ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கிய பயணம்

பட மூலாதாரம், NASA
- எழுதியவர், பல்லப் கோஷ் & ஆலிசன் ஃபிரான்சிஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவை நோக்கி பயணிக்கும் திட்டத்தை மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாசா ஏவக்கூடும்.
சுமார் 10 நாட்கள் நீடிக்கும் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம், அதன் விண்வெளி வீரர்களை இதுவரை எவரும் சென்றிராத தூரத்திற்கு விண்வெளியில் அழைத்துச் செல்லும்.
1960கள் மற்றும் 70களின் அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தரையிறங்குவதற்கான ஒரு தளத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ்-2 எப்போது ஏவப்படும்?
மிகச் சமீபத்தில் சாத்தியப்படக்கூடிய ஏவுதல் தேதி மார்ச் 6. அந்த மாதத்தின் முதல் பாதியில் மேலும் நான்கு வாய்ப்புகளும், ஏப்ரல் முதல் வாரத்தில் ஐந்து கூடுதல் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன:
- மார்ச்: 6, 7, 8, 9 & 11
- ஏப்ரல்: 1, 3, 4, 5 & 6
பிப்ரவரியில் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறு, 'வெட் டிரஸ் ரிஹர்சல்' எனப்படும் ஏவுதலுக்கு முந்தைய சோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. ஏவுதள கோபுரத்தை ராக்கெட்டுடன் இணைக்கும் உம்பிலிகல் இணைப்பிலிருந்து ராக்கெட் எரிபொருள் கசிந்ததால் இந்தச் சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதைத் தாண்டி, நிலவு அதன் சுற்றுப்பாதையின் பொருத்தமான பகுதியில் இருக்கும் வரை திட்டமிடுபவர்கள் காத்திருக்க வேண்டும். எனவே ஏவுதலுக்கான காலம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றன.
நடைமுறையில், இது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ராக்கெட்டை சரியான திசையில் செலுத்தக்கூடிய சுமார் ஒரு வார காலத்தையும், அதைத் தொடர்ந்து ஏவுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சுமார் மூன்று வார காலத்தையும் உருவாக்குகிறது.
ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர் யார்?
ஆர்ட்டெமிஸ்-2வின் நான்கு பேர் கொண்ட குழுவில் நாசா கமாண்டர் ரெய்ட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது திட்ட நிபுணராக கனேடிய விண்வெளி முகமையின் ஜெரிமி ஹன்செனும் இதில் இருப்பார்.
அமெரிக்க கடற்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த வீரரான வைஸ்வேன், ஒரு விமானி மற்றும் பொறியாளர். அவர் மேரிலாந்தின் பால்டிமோரில் வசிக்கிறார். அவர் 2009இல் நாசாவால் விண்வெள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014இல் எக்ஸ்பெடிஷன் 41 திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் விமானப் பொறியாளராகப் பணியாற்றினார்.
க்ளோவர், 2013இல் நாசா விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-1 திட்டத்தின் விமானியாகப் பணியாற்றினார். அவர் மூன்று முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார். கலிஃபோர்னியாவில் பிறந்த அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.
மிச்சிகனில் வளர்ந்தவரான கோச், 2013இல் விண்வெளி வீரர் ஆனார். அவர் 2019இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றினார். ஒற்றை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் முற்றிலும் பெண்களைக் கொண்ட முதல் விண்வெளி நடையிலும் பங்கேற்றார்.
ஹன்சென் போர் விமானியாகப் பணியாற்றிய பிறகு 2009இல் கனேடிய விண்வெளி முகமையில் சேர்ந்தார். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தலைமை தாங்கிய முதல் கனேடியரான இவர்தான், நிலவு பயணத்தில் இடம்பெறும் முதல் கனேடியரும்கூட.
நிலவுப் பயணத்தின்போது ஆர்ட்டெமிஸ் குழுவினர் என்ன செய்வார்கள்?
நாசாவின் பிரமாண்டமான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் என்றழைக்கப்படும் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலன் ஆகியவற்றுடன் மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அவர்கள் பாதுகாப்பாக சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். நிலவில் தரையிறங்குவதற்குச் சாதகமான வகையில் விண்கலனை திருப்புவது மற்றும் வரிசைப்படுத்துவதை பயிற்சி செய்ய, பூமியின் சுற்றுப்பாதையில் ஓரியன் விண்கலனை கைமுறையாக (Manual) இயக்குவதும் இதில் அடங்கும்.

