ஒலிம்பிக் வீரர்களுக்கு எதிரான இணைய துன்புறுத்தல்களை தடுக்க உதவும் செயற்கை நுண்ணறிவு
சோஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர். "நீங்கள் தவறான வழியில் வைரலானால், உங்களைப் பற்றி மோசமான விஷயங்களை மக்கள் சகஜமாக பேசுவார்கள்" என்கிறார் சோஃபியா.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சோஃபியாவின் அடையாளத்தை வெளியிடவில்லை. இவர் சமூக ஊடக துன்புறுத்தலுக்கு ஆளான வீரர்களுள் ஒருவர். மக்கள் உங்களைப் பற்றி மோசமாகப் பேசுவது, உங்களை முற்றிலும் நொறுக்கிவிடும். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு இதைத் தடுக்கின்றனர்.
"ஒலிம்பிக் பற்றி 50 கோடி பதிவுகள் இடப்படும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறுகிறார் ஐ.ஓ.சி சேஃப் ஸ்போர்ட் யூனிட் தலைவர் கிர்ஸ்டி பரோஸ். மேலும், "ஒரு பதிவுக்கு ஒரு நொடி எனக் கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும், ஒட்டுமொத்த பதிவுகளை ஏ.ஐ உதவியின்றிக் கையாள 16 ஆண்டுகள் ஆகும்" என்கிறார் இவர்.
சமூக ஊடகங்களில் வீரர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுக்குறித்து பேசிய சோஃபியா, ‘இதை நானே சரிசெய்யலாம் என நினைத்தேன். நான் ஒரு தெரப்பிஸ்டை சந்தித்து நான் எதிர்கொண்ட அனைத்தையும் கூறினேன். அவை இன்னும் ஆறாத வடுக்களாக உள்ளன’ என்று கூறுகிறார்.
"பலவிதமான துன்புறுத்தல்களை இந்த ஏ.ஐ ஸ்கேன் செய்கிறது. ‘இந்த செயற்கை நுண்ணறிவு. ஸ்கேனிங் 35 மொழிகளில் செயல்படுகிறது. இவை வெறும் எழுத்துகள் மட்டுமல்லாமல், எமோஜி, புகைப்படங்கள், எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றையும் இது அலசுகிறது. மேலும், நாங்கள் ஃபிஷ்ஷிங், டாக்ஸிங் போன்ற சைபர் மோசடிகளையும் கண்டறிகிறோம். மற்றும் வீரர்களை குறிவைக்கும் திரிக்கப்பட்ட தகவல்கள் நிரம்பிய பிரசாரங்கள், அவர்களுக்கு எதிராக பரப்பப்படும் பொய் செய்திகளையும் முறியடிக்கிறோம்" எனக் கூறுகிறார் கிர்ஸ்டி பரோஸ்
இதன் மூலம் வீரர்கள் அத்தகைய பதிவுகளை பார்க்கும் முன்பே, அவை நீக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என, சர்வதேச ஒலிம்பிக் குழு நம்புகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



