You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள கோயிலில் வெடி விபத்து: 150 பேர் காயம், 8 பேர் கவலைக்கிடம் - என்ன நடந்தது?
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் தய்யம் விழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியில் உள்ள வீரர்காவு கோயிலில் தய்யம் நடன விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு பட்டாசுகள் வெடிக்கப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் எட்டு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.
விழா நடைபெற்ற வீரர்காவு கோவிலில் கொண்டாட்டங்களுக்காக பட்டாசுகள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோயிலில் இந்த ஆண்டின் களியாட்டம் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென பெரிய வெடி சத்தம் கேட்டது. அதன் பின் நெருப்பு பிழம்பு எழும்பியதை பார்த்தோம். எல்லாரும் வெவ்வேறு திசைகளில் சிதறி சென்றனர்.” என்று விபத்தை நேரில் பார்த்த நபர் உள்ளூர் ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார்.
கேரள காவல்துறை, வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய்கள், தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு 30 பேர் Aster MIMS என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையின் அவசர பிரிவுத் தலைமை மருத்துவர் ஜினேஷ் வீட்டிலாகத், “நோயாளிகள் வந்த உடனே அவர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டதால், அவர்களின் நிலையை சீராக வைக்க முடிந்தது. மேலும் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ஏன்.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
தீவிரமாக காயமடைந்தவர்களுக்கு தீக்காயம் 80% இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமும், பட்டாசுகளை வெடித்த இடமும் அருகருகே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
விபத்து குறித்த செய்திக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக காசர்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உன்னித்தன் தெரிவித்துள்ளார். “தய்யம் வட மலபார் பகுதியில் உள்ள மக்களின் பண்டிகையாகும். ஒவ்வொரு குடும்பமும் இதை கொண்டாடும். வீரர்காவு கோவிலில் இருந்து தான் தய்யம் நிகழ்வுகள் தொடங்கும். காவல்துறையினர் விழிப்பாக இல்லை என்பதும் விபத்துக்கு ஒரு காரணம்” என்று ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கே ஜே அல்போன்ஸ் கேரளாவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். “அதிக அளவிலான பட்டாசுகள் ஒரே இடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மிக அருகிலேயே பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. பட்டாசுகள் இருப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. மாநில அரசு, காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி இது” என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சம்பவம் நடந்த கோயிலில் ஆளும் கட்சியான சி பி எம் கட்சி தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)