You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிகர் ஷாஜி: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவி ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநரானது எப்படி?
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவருக்கு அடுத்ததாக, ஆதித்யா-எல்1 திட்டத்தின் இயக்குநரான நிகர் ஷாஜி மேடையேறினார். தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டம் செங்காேட்டையை பூர்வீகமாகக் கொண்ட அவர் மேடையேறி, ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் திட்டக்குழுவின் கனவு நிறைவேறியுள்ளது, என்றார்.
விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக அவர் கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
“விண்கலம் தனது 125 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. விண்கலம் இலக்கை அடையும்போது, இந்திய விண்வெளித்துறையின் மிகப்பெரிய பொக்கிஷமாக ஆதித்யா-எல்1 இருக்கும்,” என்றார். அரங்கம் மீண்டும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
அரசுப் பள்ளியில் படித்த நிகர் ஷாஜி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட நிகர் ஷாஜி, 1987 ஆம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் செங்கோட்டையில் உள்ள திரு இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த நிகர் ஷாஜி குறித்து அவரின் சகோதரர் ஷேக் சலீம் பிபிசியிடம் பேசினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தும் அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகவே அவர் பொறியியல் படிப்பை தேர்வு செய்ததாகக் கூறினார் சலீம்.
“நிகர் ஷாஜி பள்ளியில் படிக்கும்போது இருந்தே அவருக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அவர் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும், தேசிய அறிவியல் மையத்தின் கல்வி உதவித்தொகையின் மூலமாகத்தான் படித்தார்,” என்றார் சலீம்.
அரசுப்பள்ளியில் நிதி உதவி பெற்று படித்தது குறித்து பேசினார் சலீம். அந்தக்காலத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி இருந்தாலும், அதே பள்ளி வளாகத்தில் ஆங்கில வழிக்கல்வியும் இருந்ததாகக் கூறும் அவர், அதற்கு ரூ 15 கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.
“எங்கள் தந்தை 1940-களிலேயே கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார். ஆனால், அவர் தான் படித்த படிப்பு சார்ந்த பணியில் அதிகம் நாட்டம் செலுத்தாமல், விவசாயத்தில் இறங்கினார். அதில் சில புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், எதுவும் கைகூடவில்லை. அதனால், குடும்பத்தின் பொருளாதார சூழல் என்பது வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்தது எனக் கூறலாம்,” என்றார்.
மருத்துவர் படிப்பு விடுத்து பொறியியலை தேர்வு செய்த நிகர் ஷாஜி
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் படித்துள்ளார் நிகர் ஷாஜி.
1986 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து முடித்த உடன், அந்த ஆண்டே செய்தித்தாளில் இஸ்ரோ வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, நிகர் ஷாஜி அதற்கு விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சலீம்.
“அப்போதெல்லாம் அடிக்கடி பொறியாளர்கள் வேண்டி இஸ்ரோ சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வரும். அவர் ஜூன், ஜூலை மாதம் தனது பொறியியல் படிப்பை முடித்தார்.
முடித்ததுமே, ஆகஸ்ட் மாதம் ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்த 83 பேரில், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் நிகர் ஷாஜி தான் முதலிடம்,” என்றார் சலீம்.
முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிய நிகர் ஷாஜி, மூன்று மாதங்களுக்கு பின்னர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் பணியில் இருந்த நிகர் ஷாஜி, பின் செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில் இருந்துள்ளார்.
ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக நாசாவில் பயிற்சி
நிகர் ஷாஜி, ஆதித்யா- எல்1 திட்டம் மட்டுமின்றி, இதற்கு முந்தைய சந்திரயான் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். மூன்று தசாப்தத்திற்கும் மேலான நிகர் ஷாஜியின் இந்தப் பயணத்தில், அவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து அமெரிக்கா, ஸ்காட்லேண்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சிக்காக சென்று பணியாற்றியுள்ளார்.
“தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்,” என்றார் சலீம்.
குறிப்பாக, விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏழு கருவிகளில், சூரியனைத் தவிர, அவற்றில் இருந்து வரும் துகள்கள் உள்ளிட்டவையை ஆய்வு செய்வதற்காக பூமி நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு மாதத்திற்கு குறைவான நாட்கள் நிகர் ஷாஜி அங்கு பயிற்சி பெற்றதாகப் பகிர்ந்துகொண்டார் சலீம்.
“அரசு செலவில் படித்துள்ளோம், சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும்”
1987 ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்த பிறகு, 2000 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, நிகர் ஷாஜியுடன் இருந்தவர்கள் சிலர் தகவல் தொழில்நுட்பத்திற்கு மாறியதாகக் கூறிய சலீம், நிகர் ஷாஜியும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற நினைத்ததாகக் கூறினார்.
ஊதிய கமிஷன்(Pay Commission) வருவதற்கு முன்பெல்லாம் இஸ்ரோவில் குறைந்த அளவே சம்பளம் இருந்ததாகக் கூறும் சலீம், அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரோவை ஒப்பிடும்போது, அப்போது வளரத் தொடங்கிய தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்ததாகக் கூறினார்.
“அதனால், பணி மாறலாமா என்று ஒரு சிந்தனையில் இருந்தார் என் தங்கை. ஆனால், முழுக்க முழுக்க அரசுச் செலவில் படித்து வந்துள்ள நாம், சமூகத்திற்காகத்தான் பணியாற்ற வேண்டும் என நான் தான் இஸ்ரோவிலேயே பணியைத் தொடரச் சொன்னேன். நான் உட்பட என் சகோரிகள் வரை அனைவரும் அரசுப்பள்ளியிலும் கல்லூரியிலும் மாநில பாடத்திட்டத்தில் தான் படித்தோம்,” என்றார் அவர்.
தற்போது பெங்களூரில் தனது 85 வயதான தாயுடன் வசித்து வரும் நிகர் ஷாஜி, கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே சிறந்த விஞ்ஞானியாக பதவி உயர்வு பெற்றார். சுமார் எட்டு ஆண்டுகளாக ஆதித்யா-எல்1 திட்டத்தில் பணியாற்றி வரும் நிகர் ஷாஜியின் கணவர் வளைகுடா நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஷாஜியின் மகன் நெதர்லேண்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
நிலாவிலும் தமிழர் சூரியனிலும் தமிழர்
சந்திரயான் 1 திட்டத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, சந்திராயன் 3 திட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது, ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“நம் நாட்டின் விண்வெளித் துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல் கல்லாக இருக்கும் ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்,” என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்