லியோ சண்டைக் காட்சியில் பயன்படுத்திய கேமராவில் என்ன சிறப்பு? ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பிரத்யேக பேட்டி

காணொளிக் குறிப்பு, லியோ சண்டைக் காட்சியில் பயன்படுத்திய கேமராவுக்கு என்ன சிறப்பு
லியோ சண்டைக் காட்சியில் பயன்படுத்திய கேமராவில் என்ன சிறப்பு? ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பிரத்யேக பேட்டி

குறிப்பாக படத்தின் வண்ணச் சேர்க்கை, கழுதைப் புலி வரும் காட்சிகள் ஆகியவை சிறப்பாக அமைந்திருப்பதாக பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா. அவரிடம் லியோ பட அனுபவம், அவருடைய முந்தைய படங்கள், ஒளிப்பதிவு குறித்த அவரது பார்வை ஆகியவை பற்றி விரிவாக பிபிசி பேசியது.

படத்தின் முக்கிய சண்டைக்காட்சி குறித்து பேசும்போது, “அந்த காட்சிக்கு எஃப்பிவி என்ற ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். வழக்கமான ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கும். இந்த ட்ரோனைப் பொறுத்தவரை ரேஸ்களுக்குப் பயன்படுத்தக்கூடியது. இதை நாங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தினோம்."

"ஆனால், இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அந்தக் காட்சி படமாக்கப்படும்போது எல்லோரும் பார்க்க முடியாது. இயக்குபவருக்கு மட்டும்தான் அது தெரியும். முதல் நாளே சண்டைக் காட்சிகளுக்கான இயக்குநர் வந்து, எப்படி, எந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் எனச் சொல்லிவிடுவார். அதற்குப் பிறகு அடுத்த நாள் படமாக்குவோம்."

"இந்தப் படத்தில் கழுகை ஒரு பாத்திரத்தைப் போல பயன்படுத்தியிருந்தார் இயக்குநர். கழுகு போகும் வேகத்திற்கு கேமராவும் சென்றால் நன்றாக இருக்கும் என்பதால் இதைப் பயன்படுத்தினோம். சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போதும், முதலில் ஒரு குழு ஓடிவரும். பிறகு இன்னொரு குழு ஓடிவரும். அதற்கு மாற்றாக ஒரே ஷாட்டில் இரு தரப்பும் வருவதைப்போல காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

மேலும், இந்தப் படத்திற்கு என மிகப் பெரிய செலவில் ஒரு செட் அமைத்திருந்தோம். இம்மாதிரி செட்கள் ஒரே நேரத்தில் முழுமையாகத் தெரியாது. சில 'வைட் ஷாட்'களில் தெரியும், அவ்வளவுதான். இந்த ட்ரோனை வைத்து இரண்டு ஏக்கரில் போட்ட செட்டை ஒரே காட்சியில் தெரிவது போல 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்தோம்.

சுமார் ஒரு நிமிடத்திற்கு கேமரா பயணம் செய்யும்போது, அந்த செட்டின் பிரம்மாண்டம், கலை இயக்குநரின் முயற்சிகளுக்கு ஒரு கவனம் ஆகியவை கிடைத்தன. ஒரே காட்சியில் குழுவில் உள்ள எல்லோரது திறமையையும் காட்டும் வாய்ப்புக் கிடைத்தது”. என்றார் (முழு தகவல் காணொளியில்)

லியோ ஒளிப்பதிவாளர்

பட மூலாதாரம், manojinfilm@instagram

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)