You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாகுந்தலம் விமர்சனம்: சமந்தாவின் திரைப்படம் எப்படி இருக்கிறது?
- எழுதியவர், சாஹிதி
- பதவி, பிபிசிக்காக
அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது.
அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன.
தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார்.
சாகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளது, தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளது போன்றவை இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இயக்குநர் குணசேகரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளதா? காளிதாசரின் காவியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதை அப்படியே படமாக மாற்றியுள்ளாரா?
சிறந்த காதல் கதை
இலக்கியத்துடன் தொடர்பு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி சாகுந்தலை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால், காளிதாசர் படைப்பின் கதையை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் தேவையில்லை.
எனினும், கதையை சற்று நினைவுப்படுத்தி பார்ப்போம். சாகுந்தலா (சமந்தா) விஸ்வாமித்திர முனியர் மூலம் மோனகாவுக்கு பிறந்த குழந்தை. பிறக்கும்போதே ஆதரவற்றவளாக இருக்கும் சாகுந்தலாவை கண்வ மகரிஷி தனது சொந்த மகளாக வளர்த்தார்.
சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவை பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சகுந்தலாவும் துஷ்யந்துவை காதலிக்கிறாள்.
இருவரும் கந்தர்வர்களாக திருமணம் செய்து கொள்கிறார்கள். உடல் ரீதியாக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. மறுநாள், துஷ்யந்தன் ஹஸ்தினாவுக்குத் திரும்புகிறான். விரைவில் திரும்பி வந்து சாகுந்தலாவை அரண்மனைக்கு அழைத்து செல்வதாக அவர் உறுதியளிக்கிறார். இதற்கிடையே, சாகுந்தலா கருவுறுகிறாள்.
துஷ்யந்தனை தேடி ஹஸ்தினாவுக்கு சாகுந்தலா செல்கிறாள். ஆனால், துர்வாச மகரிஷியின் சாபத்தால் துஷ்யந்தன் சாகுந்தலாவை மறந்துவிடுகிறார். அனைவரும் கூடியிருக்கும் அவையில், `நீ யார் என்றே எனக்கு தெரியாது` என்று கூறி சாகுந்தலாவை அவமானப்படுத்தி விடுகிறார்.
அவமானத்துடன் அங்கிருந்து சாகுந்தலா வெளியேறுகிறாள். அதன் பின் என்ன நடந்தது? துஷ்யந்தனுக்கு தனது கடந்த காலம் மீண்டும் நியாபகத்துக்கு வந்ததா? சாகுந்தலாவை மீண்டும் எப்பது, எப்படி அவர் சந்தித்தார்? போன்ற கேள்விகளுக்கு விடைகளை கொண்டதே காளிதாசரின் அபிஞா சாகுந்தலம்.
அபிஞான சாகுந்தலம் ஒரு சிறந்த காதல் கதை. ஆனால் இந்தக் கதையில் காதல் மட்டும் இல்லை, சாகுந்தலா என்ற பெண்ணின் சுயமரியாதையும் உள்ளது. முழு சபையில், `நீ யார் என்றே எனக்கு தெரியாது` என்று துஷ்யந்தன் கூறும்போது, சாகுந்தலா துவண்டுபோகாமல், எப்படியும் உண்மையை ஒருநாள் அவரது மனம் அறியும் என்று நம்பிக்கையுடன் அதனை கடக்கிறாள்.
சிறந்த காட்சி அனுபவம்
குணசேகரன் இந்த காவியத்தை ஒரு காதல் காவியமாக மட்டும் பார்க்கவில்லை, இதனை சிறப்பான முறையில் காட்சிப்படுத்த முடியும் என்று அவர் உறுதியாக நம்பியிருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில், துஷ்யந்தன் புலியை வேட்டையாடும் காட்சி, யானை காட்சி, யுத்த காட்சி ஆகியவை மூலம் ரசிகர்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை தர படத்தின் இயக்குநர் முயன்றிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக, சாகுந்தலாவின் அறிமுக காட்சியை எடுத்துகொள்ளுங்க, அபிஞான சாகுந்தலையில் சாகுந்தலாவின் பேரழு குறித்து குறிப்பிடும்போது, மின்மினி பூச்சிகள் அவளை மலர் என்று தவறுதலாக எண்ணி அவள் மீது ஈர்ப்பு கொள்ளும் என்று காளிதாசர் குறிப்பிடுகிறார்.
இந்த கற்பனையில் எந்த குறைவும் ஏற்படாமல் அதனை அப்படியே குணசேகர் காட்சிப்படுத்தியிருக்கிறார். மான்கள் விளையாடுவது, முயல்கள் ஓடுவது, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது, பனி படர்ந்த மலைகள் என அனைத்து காட்சிகளும் வானவில்லின் வண்ணங்கள் போல் மனதில் ஒட்டிக்கொள்கின்றன.
