You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சதம் அடித்து ரசிகர்களின் தாகம் தணித்த 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா - சிறப்பு என்ன?
ஏறத்தாழ 1100 நாட்களுக்குப் பிறகு சதத்தை தேடிய பயணத்தில் தனது தீராத தாகத்தை தணித்துக்கொண்டார் ரோஹித் சர்மா. விராட் கோலியைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் ரோஹித். நடப்பாண்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இது இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்திருக்கிறது.
விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலளித்த ‘ஹிட் மேன்’
“ரோஹித் சர்மா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ரோஹித் சதம் அடித்து பல நாள் ஆகிறது. ரோஹித் கேப்டன் ஷிப்புக்கு தகுதியற்றவர். ரோஹித் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்” இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு இன்று தனது பேட்டிங்கால் பதில் அளித்திருக்கிறார் 'ஹிட் மேன்'.
இந்தூரில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித், 83 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 30வது சதம்.
தனது ஆட்டப்பாணி குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, தன்னிடம் இருந்து பெரியளவில் ரன் வருவதில்லை என்பது தனக்குத் தெரியும் என்றும் பெரிதாக கவலைப்படாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தார் ரோஹித். விரைவாகவே பெரிய ரன்கள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
டி20 உலகக்கோப்பையில் ரோஹித்தின் பேட்டிங் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடாமல்போனதும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. எதிர்வரும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரோஹித்திற்கு பலப்பரிசையாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில், 3 ஆண்டுகள் கழித்து சதம் அடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.
இதற்கு முன்பு ரோஹித் வைட் பால் (White ball) கிரிக்கெட்டில் சதம் விளாசியது ஜனவரி 2020ல்தான். பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 119 ரன்கள் குவித்திருந்தார்.
ரோஹித்துக்கு குரல் கொடுத்த டிராவிட்
அண்மைக்காலமாக ரோஹித்தின் ஆட்டம் விவாதத்தை கிளப்பிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, அவருக்காக ஆதரவு அளித்து பேசியிருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
“ரோஹித் ஷர்மாவை 17 அல்லது 18 வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் அவர் ஆடியபோது கவனித்திருக்கிறேன். எல்லா இளைஞர்களும் சிறுவயதில் ஆடியது போன்றே தங்களது திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் சாதிப்பார்கள் என சொல்ல முடியாது. ஆனால் ரோஹித் அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு மகத்தான சேவையை புரிந்திருக்கிறார்” என ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டினார்.
“நீங்கள் வேகமாக ஷார்ட் பால் போட்டாலும் சரி, பந்தை ஸ்விங் செய்தாலும் சரி, ஸ்பின் போட்டாலும் சரி எதையும் துணிச்சலாக எதிர்கொள்பவர் ரோஹித் ஷர்மா. அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவருக்கே உரிய பாணியில் ஆடுவதை பார்க்க சிறப்பாக இருக்கும்” என கூறியிருந்தார் டிராவிட்.
இளம் வீரர்களின் நெருக்கடியை போக்கும் ரோஹித்
ரோஹித் சமீப காலமாக தடுமாறினாலும், ஒருநாள் ஆட்டத்தை அவர் எதிர்கொள்ளும் விதமே தனி. 50 ஓவர்கள் முழுமைக்கும் ஆட முயற்சிப்பார். தொடக்கத்தில் நிதானம் காட்டுவார். போகப் போகப் அதிரடிகளை கட்டவிழ்ப்பார். இந்த யுத்திதான் அவருக்கு 3 இரட்டைச் சதங்களை குவிக்க உதவியது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு தனி நபரும் 2 முறைகூட இரட்டைச் சதம் விளாசியது கிடையாது. அண்மையில் இஷான் கிஷன், சுப்மன் கில் தங்களது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தனர். இளம் வீரர்கள் இரட்டைச் சதம் விளாசிய பெருமையில் ரோஹித்திற்கும் சிறிதளவு பங்குண்டு என்கின்றது ஈ.எஸ்.பி.என். இணையதளம்.
ரோஹித் தனது பழைய பாணியை விட்டுவிட்டு புதிய கோணத்தில் ஆட்டத்தை அணுகுகிறார். தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்துகிறார். இது அவருடன் இணைந்து ஆடும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரருக்கு நெருக்கடியற்ற சூழலை உருவாக்கித் தருகிறது. தன்னோடு ஆடுபவர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த ரோஹித் ஒத்துழைக்கிறார். ஆனால் சில சமயங்களில் அது அவரது விக்கெட்டையும் இழக்கச் செய்கிறது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
இதுதவிர, அண்மைக் காலமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் முத்திரை பதித்து வரும் நிலையில், ரோஹித் ஷர்மா தற்போது அதிரடியான சதம் மூலம் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்