You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கை தமிழில் நடத்த அரசு அனுமதிக்காதது ஏன்? - பின்னணி என்ன?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
மேற்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா, வரும் பிப்ரவரி 10 அன்று நடக்கவுள்ள நிலையில், அதனை தமிழில் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
அந்த கோரிக்கையை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஏற்க மறுத்துள்ளது.
இதற்காக எடுக்கப்பட்ட சட்டரீதியான முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், 'தமிழில் மட்டும் குட முழுக்கு நடத்த முடியாது; தமிழிலும் நடத்தப்படும்' என்று துறை அமைச்சர் சேகர்பாபு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் குடமுழுக்கு விழா, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது.
கடந்த 3-ஆம் தேதியன்று குடழுக்கு விழா நிகழ்வுகள், சிறப்பு பூஜையுடன் துவங்கின. பிப்ரவரி 7- ஆம் தேதி காலையிலிருந்து முதற்கால யாகபூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்காக 60 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 30 யாகசாலைகளை ஒதுக்கி, தமிழிலும் மந்திரங்களை ஓதி தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று, பல்வேறு அமைப்புகளும் கடந்த சில நாட்களாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
- வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு - ஷேக் ஹசீனா கூறியது என்ன?
- உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?
- மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்?
- குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? ஓர் அலசல்
சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கோவிலின் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதத்தைத் துவக்கினர்.
காவல் துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் அதைக் கைவிட்டனர். அதன்பின் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்பாகவும் பேச்சு வார்த்தைகள் நடந்தன.
தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டுமென்று பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும் வலியுறுத்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
''பேரூர் திருத்தலத்தில் பட்டிமுனி, கோமுனி, காளவன், காமதேனு, நாரதர் என எல்லோரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி வழிபட்டு வந்துள்ளனர். சுந்தரர் காலத்திலும் கூட, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வழிபட்டதாக பேரூர் புராணத்தில் கூறப்படவில்லை. அப்போதே எல்லோரும் சமமாக வழிபாடு நடத்தியுள்ளனர். இப்போதும் அதே சம உரிமை தரப்பட வேண்டும்'' என்று பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கூறினார்.
''தமிழ் அமைப்புகளின் கோரிக்கைகளையும், சைவ சமயப் பெரியோர்களின் வேண்டுகோளையும் ஏற்று, பேரூர் பட்டீசுவரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவில் அமைக்கப்படும் 60 யாகசாலைகளில் 30 இடங்களை தமிழுக்கு ஒதுக்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால், இந்த போராட்டத்தைத் தொடர்வதாக தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். எனவே ஓர் இக்கட்டான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டாம்.'' என்றார் மருதாசல அடிகளார்.
புராணச் சிறப்பு மிக்க பேரூர் கோவில்
கோவை நகருக்கு அருகில் உள்ளது பேரூர். நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புராணச்சிறப்பு மிக்க ஊராகவுள்ள பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாக போற்றப்படுகிறது.
''இங்கு பட்டீசுவரர் என்ற பெயரில் சிவன், பச்சை நாயகியை துணையாகக் கொண்டு வீற்றிருப்பதாக'' சொல்கிறது பேரூர் புராணம்.
கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் பாடியபடியும், சோழன் பூர்வ பட்டயத்தின்படியும், இந்த கோவிலுக்கு இரு வேறு வரலாறுகள் இருப்பதாகச் சொல்கிறது வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவனின் 'கோயமுத்துார்–ஒரு வரலாறு' புத்தகம்.
இந்த கோயில் உள்ள புளிய மரமும், பனை மரமும் தனித்துவம் வாய்ந்தாதாக மக்கள் கருதுகின்றனர் என்கிறார் இளங்கோவன்.
இக்கோவிலுக்கு அருகிலுள்ள புளிய மரத்தின் விதைகளைப் போட்டால் அது முளைப்பதில்லை என்பதால் அது பிறவாப்புளி என்றும், வடகயிலாயர் கோவிலுக்கு அருகிலுள்ள பனை மரம் பல நுாற்றாண்டாக இறவாமல் இருப்பதால் இறவாப்பனை என்றும் அழைக்கப்படுகின்றன. அதே போல் பேரூர் முத்தித்தலமாக இருப்பதாகவும், அங்கு பிறப்பவர்களுக்கு அடுத்த பிறப்பில்லை என்பதை பிறவாப்புளியும், பேரூரில் வாழ்வோர் இறவாத புகழுடம்பு எய்துவர் என்பதை இறவாப்பனை உணர்த்துவதாகவும் பேரூர் புராணத்தில் விளக்குவதாகச் சொல்கிறார் இளங்கோவன்.
