கோலி, ரோகித்தை விட அதிக ரன் சராசரி: அக்ஷர் படேல் அடுத்த கபில் தேவ் ஆவாரா?

    • எழுதியவர், விதான்ஷு குமார்
    • பதவி, விளையாட்டுப் பிரிவு செய்தியாளர், பிபிசி இந்தி

பார்டர்-கவாஸ்கர் டிராஃபியின் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த வீரர்கள் தொடரின் வெவ்வேறு கட்டங்களில் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் க்வாஜாவின் அதிரடியான சதங்களும், அஷ்வின், ஜடேஜா மற்றும் லயன் ஆகியோரின் மேட்ச் வின்னிங் ஸ்பெல்களும் இதில் அடங்கும்.

இந்த வீரர்கள் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி அல்லது சில சிறந்த ஸ்பெல்கள் பந்து வீசி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.. ஆனால் இந்த பேட்ஸ்மேன்கள் அல்லது பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார்களா?

இந்தத் தொடரில் வீரர்களின் தொடர்ச்சியான நல்ல செயல்பாடு பற்றி நாம் பேசினால் இந்த நட்சத்திர வீரர்களிடமிருந்து நாம் விலகிச்செல்லவேண்டும். நாக்பூரின் சுழல்பந்து வீச்சுக்கு உதவிடும் ஆடுகளமாக இருந்தாலும் சரி, அகமதாபாத்தின் பேட்டிங்கிற்கு துணைபுரியும் ஆடுகளமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இன்னிங்ஸிலும் முழு நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்த ஒரு வீரரை நாம் பார்க்கவேண்டும்.

களத்தின் ஒரு முனையில் இருந்து தொடர்ந்து பந்துவீசிய அவர் சில முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்தபோதும் அதிக ரன்களை குவித்து, பந்துவீச்சில் குறைந்த எண்ணிக்கையில் ஓவர்கள் கிடைத்தபோதும் அதில் தாக்கத்தை ஏற்படுத்திய அக்ஷர் படேலைப் பற்றி நாம் பேசுகிறோம்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அக்ஷர் படேலால் இன்றுவரை டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆகியவற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு பெரிய வீரரும் இல்லாத நிலையில் அவருக்குப் பதிலாக அணியில் வரும் அக்ஷர் படேல் உண்மையில் ’இடத்தை இட்டு நிரப்பும் வீரரா’ அல்லது அவரது திறமைக்கு முழு நீதியை தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் செய்யவில்லையா?

பேட்டிங் வரிசையில் கீப்பருக்கு முன் களம் இறக்கப்பட வேண்டும்

முதலில் இந்த தொடரில் அக்ஷர் படேலின் ஆட்டத்தை பார்ப்போம். இந்தத் தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார், அதில் அவர் 88 என்ற சராசரியில் 264 ரன்கள் எடுத்தார்.

அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சராசரி இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக இருந்தது. க்வாஜா, கோலி அல்லது ரோஹித்தின் சராசரி இவரது சராசரியை நெருங்க முடியவில்லை.

அவர் நாக்பூரில் 84 ரன்கள் எடுத்தார், கவாஸ்கர், மார்க் வாஹ் மற்றும் பிற வர்ணனையாளர்களும் இதை மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸ் என்று அழைத்தனர். படேல் விரைவில் ஆட்டமிழந்திருந்தால், அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருக்கலாம். மேலும் இந்தத் தொடருடன் கூடவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் காட்சியும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

இதற்கு அடுத்த போட்டியில், அவர் 74 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரை விட அதிக ரன்களை எடுத்தனர், இதில் அக்ஷர் பட்டேலின் இன்னிங்ஸ் மிகப்பெரிய பங்கு வகித்தது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஸ்பின்னிங் டிராக்குகள் தயாரிக்கப்பட்டன. அதில் பேட்டிங் செய்து ரன்களை எடுப்பது பெரிய பேட்ஸ்மேன்களுக்கே கடினமான காரியம். இந்தூர் ஆடுகளத்தில் இந்தியா மோசமான பேட்டிங் காரணமாக போட்டியை இழந்தபோதிலும் கூட, அக்ஷர் படேல் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் ரன்கள் குவிப்பதையும், ஆடுகளத்தில் முதல் பந்திலேயே மிகவும் உறுதியான பேட்ஸ்மேனாக தோற்றமளிப்பதையும் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் அவரை பேட்டிங் வரிசையில் முன்னால் கொண்டுவந்திருக்க வேண்டாமா?

