You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்: வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த தொண்டர்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக, 12 வாரங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
'சீமான் மீதான புகாரை நடிகை வாபஸ் பெற்றாலும் இது தீவிரமான குற்றச்சாட்டு' எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள நடிகையிடம் சென்னை வளசரவாக்கம் போலீஸார் கடந்த புதன்கிழமையன்று நேரில் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று (பிப்ரவரி 27) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், "முன்கூட்டியே திட்டமிட்டபடி வெளியூர் பயணத்தில் இருப்பதால் ஆஜராக வாய்ப்பில்லை" என சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதை ஏற்க மறுத்த வளசரவாக்கம் போலீஸார், வெள்ளிக்கிழமையன்று நேரில் ஆஜராகுமாறு சீமானின் வீட்டில் சம்மனை ஒட்டினர். இதை அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கிழித்ததால் அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சீமான் மீதான வழக்கின் பின்னணி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு நடிகை ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு சீமான் ஏமாற்றி விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417, 420, 354, 376, 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக வீடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து, வழக்கின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், கணவன்-மனைவியாக தானும் சீமானும் வாழ்ந்ததாகவும் இதனால் தான் ஏழு முறை கர்ப்பமானதாகவும் அதை மாத்திரை மூலம் சீமான் கலைக்கச் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
திரைத்துறை மூலம் சம்பாதித்துச் சேமித்து வைத்திருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை சீமான் எடுத்துக் கொண்டதாகவும் புகார் மனுவில் நடிகை கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த சீமான், அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தல் பணியில் இருந்து தன்னை திசை திருப்புவதற்காகவும் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது அண்ணா நகர் காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். புகார் அளித்த நடிகையின் வாக்குமூலம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
தனக்கு கருக்கலைப்பு நடந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 17) வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் சீமான் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இளந்திரையன் விரிவான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதில், "தங்கையின் குடும்ப விவகாரம் மற்றும் திரைத்துறை பிரச்னைகள் தொடர்பாக சீமானை நடிகை சந்தித்துள்ளார். அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதால் இருவருக்கும் இடையில் உறவு ஏற்பட்டுள்ளது. ஆனால், திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிய போது பல்வேறு மிரட்டல்களை அவர் எதிர்கொண்டுள்ளார்" என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
'ஒருமித்த உறவு தவறல்ல'
இந்த வழக்கில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சித் தலைவராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் உள்ள சீமான் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய நடிகை, 2023ஆம் ஆண்டில் மீண்டும் தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் ஒன்றை கொடுத்ததாக குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வருமாறு சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அவரும் விசாரணைக்கு ஆஜராகி புகார் மனு வாபஸ் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியதாக சீமானின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இந்த எஃப்.ஐ.ஆர், 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட சீமானின் வழக்கறிஞர், "இருவருக்கும் இடையே பரஸ்பர சம்மதத்தின் பேரில்தான் உறவு (consensual sex) இருந்துள்ளது. இது தவறல்ல என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது" என்றார்.
15 சாட்சிகள் வாக்குமூலம்
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அளித்த கடிதம் விசாரணை அதிகாரிக்குச் சென்று சேரவில்லை எனக் கூறினார்.
வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளதாகவும் இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீஸ் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீமான் மீதான புகாரை வாபஸ் பெற விரும்பவில்லை என விசாரணை அதிகாரிக்கு வாட்ஸ் ஆப் மூலமாக நடிகை தகவல் அனுப்பியுள்ளதாகவும் முகிலன் தெரிவித்தார்.
நீதிபதி உத்தரவில் என்ன உள்ளது?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது சீமான் மீது நடிகைக்கு எந்தக் காதலும் இல்லை. குடும்பப் பிரச்னை மற்றும் திரைத்துறை பிரச்னை தொடர்பாகவே அணுகியதாகக் குறிப்பிட்டார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு அதன்படி நடந்து கொள்ளாததால் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் ஆறு முதல் ஏழு முறை வரை கருக்கலைப்பு செய்துள்ளார். அவரிடம் இருந்து அதிக தொகையை சீமான் வாங்கியுள்ளதாக கூறுகிறார்," என்று தெரிவித்தார்.
"அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் கூறிய நீதிபதி, "மன ரீதியாக கடும் பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகார் மனுவை அவர் வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" என்றார்.
அந்த வகையில், "சீமான் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறிய நீதிபதி, " 12 வாரங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த கட்டம் என்ன?
"வழக்கின் அடுத்தகட்டம் என்ன?" என குற்றவியல் வழக்குகளுக்கான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் முகிலனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"நீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்து இறுதி அறிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முகிலன், "அவர் வழக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம். அதை நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்" என்றார்.
"வழக்கின் முடிவில் சீமான் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முடியும்" எனக் கூறும் முகிலன், "என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் புலனாய்வு அதிகாரியே முடிவு செய்வார்" எனக் கூறினார்.
'கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பேசப்பட்டு வருகிறதே?' என்ற போது, "இதுவே தாமதம்தான். அதை நீதிபதியும் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்" என்றார் முகிலன்.
"சீமான் மீது என்ன நடவடிக்கை என்பது விசாரணை அதிகாரியின் எல்லைக்கு உட்பட்டது" எனக் கூறுகிறார், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கின் புலனாய்வை குறித்த நேரத்தில் முடிக்க முடியாவிட்டால் நீதிமன்றத்துக்கு காரணங்களைச் சொல்ல வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீமானைக் கைது செய்யலாம்" என்றார்.
"ஒருவர் புகாரை வாபஸ் வாங்கிவிட்டாலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் புலனாய்வை தொடர்ந்து நடத்தலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாம் தமிழர் கட்சி சொல்வது என்ன?
ஆனால், இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் பார்வை வேறாக இருக்கிறது. சீமானை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் அவரது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் தி.மு.க ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்.
"தன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு கூறி நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெற முடியாது எனவும் முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார். இது இறுதி முடிவு அல்ல" எனக் கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக்.
தொடர்ந்து பேசிய அவர், "வழக்கை வாபஸ் பெறுவதாக நடிகை பேசிய காணொளி தற்போதும் உள்ளது. ஆனால், அதற்கு மாறாக மக்கள் மத்தியில் சீமானுக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது" எனக் கூறினார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் தமிழர் கட்சி, சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டார்.
தி.மு.க-வுக்கு தொடர்பு உள்ளதா?
ஆனால், "இது இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான வழக்கு. இதற்கும் தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அந்த நடிகை மிரட்டப்பட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சீமான் மீதான புகாரை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது என நீதிபதி கூறுகிறார். இதில் தி.மு.க எங்கே வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.
"வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்துக்கு சீமான்தான் சென்றார். தி.மு.க ஆட்சிக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)