ஆகஸ்ட் 16, 1947 சினிமா விமர்சனம்: கௌதம் கார்த்திக் படம் எப்படி இருக்கிறது?

அறிமுக இயக்குநர் எஸ் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி, புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16,1947. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரங்கூன் திரைப்படத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பானது இப்படம் என்பதை அதன் தலைப்பும் ட்ரைலரும் உறுதிப்படுத்தின.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக கற்பனை கதையை வைத்து இப்படத்தை பொன்குமார் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 16, 1947 தொடர்பாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

பொன்குமார் இயக்கியுள்ள இப்படம் சிறந்த கதையம்சங்களை கொண்டுள்ளதாக இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மாகாணத்தில் உள்ள செங்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம் கார்த்திக், அந்த கிராமத்தை ஆட்சி செய்யும் ஆங்கிலேயே அதிகாரியும் அவரது மகனும் மக்களை கொடுமைப்படுத்துகின்றனர். கிராம மக்கள் அனைவரும் அவர்களை பார்த்து அஞ்சுகின்றனர். ஊரில் உள்ள இளம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள ஆங்கிலேயே அதிகாரியின் மகன் ஜஸ்டனிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற அவளை ஒளித்து வைத்து வளர்க்கிறார் உள்ளூர் ஜமீன்தார்.

இந்நிலையில் சுதந்திரம் அடைவதற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதே கதை. யூகிக்கக்கூடிய காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதாகவும் படத்தின் கதை ஈர்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே அதவேளையில் கௌதம் கார்த்திக், புகழ், ரேவதி சர்மா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுதந்திரம் என்பது என்ன? ஆங்கிலேயேர்கள் வெளியேறுவது அவர்கள் உள்ளத்தில் ஆழமாக ஊறியுள்ள அடிமைத்தனத்தையும் அச்சத்தையும் உடனடியாகவும் எளிதாகவும் போக்கிவிடுமா என்ற கேள்விகளுக்கு இந்த படம் பதில் சொல்வதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

கிராமமும் அங்குள்ள மக்களின் தோற்றமும் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு பல நிகழ்வுகளில் மனதை உறுத்துகின்றன.

சுதந்திரத்திற்காக பல நூற்றாண்டுகளாக ஏங்கித்தவிக்கும் கிராம மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்போவது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்ற கரு புதிரானது என்றாலும் திரைக்கதையும் சொல்லப்பட்ட விதமும் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதாக விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் குழப்பமானதாகவும், மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும், அதிக மரணக் காட்சிகளும் இருப்பதாக ஸ்க்ரால் இணைய ஊடகத்தின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயே அதிகாரியாக வரும் ராபர்ட் மற்றும் அவரது மகன் ஜஸ்டின் ஆகியோர் கொடூரத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவதில் காமிக் புத்தகங்களின் வில்லன்களை போன்று இருப்பதாகவும் குறிப்பாக ராபர் ஹிட்லர்- செஞ்சிஸ்கான் கலந்த கலவையாக இருப்பதாகவும் ஸ்க்ரால் விமர்சனம் தெரிவித்துள்ளது.