இவருடன் ஒப்பிடும்போது ஸ்ரீகர் பாரத் மற்றும் கே.எல்.ராகுல், மிகக் குறைவான ரன்களே எடுத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை பேட்டிங் வரிசையில் முன்னே கொண்டுசெல்லாமல் நிர்வாகம் ஒரு வாய்ப்பை தவறவிட்டது. அப்படி செய்திருந்தால் ஒருவேளை இந்தூரில் அவர் இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்பார், அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்க்க்கூடும்.

இந்தத் தொடரில் அவர் அதிகபட்ச சராசரியுடன் ரன்களை குவித்தது மட்டுமல்லாமல், அதிகபட்ச சிக்ஸர்களையும் விளாசினார். அவர் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தார். விக்கெட்டுகள் விரைவாக விழும்போது கவனமாக விளையாடினார். மேலும் வேகமாக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை அணிக்கு ஏற்பட்டபோது அவர் அதையும் செய்துகாட்டினார்.

அகமதாபாத் டெஸ்டில் கூட சில ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். ஆனாலும் இங்கும் நான்கு சிக்சர்கள் அடித்தார். அணியின் நலன் கருதி ஸ்கோர் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவுட் ஆனார்.

அக்ஷர் பந்துவீச்சில் ரோஹித்திற்கு நம்பிக்கை இல்லையா?

இந்த தொடரில் படேலின் பந்துவீச்சைப் பார்த்தால், அவர் அதிகம் செய்யவில்லை என்றே தோன்றும். உண்மையில் அக்ஷர் படேல் ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அடையாளம் காணப்பட்டாலும், இந்த தொடரில் அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்புகள் கிடைத்தது, ஏனெனில் டாப் ஆர்டரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. பந்துவீச்சில் அவருக்கு குறைவான ஓவர்களே வழங்கப்பட்டன.

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி அணியில் இருக்கும்போது, மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் அரிதாகவே வாய்ப்பு பெறுகிறார்.

அவர் அகமதாபாத்தில் சிறந்த வெற்றியைப் பெற்றார். ஏனென்றால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழாததால் கேப்டன் அவருக்கு அதிக ஓவர்களைக் கொடுத்தார்.

அணி நிர்வாகத்திற்கு அவருடைய பந்துவீச்சில் நம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது. மேலும் அஷ்வின்-ஜடேஜா மற்றும் சீமர்கள் விக்கெட்டுகளை எடுக்கும் பணியை முடித்து விடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது திறமையை முழுமையாகப் பயன்படுத்தாதது போல உள்ளது. அணிக்கு எந்த வகையிலும் இது உதவாது. நல்ல பேட்டிங், பந்துவீச்சிலும் ஆல்-ரவுண்டருக்கு உதவுகிறது, அதிக ஓவர்கள் கொடுத்திருந்தால் அவர் இன்னும் சில விக்கெட்டுகளை எடுத்திருக்கக் கூடும்.

ஒப்பீட்டளவில் ஆல்ரவுண்டர் வரிசையில் அக்ஷர் எங்கே இருக்கிறார்?

அக்ஷர் படேல் 2014ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய அவர், 2022ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

அவர் 40 டி20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி 288 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 49 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தி 381 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது திறமை டெஸ்ட் பந்தயங்களில்தான் அதிகமாக வெளிப்பட்டுள்ளது. தற்போதைய டெஸ்டுக்கு முன்புவரை அவர் விளையாடிய 11 போட்டிகளில் 16.14 சராசரியில் 48 விக்கெட்டுகளையும், 33.38 சராசரியில் 434 ரன்களையும் எடுத்துள்ளார்.

அவரது ஆட்டத்தை ஜடேஜா அல்லது அஷ்வினின் ஒட்டுமொத்த ஆட்டத்திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், போட்டியின் எண்ணிக்கையில் படேல் இருவரையும் விட மிகவும் பின்தங்கியிருப்பதால் சராசரியைப் பார்க்க வேண்டியது அவசியம்.

டெஸ்ட் போட்டிகளில், அஸ்வின் 23.97 சராசரியிலும், ஜடேஜா 23.84 சராசரியிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். மறுபுறம் பேட்டிங்கில் அஷ்வினின் ரன் சராசரி 27.14. ஜடேஜா சராசரியாக 36 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் அஷ்வினுக்கு மேல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் பந்துவீச்சில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேப்டன் ரோஹித் ஷர்மாவைப் பற்றி பேசினால், அவர் இந்த சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட மாட்டார். இது உண்மையில் 'ப்ராப்ளம் ஆஃப் பிளென்டி'. பெரும்பாலான போட்டிகளில் அவர் மூன்றில் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், படேல் இப்படியே தொடர்ந்து பேட் செய்தால் ஒருநாள் அவர் பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெறுவார். அவருக்குத்தேவை தொடர்ச்சியான வாய்ப்புகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: