You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு அதிபர் முய்சு பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் பதவி நீக்க தீர்மானம் - 'இந்தியா' காரணமா?
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. அதிபராக பதவியேற்ற மூன்றே மாதங்களில் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான 'மாலத்தீவு ஜனநாயகக் கட்சி', பிரதமர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர தயாராகி வருகிறது.
அக்கட்சியின் நாடாளுமன்ற துணைத் தலைவர் அந்துன் ஹுசைன் ’தி இந்து’ நாளிதழிடம் கூறுகையில், தீர்மானத்திற்கு ஆதரவான எம்.பிக்களின் எண்ணிக்கை தங்களுக்குச் சாதகமாக உள்ளன என்றார்.
நான்கு புதிய அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு ஜனவரி 28 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
முய்சுவுக்கு எதிரான இந்த பிரச்னை எழுந்துள்ள நேரம், பல வழிகளில் முக்கியமானதாக உள்ளது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. மாலத்தீவு அதிபராக முகமது முய்சு தலைமையேற்றதிலிருந்து அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
இந்தியா மீதான முகமது முய்சு அரசாங்கத்தின் அணுகுமுறையை மாலத்தீவு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
தேர்தல் பிரசாரத்தில் 'இந்தியாவை வெளியேற்றுவோம்' (India Out) என்ற முழக்கத்துடன் அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு சில நாட்களுக்கு முன்பு கெடு விதித்திருந்தது.
இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோதி லட்சத்தீவு சென்றதையடுத்து, சமூக வலைதளங்களில் மாலத்தீவு புறக்கணிப்பு பிரசாரம் தொடங்கப்பட்டது.
'இந்தியா' காரணமா?
முகமது முய்சு அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
"அதிபர் தனது கொள்கைகளால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை ஆபத்தை நோக்கி தள்ளுகிறார்" என்று மாலத்தீவு ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற துணைத் தலைவர் அந்துன் ஹுசைன் ’தி இந்து’விடம் கூறினார். ராணுவத்தின் உதவியையும் பணத்தையும் பயன்படுத்தி, நாட்டின் நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட விடாமல் செய்து வருகின்றார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தம் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 42 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
13 இடங்களைக் கொண்ட ஜனநாயகவாதி கட்சியினரும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கு இதில் ஆதரவளித்துள்ளனர்.
அரசியல் எதிரிகளாக இருக்கும் இந்த இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையே இதுதொடர்பாக சந்திப்பு நடைபெற்றது.
ஒரே இலக்கை அடையும் நோக்கத்தில் அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்வதுதான் அந்த இலக்கு.
மாலத்தீவின் பழமையான கூட்டாளியை (இந்தியா) அந்நியப்படுத்தியதற்காக முகமது முய்சுவை விமர்சித்து மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் ஜனநாயகவாதிகள் கட்சியினர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்தக் கட்சிகளின் திசை இந்தியாவை நோக்கியே உள்ளது. கடந்த காலங்களில், இந்த கட்சிகள் மாலத்தீவில் ஆட்சியில் இருந்தபோது, 'இந்தியா ஃபர்ஸ்ட்’ (India First) எனப்படும் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை பின்பற்றி வந்தனர்.
முய்சு சீனாவின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார். ஆனால், `இந்தியா ஃபர்ஸ்ட்`, `சீனா ஃபர்ஸ்ட்` என்பதற்குப் பதிலாக `மாலத்தீவு ஃபர்ஸ்ட்` என்று முய்சு பேசி வருகிறார்.
இந்தியாவுக்கு மாலத்தீவு எதிர்ப்பு
இந்தாண்டின் தொடக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயண படங்கள் குறித்து, முய்சு அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தபோது, மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவை ஆதரித்தனர்.
ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களை இடைநீக்கம் செய்தால் போதாது என, மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர்கள் அப்போது கூறியிருந்தனர். இந்தியாவிடம் அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கிடையில், மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த குறைந்தபட்சம் 12 எம்.பி.க்கள் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளதால் அக்கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் மார்ச் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தல் முகமது முய்சுவுக்கு கடும் சோதனையாக இருக்கும். கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் சட்டங்களை இயற்றவும் நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியம்.
அந்துன் ஹுசைன் தி இந்து நாளிதழிடம் கூறுகையில், "தேர்தலுக்குப் பிறகு எப்போது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவோம் என்பது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.
மேலும், "நாம் புவியியலை மாற்ற முடியாது. சீனாவை நமக்கு நெருக்கமாக கொண்டுவர முடியாது. இந்தியா நமது அண்டை நாடு, நட்பு நாடு மற்றும் நம்முடைய குடும்பம் போன்றது. மருந்தோ உணவோ, எதுவாக இருந்தாலும் இந்தியா இல்லாமல் நாம் இருக்க முடியாது. அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுவதால் தான், எங்களால் நிம்மதியாக வாழ முடிகிறது" என அவர் தெரிவித்தார்.