பின்னர் அவர்கள் ஓரியனின் உயிர் காக்கும் அமைப்பு, உந்துவிசை, சக்தி, வழிசெலுத்தல் அமைப்புகளைச் சரிபார்க்க நிலவுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குச் செல்வார்கள்.
குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவோராகவும் செயல்படுவார்கள். அவர்கள் தொலைதூர விண்வெளியில் இருந்து தரவுகள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார்கள்.
அவர்கள் எடையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் வேலை செய்வார்கள். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட கதிர்வீச்சு அளவு அங்கே அதிகமாக இருக்கும், ஆனால், அது பாதுகாப்பானதாகவே இருக்கும்.
பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியாக ஒரு கரடுமுரடான பயணத்தை எதிர்கொள்வார்கள். அதோடு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுவார்கள்.
ஆர்ட்டெமிஸ்-2 நிலவில் தரையிறங்குமா?
இல்லை. இந்தத் திட்டம் ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.
ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தை ஏவுவது 2028க்குள் நடைபெறும் என்று நாசா கூறுகிறது. ஆனால், நிபுணர்கள் இது மிகவும் சாத்தியமற்ற ஒரு காலக்கெடு என்கிறார்கள்.
விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் விண்கலன் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இது ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் லேண்டர் அல்லது ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் வடிவமைத்த விண்கலனாக இருக்கும்.
அமெரிக்க நிறுவனமான ஆக்சியம் தயாரிக்கும் புதிய விண்வெளி சீருடைகளும் இன்னும் தயாராகவில்லை.

ஆர்ட்டெமிஸ்-3 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்திற்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்களின் நீடித்த இருப்பைக் கொண்டிருப்பதே இதன் நோக்கமாகும்.
ஆர்ட்டெமிஸ்-4 மற்றும் 5 நிலவைச் சுற்றி வரும் கேட்வே என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கும். அதைத் தொடர்ந்து அதிக நிலவு தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படுவது, மேற்பரப்பில் செயல்படும் புதிய ரோபோடிக் ரோவர்கள் ஆகியவை இடம்பெறும்.
நிலவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கு மக்கள் வாழ்வதையும், வேலை செய்வதையும் தொடர்வதை உறுதி செய்வதற்குப் பல நாடுகள் ஈடுபடுத்தப்படும்.
நிலவுத் திட்டம் கடைசியாக எப்போது முன்னெடுக்கப்பட்டது?
கடைசியாக மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்ட திட்டம் அப்பல்லோ 17 ஆகும். இது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கியது, அந்த மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது.
ஒட்டுமொத்தமாக, 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர்தான் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். இவையனைத்தும் அப்பல்லோ திட்டத்தின்போது நடந்தவை. நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.
அமெரிக்கா முதலில் 1960களில் நிலவுக்குச் சென்றது. முதன்மையாக சோவியத் யூனியனை வீழ்த்தி தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டவே சென்றது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், அரசியல் ஆர்வமும் பொது மக்களின் ஈடுபாடும் குறைந்தன. அதோடு, எதிர்கால நிலவுத் திட்டங்களுக்கான நிதியும் குறைந்தது.
ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால், இந்த முறை புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நீண்டகால இருப்புக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் பிற நாடுகளுக்கு உள்ளதா?
மற்ற பல நாடுகள் 2030களில் மக்களை நிலவுக்கு அனுப்பும் லட்சியங்களைக் கொண்டுள்ளன.
ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிந்தைய ஆர்ட்டெமிஸ் திட்டங்களில் சேரவுள்ளனர், ஜப்பானும் இடம்பெறவுள்ளது.
சீனா தனது சொந்த விண்கலனை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் தரையிறக்கத்தை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
ரஷ்யா தொடர்ந்து விண்வெளி வீரர்களை மேற்பரப்புக்கு அனுப்பி 2030 மற்றும் 2035க்கு இடையில் ஒரு சிறிய தளத்தை உருவாக்குவது பற்றிச் சிந்தித்து வருகிறது. இருப்பினும், தடைகள், நிதி அழுத்தங்கள், தொழில்நுட்ப பின்னடைவுகள் காரணமாக அதன் கால அட்டவணை மிகவும் கடினமானது எனக் கருதப்படுகிறது.
இந்தியாவும் ஒரு நாள் தனது விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பதைக் காணும் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 2023இல் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3இன் வெற்றிகரமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா விண்வெளி ஆய்வு மையம் 2040க்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது அதன் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு அப்பால் நகர்த்துவதற்கான ஒரு முயற்சியின் பகுதியாகும்.
கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் & எமிலி செல்வதுரை
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












