You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1205 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த விராட் கோலி: சாதனை சிகரத்தில் சச்சின், லாராவை மிஞ்சுவாரா?
கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார்.
ஆமதாபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடியாக இந்தியாவும் அதிக ரன் குவித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.
இருபது ஓவர் போட்டிகளில் சதம், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் என அண்மைக் காலமாக அசத்தி வரும் சுப்மன் கில், தொடக்க வீரராக களமிறங்கி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது நாள் ஆட்டத்தில் களத்தில் நாயகனாக ஜொலித்த அவர், 235 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் ஷர்மா 35, புஜாரா 42 ரன்கள் எடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்திருந்தது. விராத் கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியாவை காட்டிலும் 191 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. கூடுதலாக 20 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் கோலி - ஜடேஜா இணை பிரிந்தது. ஜடேஜா 28 ரன்களில் வெளியேறியபோது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.
இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணிக்கு கைகொடுக்க, தாம் களத்தில் நிலைத்து நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு அவருடன் கைகோர்த்த ஸ்ரீகர் பாரத் சற்று அதிரடி காட்ட, கோலி நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 241 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 28வது சதமாக அமைந்தது.
அவரது முந்தைய சதம் 2019ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக வந்தது. இளஞ்சிவப்பு நிற பந்துகளைப் பயன்படுத்தி இந்தியாவில் நடைபெற்ற முதல் போட்டி என்ற சிறப்புக்குரிய அந்த ஆட்டத்தில் கோலி 136 ரன்களை விளாசியிருந்தார்.
அதன் பிறகு டெஸ்ட் மட்டுமின்றி, ஒருநாள், இருபது ஓவர் போட்டி என அனைத்து வகை கிரிக்கெட்டிலுமே பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் அவர் தவித்து வந்தார். குறிப்பாக மூன்று இலக்க எண்ணை எட்ட முடியாமல் அவர் தடுமாறியதைக் கண்டு ரசிகர்கள் வேதனைப்பட்டனர்.
ஒருவழியாக, இருபது ஓவர் கிரிக்கெட்டில் தமது முதல் சதத்தை அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளாக நீடித்த தாகத்தை அவர் தணித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த சதத்தை அவர் அடித்தார்.
அதன் பிறகு, உலகக்கோப்பை இருபது ஓவர் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கோலி, அதே ஃபார்மை ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்தார். நான்கே போட்டிகளில் 3 சதங்களை அடித்து அவர் அசத்தினார்.
இருபது ஓவர், ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் கண்ட விராட் கோலி, அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நம்பிக்கை தரும் வகையில் தொடங்கிய அவர், அடுத்து வந்த இரு போட்டிகளிலும் சறுக்கினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தப் போட்டியை குறைந்தபட்சம் டிராவாவது செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்திய அணிக்கு கடைசிப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
வழக்கம் போல், முக்கியமான ஆட்டங்களில் நெருக்கடியான கட்டத்தில் கை கொடுக்கும் விராட் கோலி இம்முறையும் அதைச் செய்ததோடு, தன்னுடைய டெஸ்ட் சதத்திற்கான தாகத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
கோலியை ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடும் ஆர்.சி.பி. அணியும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 1,205 நாட்கள் அதாவது சுமார் 40 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் இந்த சதத்தை அடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு டெஸ்டில் 50 ரன்களுக்கு மேல் அவர் குவித்திருப்பதும் இப்போதுதான். முன்பு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 79 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
27வது சதத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை 3 இலக்க ரன்களை பெற அவருக்கு 41 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளன. இந்த இரு சதங்களுக்கும் இடையே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2,633 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
இரு சதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோலியின் டெஸ்ட் ரன் சராசரி 25.70 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு சவாலாகத் திகழும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 53, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 56, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 48 என்கிற சராசரியில் ரன் சேர்த்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மட்டும் ஜோ ரூட் 13 சதங்களை விளாசி கோலியை முந்தி 29 சதங்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். அதாவது, 2019ஆம் ஆண்டு நவம்பரில் 16 சதங்களுடன் இருந்த ஜோ ரூட் தற்போது 29 சதங்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.
இரு சதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது ரன் சராசரி 6.85 ரன்கள் குறைந்துள்ளது.
டெஸ்டில் 28, ஒருநாள் போட்டிகளில் 46, இருபது ஓவர் ஆட்டங்களில் 1 என சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 75 சதங்களை கோலி விளாசியுள்ளார். 46 வெவ்வேறு மைதானங்களில் இந்த சதங்கள் வந்துள்ளன. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் கண்டுள்ள ஜாம்பவான் சச்சின் மட்டுமே 53 இடங்களுடன் கோலியை விஞ்சி நிற்கிறார்.
குறைந்த போட்டிகளில் 75 சதங்களை விளாசியவர் என்ற பெருமை விராட் கோலியையே சேரும். இந்த மைல்கல்லை அவர் 552 போட்டிகளில் எட்ட, சச்சினோ 566 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் 50வது டெஸ்டில் சதம் விளாசியதை அப்படியே விராட் கோலியும் செய்திருக்கிறார். ஆனால், அது கவாஸ்கருக்கு உள்நாட்டில் 14வது சதமாக அமைந்தது. கோலிக்கோ உள்நாட்டில் இது 13வது சதம். இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 சதங்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இந்திய மண்ணில் 4 ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலிதான். 58.82 ரன் சராசரியுடன் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், ராகுல் டிராவிட் (88), கவாஸ்கர் (87) ஆகியோரை விஞ்சி குறைந்த இன்னிங்ஸ்களில் இதைச் சாதித்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
லாராவை முந்தி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை கோலி பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களுடன் 6,707 ரன்கள் குவித்து இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்