முகமது முய்சு சீனாவிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிப்பதாகத் தெரிகிறது.
முய்சு அதிபராகக பதவியேற்ற பின்னர் தனது முதல் அரசு பயணமாக சீனாவுக்கு சென்றார். ஆனால், வழக்கமாக புதிய மாலத்தீவு அதிபராக பதவியேற்கும் தலைவர்கள் முதலில் இந்தியாவுக்கு வருவதே வழக்கம்.
இந்தியா - மாலத்தீவு இடையே என்ன நடந்தது?
- நவம்பர் 2023-ல் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முகமது முய்சு ஆட்சி அமைத்தார்.
- அதிபராகி பணிகளை தொடங்கிய முதல் நாளிலேயே மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, முகமது முய்சு இந்தியாவிடம் வலியுறுத்தினார்.
- முகமது முய்சு நவம்பர் இறுதியில் துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்தார்
- முகமது முய்சு டிசம்பர் 1, 2023 அன்று துபாயில் பிரதமர் மோதியை சந்தித்தார்
- ஜனவரி 2024 முதல் வாரத்தில், பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு பயணம் செய்தார். முய்சு அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரதமர் மோதியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
- இந்திய நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களை முய்சு அரசாங்கம் இடைநீக்கம் செய்தது. ஆனால், இந்த நடவடிக்கை போதாது என எதிர்க்கட்சிகள் கூறியது.
- ஜனவரி 8-ம் தேதி, முகமது முய்சு சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, திரும்பி வந்தவுடன், ‘நாங்கள் ஒரு சிறிய நாடு என்பதாலேயே எங்களை அச்சுறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை` என்றார்.
- இந்திய வீரர்கள் மார்ச் 15-க்குள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசாங்கம் ஜனவரி 14 அன்று இந்தியாவுக்கு காலக்கெடு விதித்தது.
- ஜனவரி 28 அன்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏன்?
மாலத்தீவில், மாலத்தீவின் முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
அக்கூட்டணி அரசு, அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்களை சேர்க்க விரும்பியது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விரும்பவில்லை.
மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, அமைச்சரவையில் வாக்களிப்பதற்கு முன் நான்கு அமைச்சர்களை நியமிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை நிறுத்த முடிவு செய்தது.
அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் கோரப்பட்ட நான்கு உறுப்பினர்கள்
- அரசு வழக்குரைஞர் அகமது உஷாம்
- வீட்டு வசதி, நிலம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் டாக்டர் அலி ஹைதர்
- இஸ்லாமிய விவகார அமைச்சர் முகமது ஷஹீம் அலி சயீத்
- பொருளாதாரம், வர்த்தக மேம்பாட்டு விவகாரங்கள் அமைச்சர் முகமது சயீத்
எனினும் வாக்குப்பதிவு நடைபெற்ற போது முகமது சயீத்துக்கு ஆதரவாக 37 வாக்குகள் பதிவாகின. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு 35 வாக்குகள் தேவை.
அரசு வழக்குரைஞர் அகமது உஷாமுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
டாக்டர் அலி ஹைதருக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஷஹீமுக்கு ஆதரவாக 30 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் பதிவாகின.
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு ஏற்பட்டதில் ஷஹீம் காயமடைந்தார்.
பாதுகாப்பு அமைச்சர் முகமது கசைன் மற்றும் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் ஆகியோர் தெரியப்படாத வாக்குகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டனர்.
முகமது முய்சுவின் அமைச்சரவையில் உள்ள 22 உறுப்பினர்களில் 19 பேர் ஒப்புதல் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
மாலத்தீவின் ஊடக அமைப்பான `தி எடிஷன்` அறிக்கையின்படி, நாட்டின் அரசியலமைப்பின் 129-வது பிரிவு, அமைச்சரவை நியமனம் செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இருப்பினும், ஒப்புதல் பெறப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது எந்த சட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதிபர் இதுதொடர்பாக முடிவெடுத்தாலோ அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சரே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தாலோ மாத்திரமே அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாவிட்டால், அந்த நபரை மீண்டும் அப்பதவிக்கு நியமிக்க முடியாது என்ற சட்டப்பூர்வ விதிகள் எதுவும் இல்லை என்று மக்கள் தேசிய காங்கிரஸின் தலைவரும் அதிபரின் சிறப்பு ஆலோசகருமான அப்துல் ரஹீம் அப்துல்லா கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)