்த்த மண்டபத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று கோவில் நிர்வாகம் கூறுகிறது.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு என்ன நடந்தது? அர்த்த மண்டபம் என்பது என்ன? கோவில் நிர்வாகம் என்ன சொல்கிறது? இளையராஜா தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் என்ன?
- ஆகமங்களுக்கு 'மூலமே' இல்லையா? ஆகம விதி உண்மையில் இருக்கிறதா?
- பழனி கருவறையில் சேகர்பாபு நுழைந்ததாக சர்ச்சை: "சித்தர்கள் பிரதிஷ்டை செய்த கோவிலில் ஆகம விதிக்கு இடம் உண்டா?"
- திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்
- இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்து அல்லாதவர்கள் பணியாற்றக் கூடாதா? சட்டம் சொல்வது என்ன?
ஆண்டாள் கோவிலில் என்ன நடந்தது?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தகோவில் அதன் கட்டடக்கலைக்கு புகழ் பெற்றது.
மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, கோவிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பங்கேற்றார்.
ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் இசைத்தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக்கலைஞர்கள் அங்கு பாடினர்.
ஆண்டாள் கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஶ்ரீ ஆண்டாள் ஜீயர் மடத்தை சேர்ந்த, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் இளையராஜா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்பாக, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள ஆண்டாள் ரெங்கமன்னார் இருக்கக் கூடிய அர்த்த மண்டபத்துக்குள் ஜீயர்களுடன் நுழைய முயன்ற போது இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டார்.
இளையராஜா தடுக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது?
ஆண்டாள் சன்னதியில், அர்த்த மண்டபத்துக்கு வெளியே இருக்கும் வசந்த மண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். "கருவறைக்கு செல்லும் வழியில் இருக்கும் அர்த்த மண்டபத்தை நோக்கி இளையராஜா சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று ஜீயர்கள் தெரிவித்தனர். எனவே வழக்கமாக அனைவரும் பிரார்த்தனை செய்யும் இடத்தில் நின்று இளையராஜா வணங்கினார்" என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதன் பின், இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே செல்லதுரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சன்னதி,நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதி ஆகியவற்றில் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். ஆடிப் பூர கொட்டகையில் நடைபெற்ற திவ்ய பாசுர நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால்தான் கோவில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அவர் ஜீயர்களால் தடுத்து நிறுத்தப்படும் காட்சிகளை கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்த்த மண்டபம் என்பது என்ன?
அர்த்த மண்டபம் என்பது தெய்வத்தின் உருவங்கள் இருக்கும் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாக இருக்கும் உடனடி பகுதியாகும்.
கருவறைக்குள் செல்லும் எவரும் அர்த்த மண்டபத்தின் வழியாகவே செல்ல வேண்டும். கோயில் கட்டடக்கலையின் ஒரு பகுதியான அர்த்த மண்டபம் தெய்வத்தை காண்பதற்கு முன்பாக ஆன்மீக உணர்வை கூட்டும் பொருட்டு அமைக்கப்படுகிறது, நடைமுறையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
"இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு"
கோவில் வழக்கமே காரணம் என்று நிர்வாகம் கூறினாலும், கருவறைக்குள் நிகழ்த்தப்படும் தீண்டாமையே இது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை.
தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு அரசு மையத்தில் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் 24 பேர் பல்வேறு கோவில்களில் பணியமர்த்தப்பட்டனர். அவற்றில் 6 கோவில்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை.
"தமிழ்நாட்டில் அர்ச்சகராக பிராமணர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வது எல்லா இடங்களிலும் இன்னும் சாத்தியமாகவில்லை. திருச்சியில் உள்ள ஆகம விதிக்கு உட்பட்ட வயலூர் முருகன் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்ய அனுமதிக்கப்படாததால், நீண்ட போராட்டம் நடத்தி, ஒரு மணி நேரம் பூஜை செய்தார். அவரது நியமனம் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை பெற்றுள்ளோம்" என்று அர்ச்சகராக பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வி ரங்கநாதன்.
"ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு, ஆனால் இந்த தீண்டாமை குறித்து அவர் குரல் எழுப்புவாரா? " என்கிறார் அவர்.
2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்துக்கு சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. "கோவில்களின் மரபு, வழக்கம் என்று கூறியே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு 24 அர்ச்சகர்களுக்கு மேல் நியமனம் செய்யாமல் இருக்க தடையாக இருப்பதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளே" என்கிறார் ரங்கநாதன்.
இளையராஜா தடுக்கப்பட்டது ஏன்?
இளையராஜா சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாடசாலை ஆகம ஆசிரியரான கோகுலகிருஷ்ணன், "ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைக்காநசம் என்ற ஆகம விதிக்கு உட்பட்டது. தோளில் சக்கர அடையாளம் பெற்றுக்கொள்வது, உடலில் பெருமாள் பாத அடையாளங்களை பெறுவது உள்ளிட்ட ஐந்து தீட்சைகள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் செல்லலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோவிலில் பெண்களே பூஜை செய்கின்றனர்." என்கிறார்.
கோவில் வழக்கப்படி அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று ஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செயல் அலுவலர், "அர்த்த மண்டபத்திற்குள் கோவிலில் பணி செய்யும் அர்ச்சகர்களை தவிர்த்து மற்ற நபர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் இசையமைப்பாளர் இளையராஜாவை அங்கிருந்து வெளியேறுமாறு ஜீயர் மற்றும் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இளையராஜா வெளியேறி சாமி தரிசனம் செய்தார்" என தெரிவித்தார்.
இளையராஜா விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா தடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்கு அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)