ஒவ்வொரு காட்சியையும் கண்ணை கவரும் விதத்தில் அவர் உருவாக்கியுள்ளார். . ஹஸ்தினாபுர கோட்டையை கண்முன்னே கொண்டு வருவதில் குணசேகரின் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அற்புதமாக உள்ளது.
3டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் பார்க்கும்போது இந்த காட்சிகள் இன்னும் சிறப்பாக உள்ளன. க்ரீன் மேட்டில் காட்சிகள் படமாக்கப்பட்டாலும் அவை உருவாக்கப்பட்ட விதம் சிறப்பாக உள்ளன.
யாருடைய கதை இது?
காட்சி அனுபவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்கும்போது, திரைக்கதை அமைப்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது சாகுந்தலாவின் கதை. ஆனால், வில்லனின் பார்வையில் இருந்து படம் தொடங்குகிறது.
சாகுந்தலாவின் கதாபாத்திரம், அவளின் குணாதிசயங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு முழுமையாக சொல்லாமலேயே இயக்குநர் கதையை தொடங்குகிறார். இதனால், இது வில்லனின் கதை போலும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.
எனினும், இது சாகுந்தலையின் கதை. அவளின் பார்வையில் இந்த கதை தொடங்கியிருந்தால், அந்த கதாபாத்திரத்தின் மீதான காதல், கருணை போன்றவற்றை நீங்கள் உணர முடியும். இதனால்தான், அரண்மனையின் அனைவரும் கூடியிருக்கும் சபையில், சாகுந்தலை அவமானப்படுத்தப்படும்போது ரசிகர்களிடம் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் கல்லெறிந்து அவரை ராஜ்யத்தை விட்டு துரத்தும்போதும் அவர் மீது பெரிதாக கருணையை ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம், சாகுந்தலா கதாபாத்திரம் குறித்து முழுமையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தாததுதான்.
சாகுந்தலாவும், துஷ்யந்தாவும் திருமணம் செய்துகொண்டு உடலளவில் இணையும்போது அந்த காட்சியையும் வலுவாக எழுதியிருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே பெரிதாக காதல் இல்லை. இதுவொரு பெரிய குறை. படத்தின் இறுதியின் சாகுந்தலாவைத் தேடி துஷ்யந்தா வரும்போது அழுத்தமான வசனங்களை எழுதியிருக்க வேண்டும்.
கதாபாத்திரத்தில் சமந்தா பொருந்தியிருக்கிறாரா?
சமந்தாவுக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம். அவர் சிறப்பாகவே நடித்துள்ளார். அவரது ஒப்பனையும், நடிப்பும் சிறப்பாக உள்ளது.
ஆனால், சாகுந்தலா என்றால் மின்னல் என்று அர்த்தம். அவள் ஒரு காதல் நாயகி. அந்த அளவு அழகு படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து கிடைக்கவில்லை.
ஆரம்ப காட்சிகளில், சமந்தாவுக்கு மிகவும் குறைவான வசனங்களே உள்ளன. கர்ப்பமான பின்னர், ஹஸ்தினாபுரம் செல்லும் சாகுந்தலை, சபையில் அழுத்தமான வசனங்களை பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது. சமந்தா அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். தேவ் மோகன் வில்லனாக நன்றாக நடித்துள்ளார்.
துர்வாச மகரிஷி கதாபாத்திரத்துக்கு மோகன் பாபு கச்சிதமாக பொருந்திப்போகிறார். கவுதமி சின்ன கதாபாத்திரத்தில் வந்து போகிறார். மற்றவர்கள் எல்லாம் வந்து போகிறார்கள் யாரும் மனதில் ஒட்டவில்லை.
படத்தில் பரது வேடத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஹா (அல்லு அர்ஜூனின் மகள்) அனைவரையும் கவர்கிறார். அவரது கதாபாத்திரத்தின் நேரத்தை அதிகரித்திருக்கலாம் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது.
இந்த படம் 2டியில் எடுக்கப்பட்டு பின்னர் 3டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஒருவேளையில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்திருந்தால் இந்த படம் கூடுதலாக கவர்ந்திருக்கும். அந்த வகையில் 3டி காட்சிகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. மணி சர்மாவின் இசையும் பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை . படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸிற்காக கடுமையாக உழைத்துள்ளது தெரிகிறது.
பட்ஜெட், நேரம் போன்றவை இல்லாததால் அவை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
ஒரு படம் காட்சி ரீதியாக எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் மனத்தில் அது உணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த படத்தில் இது இல்லை.
அதேபோல், வில்லனின் பக்கம் இருந்து சாகுந்தலாவின் கதையை கூறியிருப்பதால், சாகுந்தலாவின் பார்வையில் இருந்து கதையை நோக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இது மிகப்பெரிய குறை. அந்த வகையில், எண்ணிய இலக்கை சாகுந்தலா எட்டவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்