ஆகம விதிப்படி நடத்துமாறு மறு தரப்பு மனு
கோவையின் பழமையான மடாலயங்களில் ஒன்றாக விளங்கும் பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தின் சார்பில் கடந்த 1953 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கல்லுாரி நடத்தப்படுகிறது.
தற்போது இந்த மடத்தின் ஆதீனமாகவுள்ள மருதாசல அடிகளார், தமிழக அரசின் அறநிலையத்துறையின் உயர் நிலைக்குழு உறுப்பினராகவுள்ளார்.
மேற்கு மண்டலத்திலுள்ள பல கிராமங்களில் உள்ள கோவில்களில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையில் தமிழில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் 1954-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் வழிபாடு துவக்கப்பட்டது. பல கோவில்களின் திருக்குட நன்னீராட்டு விழா பேரூர் சிரவை ஆதீனங்களால் தமிழில் நடத்தப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்ட பேரூர் ஆதீனம், வடமொழிக்கு இணையாக தமிழுக்கும் அங்கீகாரம் அளித்து திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திலும் கூட, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு முன்பாகவே, தமிழ் அமைப்புகளின் சார்பில், சுரேஷ் பாபு என்பவர், கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியன்றே, அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு மனுவை அளித்துள்ளார்.
அதில் பேரூர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆறு கால பூசனைகள், வேள்வி குண்டங்களில் பூசனைகள் நடத்துவதற்கு தமிழ் வழிபாட்டாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். தமிழில் குடமுழுக்கு நடத்தும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென்று நீதிமன்ற ஆணையையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தை வலியுறுத்தி, உலகத் தமிழ் காப்பு கூட்டியக்கம், சத்தியபாமா அறக்கட்டளை சார்பிலும் கடிதம் தரப்பட்டது.
அந்த மனுவின் அடிப்படையில், கோவையில் அறநிலையத்துறை அதிகாரிகளால், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று விசாரணை நடத்தப்பட்டது.
கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், யாகசாலை அமைப்பது தொடர்பாக சிவாச்சாரியார்களிடம் கருத்துப் பெறப்பட்டு, 55 குண்டங்கள், 23 வேதிகைகள், 6 வேள்விச்சாலைகளை உள்ளடக்கி யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1961, 1976, 1996 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நடந்த குட முழுக்கு விழாக்கள், திருக்கோவிலின் ஆகம விதிப்படியும், பழக்க வழக்கங்களின்படியும் யாகசாலைகள் அமைத்து நடத்தப்பட்டதாக உதவி ஆணையர் தரப்பில் விளக்கப்பட்டது.
தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து, திருக்கோவிலின் சிவாகமம் முறைப்படியும், அறநிலையத்துறை கோவில்களில் பயிற்சி பெற்ற சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களைக் கொண்டு திருக்குட முழுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
நிராகரிப்புக்கு அறநிலையத்துறை கூறும் காரணங்கள்!
இதற்கு மறுநாள் பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, ஆகம விதிப்படியே குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தும் பலரும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், ''பட்டீசுவரர் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களின்படி, யாகசாலையில் யாககுண்டங்களை சமபாகங்களாகப் பிரித்து தமிழில் நடத்திட அனுமதி கோரும் மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்பதால் நிராகரிக்கப்படுகிறது.'' என்று அறநிலையத் துறையின் இணை ஆணையர் ரமேஷ் 6 ஆம் தேதி ஒரு செயல்முறை ஆணையை வெளியிட்டார்.
யாகசாலைகளில் சமபங்கு என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் அந்த செயல்முறை ஆணை, ''கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகமங்களில் குறிப்பிட்ட மொழியில்தான் வழிபாடு செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை. இறைவனை அவரவர் தாய்மொழியில் வழிபடுவது சிறப்பானது. எந்த மொழியும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று வேறுபாடு இல்லை. சமயக்குரவர்கள் நால்வரும் நாயன்மார்களும் தமிழ் பாக்கள் பாடியே இறைவனை வழிபட்டுள்ளனர். தற்போதும் திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் காலபூஜைகளின்போது, ஓதுவார்கள் தமிழ் திருமறைகள் பாடுவது வழக்கத்தில் உள்ளது. எனவே, யாகசாலையின்போது, தமிழில் வழிபாடு செய்வது ஏற்புடையது. ஆனால் யாக குண்டங்களை இரு மொழிகளிலும் வழிபாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல.'' என்று கூறியிருந்தது.
தமிழில் திருமறை ஓதுவதற்கு தனிஇடம் ஒதுக்க உத்தரவு!
