'சிஎம் சார்... என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால்' - மௌனம் கலைத்த விஜய்
'கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்' என கரூர் நெரிசல் சம்பவம் வீடியோ மூலம் விஜய் பேசியுள்ளார்.
சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மூன்று தினங்கள் கழித்து, இதுதொடர்பாக விஜய் சமூக ஊடங்களில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
அதில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என விஜய் பேசியுள்ளார்.
இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார்.
மேலும் விஜய் என்ன பேசினார்? காணொளியில்...
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
என்ன நடந்தது?
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



