நடிகை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை - சீமானிடம் விசாரிக்க திட்டமா? இன்றைய முக்கிய செய்திகள்

தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் இன்று (24/02/2025) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஒருவர் அளித்த புகார் தொடர்பான வழக்கில் சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2011-ல் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கை போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர் என்றும் நடிகை அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிலரது தூண்டுதல் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நடிகையும், சீமானும் 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் தாலி கட்டவில்லை. தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதன் காரணமாகவே அவர் சீமானுடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர், அவர் அளித்த பாலியல் புகாரை சிலர் அளித்த நிர்பந்தம் காரணமாகவே திரும்பப் பெற்றார். அவராகவே மனமுவந்து வாபஸ் பெறவில்லை. எனவே, சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக்கூடாது' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக 12 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது காவல்துறையினர் அந்த நடிகை சீமான் மீது தொடுத்திருந்த வழக்கின் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சீமானிடம் மீண்டும் விசாரிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் போராட்டம்

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு திமுக நிர்வாகிகள் சென்றதாகவும், அங்கு தமிழ் , இந்தி ஆங்கிலம் என 3 மொழிகளில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை வைத்து அழித்துவிட்டு, தமிழ் வாழ்க என எழுதி , முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

நெல்லை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பெயர்ப்பலகையில் உடனடியாக மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டதோடு , ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று பொள்ளாச்சி ரயில் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடைபெற்றதாக தினத்தந்தி செய்தி குறிப்பிடுகிறது. மூன்று மணி நேரத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் மீண்டும் இந்தி எழுத்துகளை அதிகாரிகள் திருத்தி எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரதிநிதித்துவம் குறைகிறதா?

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோரின் பங்களிப்பு தொடர்பாக வெளியான ஆய்வு முடிவுகள் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுநிர்வாகத்திற்கான இந்திய ஆய்வு நிறுவனம் (IIPA) சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள "தி இந்து" ஆங்கில நாளேடு, 2024 ம் ஆண்டு நிலவரப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் (Rural Local Bodies) 12.39 சதவிகிதம் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) இருப்பதாக கூறுகிறது. கிராம பஞ்சாயத்துக்களில் 12.16 சதவிகிதம், பஞ்சாயத்து ஒன்றியங்களில் 15.42 சதவிகிதம், மாவட்ட பஞ்சாயத்துக்களில் 17.25 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது என தி இந்து சுட்டிக்காட்டுகிறது.

ஒட்டு மொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு 57.3 சதவிகிதமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோரின் நிலையை இந்த ஆய்வறிக்கை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என அந்த செய்தி கூறுகிறது.

அனைத்து பிரிவுகளிலும் பரவியிருக்க வேண்டிய பெண்கள் ஒதுக்கீடு, எஸ்.சி. , எஸ்.டி. பிரிவினரோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கணக்கீடு செய்யக் கூடாது என தி இந்து ஆங்கில நாளிதழ் கூறுகிறது.

IIPA பேராசிரியரான வி.என்.அலோக் இது தொடர்பாக தி இந்து நாளேட்டிடம் பேசிய போது, 2013ம் ஆண்டில் உள்ள கணக்கீடுகளை மறுமதிப்பீடு செய்ததோடு, மாநில அரசுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே அறிக்கை தயார் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

இந்த கணக்கீடுகள் குறித்து தி இந்து நாளேட்டிடம் பேசியுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பெடி, மாநிலத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. இதை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும். கைது நடவடிக்கைகள் அதிக அளவில் தொடர்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 119 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு, 16 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக் குழுவை உடனே கூட்ட வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும். இலங்கையில் இருந்து படகுகளுடன் மீனவர்களை விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சி எடுக்க வேண்டும்," என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக இந்து தமிழ் திசையின் செய்தி குறிப்பிடுகிறது.

தெற்காசிய நகர்வல ஓட்டம்: வக்சனுக்கு தங்கம், துதிஹர்ஷிதனுக்கு வெள்ளி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர் என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார்.

10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கனிஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி மாணவன் சிவாகரன் துதிஹர்ஷிதன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

துதிஹர்ஷிதனும் தனது முதலாவது சர்வதேச முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். 8 கிலோ மீற்றர் நகர்வல ஓட்டப் போட்டியை துதிஹர்ஷிதன் 27 நிமிடங்கள், 03.90 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பெற்றிருந்தனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)