வல்லரசுகள் வரிசையில் இந்தியா: ரயிலில் இருந்து அணு ஆயுத ஏவுகணையை செலுத்தியதன் 5 சிறப்புகள்

AGNI PRIME

பட மூலாதாரம், ANI

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும்.

இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும்.

இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது.

இந்த சோதனை ஏன் முக்கியம் என்பதற்கான ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

1. இந்தியாவுக்கு இது ஏன் சிறப்பு வாய்ந்தது?

இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது. பிபிசி நிருபர் அபய் குமார் சிங் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவுடன் பேசினார்.

சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-பிரைம் ரயில் நெட்வொர்க் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய வெற்றி." என்றார்.

இந்த ஏவுகணை இரண்டு நிலைகளை கொண்டது, திட எரிபொருள் அடிப்படையிலான தரையிலிருந்து தரையில் மற்றொரு இலக்கை தாக்கும் ஏவுகணை என்று அவர் கூறினார். இது ஒரு கானிஸ்டர் (canister) அமைப்பிலிருந்து விரைவாக ஏவப்படலாம். (கானிஸ்டர் என்பது ஒரு சீல் செய்யப்பட்ட, உருளை வடிவிலான கொள்கலன் – இது ஏவுகணையை வைத்துக் கொள்ளவும், ஏவவும் உதவும். )

ரயிலில் இருந்து ஏவப்படுவதால், இந்த அமைப்பை அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "எங்கெல்லாம் ரயில் நெட்வொர்க் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதை எளிதாக பயன்படுத்த முடியும், எதிரியின் எந்த இருப்பிடத்தையும் குறிவைக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.

இதன் காரணமாக, இது இந்தியாவுக்கு உத்தி ரீதியாக மிகுந்த வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

2. எந்தெந்த நாடுகள் ஏற்கனவே இதைச் செய்துள்ளன?

இந்த சாதனைக்குப் பிறகு, உலகின் குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், "இந்த வெற்றிகரமான சோதனை ரயில் நெட்வொர்க்கில்கானிஸ்டர் ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தும் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

'ஏவூர்தி நேரடியாக ரயில் தண்டவாளங்களில் இயங்க முடியும், முன் தயாரிப்பு தேவையில்லை, அதை நாடு முழுவதும் எளிதாக கொண்டு செல்ல முடியும்' என்றும் அவர் விளக்கினார்.

இது குறுகிய காலத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனையும் கொண்டுள்ளது, அதே நேரத்தில் எதிரியின் பார்வையில் படாமல் இதனை செய்ய முடியும்.

"இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த திறனைக் கொண்டுள்ளன. வட கொரியாவும் இதைச் செய்ததாகக் கூறியுள்ளது, ஆனால் அதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா சுட்டிக்காட்டுகிறார்.

AGNI PRIME

பட மூலாதாரம், X/@rajnathsingh

3. அக்னி-பிரைம் ஏவுகணையின் அம்சங்கள்

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்னி-பிரைம் ஏவுகணை அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது 2000 கி.மீ. வரை இலக்குகளை தாக்கும், எதிரியின் கண்களுக்கு புலப்படாமல் மிக விரைவாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை முற்றிலும் தன்னிறைவு பெற்ற அமைப்பாகும், இதில் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அமைப்புகளும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

இந்த சோதனை முழுமையான வெற்றி பெற்றதாகவும், அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஏவுகணையின் பாதை பல்வேறு கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது.

இந்த வெற்றி எதிர்காலத்தில் ராணுவ சேவைகளில் ரயில் அடிப்படையிலான அமைப்புகளை இணைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு சாலையிலிருந்து ஏவப்படும் அக்னி-பிரைம் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AGNI PRIME

பட மூலாதாரம், ANI

4. தண்டவாளம் சார்ந்த ஏவுதல் அமைப்பின் முக்கியத்துவம்

தண்டவாளம்-சார்ந்த ஏவுதல் அமைப்பு பல வகையில் பயனளிக்கிறது. ரயில்‌ போன்ற ஒரு ஏவூர்தியிலிருந்து எந்த தண்டவாளத்திலும் நின்றபடி ஏவுகணையை செலுத்த முடியும்.

இது குறித்து, முன்னாள் ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) ஸ்ரீபிரகாஷ் பிபிசி நிருபர் சந்தன் ஜஜ்வரேவிடம், "நாட்டில் எங்கும் ரயில் தண்டவாளங்கள் உள்ளன. இதன் பொருள், ஏவுகணையை நாடு முழுவதும் இருந்து ஏவுவதற்கான சாத்தியம் உருவாகிவிட்டது. எதிரியால் ஏவுகணை எங்கிருந்து ஏவப்படும் என்பதை விரைவாக அறிந்துகொள்ள முடியாது." என்று தெரிவித்தார்.

இவ்வாறான அமைப்பு, எதிரியால் அடையாளம் காணக்கூடிய நிரந்தர ஏவுதளங்களிலிருந்து வேறுபட்டது. "ஏவுகணைகளை சுரங்கப்பாதையில் மறைத்து வைக்கலாம், தேவைப்படும் போது வெளியே கொண்டு வந்து ஏவ முடியும்" என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், ஏவுதல் நடக்கும் வரை அந்த தண்டவாளத்தில் சாதாரண ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மின்வசதி குறித்த கேள்விக்கு, மின்சாரம் தடைப்பட்டால் டீசல் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என ஸ்ரீபிரகாஷ் தெளிவுபடுத்தினார்.

"இரயில் பாதைகளில் டீசல் இயந்திரங்களும் இருக்கும். டீசல் இயந்திரங்கள் மின்சாரத்தைச் சார்ந்து இல்லை, அவற்றை எங்கும் இயக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், டீசலைப் பயன்படுத்துவது மிகவும் சாதகமானது" என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

5. டிஆர்டிஓவிற்கு பெரும் வெற்றி

இந்த சாதனை இந்தியாவின் சுய-சார்பை நோக்கிய முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

இந்த வெற்றியால், தண்டவாளத்தில் நகரும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

"டிஆர்டிஓ தொடர்ச்சியாக பெரிய வெற்றிகளை அடைந்து வருகிறது. இந்த ஏவுகணை அந்த வெற்றிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கு பெருமையான விஷயம்" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இந்தியா இப்போது தனது ராணுவத்திற்கான மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிகளையும் ஊக்குவித்து வருகிறது என்றும் அவர் கூறினார். "அது ஏவுகணைகளாக இருந்தாலும் சரி, போர் விமானங்களாக இருந்தாலும் சரி, பல நாடுகள் இந்திய தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு