You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி ஐரோப்பாவிலும் துறைமுகம் வாங்குகிறாரா? மோதியின் கிரீஸ் பயணத்தில் நடந்தது என்ன?
- எழுதியவர், அனந்த் ஜனானே
- பதவி, பிபிசி இந்தி
பிரதமர் மோதி கடந்த வாரம் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
முன்னதாக 1983-ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, மத்தியதரைக் கடல் பகுதியில் இந்தியாவிற்கு மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்திருந்தார்.
தற்போது பிரதமர் மோதி கிரீஸ் சென்று, "நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸுக்கு வந்துள்ளார். இன்னும், எங்கள் உறவுகளின் ஆழம் குறையவில்லை, உறவுகளின் அரவணைப்பு குறையவில்லை," என்று கூறியிருந்தார்.
ஆனால் பிரதமர் மோதி கிரீஸ் நாட்டில் சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திருபும் வழியில் பிரதமர் மோதி கிரீஸ் சென்றார். இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு சென்று சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்தார்.
ஆனால் இவ்வளவு குறுகிய பயணத்திலும், பிரதமர் மோதியின் பிஸியான அட்டவணையிலும், இந்தியாவில் பணிபுரியும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கிரீஸை அடைந்து, கிரீஸ் பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமர் மோதியுடன் மதிய உணவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கிரீஸ் நாட்டின் உயர்மட்ட வர்த்தக அதிகாரிகள், இந்திய வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்தனர்.
மோதியின் பயணம் பற்றி கிரேக்க ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
பிரதமர் மோதியின் கிரீஸ் வருகை குறித்து, ‘கிரீஸ் நாட்டின் துறைமுகங்களை கையகப்படுத்த பிரதமர் மோதி விருப்பம் தெரிவித்ததாக’ கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கிரீஸ் நாளிதழான கிரேக்க சிட்டி டைம்ஸ், ‘பிரதமர் மோதியின் இந்த விஜயத்தின் போது, மூலோபாய முதலீடு மற்றும் சுற்றுலா போன்றவற்றுடன், துறைமுகங்களை நிர்வகிக்கும் தொழில் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று கூறியிருந்தது.
மேலும், ‘பிரதமர் மோதி கிரேக்கத்தில் துறைமுகங்களை நிர்வகுக்கும் ஒப்பந்தத்தைக் கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்குக் காரணம், கிரீஸின் கவாலா மற்றும் வோலோஸ் ஆகிய இரண்டு துறைமுகங்களில் இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் அதானி குழுமம் ஆர்வமாக உள்ளது,’ என்றது.
கிரீஸின் மற்றொரு ஊடக நிறுவனமான ‘புரோட்டோ தீமா’வும் இதே செய்தியை ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.
கெளதம் அதானியின் செல்வாக்கு, அவரது வர்த்தகம் மற்றும் பிரதமர் மோதியுடனான அவரது நெருங்கிய உறவு குறித்து கிரேக்கத்தின் பிசினஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது .
அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கிரீஸ் வந்ததாகவும், ஆனால் அந்த கூட்டத்தில் கௌதம் அதானி ஆதிக்கம் செலுத்தியதாகவும் ஒரு ஊடக நிறுவனம் எழுதியுள்ளது.
இருப்பினும், கிரீஸில் பிரதமர் மோதியுடன் மதிய உணவில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர்களில் கவுதம் அதானி இல்லை.
இதுவரை அதானி குழுமம் கிரீஸின் இந்த மூன்று துறைமுகங்கள் மீது வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை.
அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சல், ‘அத்தகைய ஊகங்களை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று கூறினார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோதியின் மீது காங்கிரஸார் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பக்கத்தில்: ‘பிரதமர் மோதி தனது கிரீஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும், அங்கு அவர் கிரீஸ் துறைமுகங்களிலும் ஆர்வம் காட்டினார். தற்போது கிரீஸ் நாட்டின் துறைமுகங்களை அதானி குழுமம் கைப்பற்றப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறையும் மோதி ஜியின் வெளிநாட்டுப் பயணம் அவருடைய சிறந்த நண்பருக்கு ஒப்பந்தம் போடுவதற்காகத்தான். மோதி என்றால் அதானி, அதானி என்றால் மோதி என்று அர்த்தம்,’ என்று பதிவிட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்தச் சர்ச்சை குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பிரதமர் மோதி பெங்களூருக்கு முன்கூட்டியே வர முடியாமல் போனதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு பற்றி பிபிசியிடம் விளக்கமளித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால், “காங்கிரஸின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாக வேண்டுமானால், சர்வதேச வர்த்தக வழிகளில் நமது இருப்பு அவசியம். உலக அளவில் இதை உறுதி செய்யும் நோக்கில் மோதி ஜி முன்னேறி வருகிறார். இந்தியாவும் இதில் வெற்றி பெற்று வருகிறது. இந்த முயற்சிகள் மூலம், பிரதமர் மோதி ஜி தொடர்ந்து இந்தியாவின் நலனுக்காக உழைத்து வருகிறார்,” என்றார்.
ஆனால் பிரதமர் மோடி கிரீஸ் சென்றடையும் முன், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபத்ரிடிஸ், வியோன் நியூஸிடம், கிரீஸில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான பாரியாஸ் துறைமுகம், இந்தியாவை ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான வழியாக மாறும் என்று கூறியுள்ளார்.
அதானி பற்றிய விவாதம் ஏன்?
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட், உலகின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டு நிறுவனமாகக் கருதப்படுகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டும் 13 துறைமுக டெர்மினல்களை இயக்கி வருகிறது. மேலும் இந்தியாவின் கடல்சார் வருமானத்தில் அதானி குழுமம் 24% பங்குகளைக் கொண்டுள்ளது.
அதானி குழுமம் இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபாவை வாங்கி, இந்தியாவிற்கு வெளியே இந்தத் துறையில் தனது கால்தடத்தை பதித்தது. அதானி குழுமம் இந்த துறைமுகத்தை 2054ம் ஆண்டு வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த துறைமுகத்தில் அதானி குழுமத்திற்கு 70% பங்குகள் உள்ளன.
இதன் மீதி 30% பங்குகள் இஸ்ரேலிய கெமிக்கல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான கோடோடிடம் உள்ளது.
இந்த ஒப்பந்தம் முடிவாகும் சமயம் கெளதம் அதானி இப்படி ட்வீட் செய்திருந்தார்: "இந்த ஒப்பந்தம் இராஜதந்திர மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1918-இல் இந்தியர்கள் இராணுவ வரலாற்றில் மிகப்பெரிய குதிரைப் படைக்கு தலைமை தாங்கிய ஹைஃபாவில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹைஃபா துறைமுகத்தில் அதானியின் நுழைவு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கடல் போக்குவரத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
மத்திய தரைக் கடலின் துறைமுகங்கள் எவ்வளவு முக்கியமானவை?
ஆனால் கிரீஸ் மற்றும் அதன் துறைமுகங்கள் பற்றியத் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதன் மூலோபாய முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியர் ராஜன் குமார், பிரதமர் மோதியின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறார்.
“இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பதுடன், கிரேக்கத்தில் நமக்கு பிற நலன்களும் உள்ளன. கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரீஸ் இடம் மிகவும் முக்கியமானது. நாம் ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம் செய்கிறோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மும்பை வழியாக சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலில் நுழைகின்றன, என்றார்.
“இதற்குப் பிறகு, ஸ்பெயினுக்கு கீழே அமைந்துள்ள ஜிப்ரால்டர் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கிறது. இதனுடன் மத்தியதரைக் கடலில் இருந்து உற்பத்தியாகும் இந்தியப் பொருட்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்கின்றன. இந்த சூழலில், கிரீஸின் மூலோபாய இடம் முக்கியமானது,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்