அதற்குப் பதிலாக, திருக்கோவில் யாகசாலையில் பூஜை நடைபெறும் காலங்களின் போது, வேதங்கள் மற்றும் தமிழில் திருமுறைகளை ஓதிட தனியாக இடத்தினை ஒதுக்கீடு செய்யவும், தனித்தனியாக உரிய கால நேரம் ஒதுக்கீடு செய்திடவும் உதவி ஆணையருக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் இணை ஆணையர் தன் ஆணையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செயல்முறை ஆணை வந்ததும், தமிழ் அமைப்பினர் பலரும் யாகசாலை மண்டபத்துக்கு வெளியே அமர்ந்து கோஷங்கள் எழுப்பத் துவங்கினர்.
அவர்களை போலீசார் வந்து அப்புறப்படுத்தினர். அதன்பின், இந்த ஆணையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தவும், நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.
ஏற்கெனவே இதேபோல தமிழில் குட முழுக்கு நடத்தக்கோரி, நீதிமன்றத்தில் ஆணை பெற்றதாக கூறுகிறார் மூங்கில் அடியார் எனப்படும் பொன்னுசாமி.
''கரூர் பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கின்போது, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் என்ற முறையில் நான் வழக்குத் தொடுத்தேன். அதில் நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர், குட முழுக்கை தமிழில் நடத்த வேண்டும் அல்லது தமிழுக்கு சமபங்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல இப்போதும் பேரூர் கோவில் குட முழுக்கில் சமபங்கு அளிக்க வேண்டுமென்றே கோருகிறோம்.'' என்றார் அவர்.
மேலும், யாகசாலை, கலசம் மற்றும் கருவறையில் புனித நீர் ஊற்றும் 3 நிகழ்வுகளிலும் தமிழிலும் மந்திரங்கள் ஓத அனுமதிக்க வேண்டுமென்பதே தங்கள் கோரிக்கை என்றார்.
யாகசாலையில் பாதி ஒதுக்காவிட்டால், அவர்கள் சமஸ்கிருதத்தில் யாகம் நடத்துவதற்கு முன்போ, பின்போ அதே யாகசாலைகளில் தமிழில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதாகவும் பொன்னுசாமி தெரிவித்தார்.
இதற்கு மாறாக, வாத்தியங்கள் ஓதுமிடத்தில் தமிழில் ஓத இடம் கொடுத்து, அதை ஒலிபெருக்கியில் ஒலி பரப்ப ஏற்பாடு செய்கின்றனர் என்று கூறிய அவர், ''அதை வெளியில் ஒலிக்கச் செய்வதால் தமிழில் நடத்துவதாக வெளியில் காண்பிக்கின்றனர்'' என்று குற்றம் சாட்டினார்.
அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழ் வழிபாட்டாளரை வைத்தே இதை நடத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் சார்பில் அருளாணை வேட்டல் பூசை என்ற பெயரில், கையில் பதாகைகளை வைத்து, கோவில் வளாகத்திலேயே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு புறத்தில்,சில கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடத் தமிழர் கட்சி மற்றும் பல அமைப்பினர் பங்கேற்றனர்.
அதில் பேசிய பலரும், தமிழில் ஓதுவதற்கு தனியிடம் ஒதுக்குவதை ஏற்க முடியாது என்றும், யாகசாலையில் தமிழுக்கு சமபங்கு தர வேண்டுமென்றும் வலியுறுத்திப்பேசினர்.
இதற்கிடையில், யாகசாலையில் பங்கு இல்லை என்ற ஆணையை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ''இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் குடமுழுக்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்ட நிலையில், இப்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதனால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.'' என்று தெரிவித்து விட்டதாக வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பேரூர் பட்டீசுவரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''நீதிமன்றத்தில் தமிழிலும் நடத்த அனுமதிக்க வேண்டுமென்றுதான் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமே நடத்த வேண்டுமென்று நீதிமன்ற ஆணை பெற்றிருந்தால் அதைச் செயல்படுத்தத் தயார். பேரூரில் தமிழில் மட்டும் குட முழுக்கை நடத்த முடியாது. தமிழிலும் நடக்கும்.'' என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன் ஆகியோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு வரும் முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல் முறையீடு செய்யப்பட்டு அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. சமஸ்கிருதத்தை தேவமொழி என்று நம்பும் சங்கப்பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால் தமிழ்–தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.'' என்று கூறியிருந்தார்.
தமிழ் அமைப்புகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குடமுழுக்கு நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், யாகசாலை மற்றும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)