You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜாவின் பின்னணி இசையால் முன்னுக்கு வந்த 6 படங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்
- எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மிகப் பிரம்மாண்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்ஃபொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இவ்விழா அமையவிருக்கிறது. இதில், இளையராஜா, சிம்ஃபொனி இசைக்குழுவுடன், மீண்டும் தனது சிம்ஃபொனி இசைக் கோர்வையை அரங்கேற்றவுள்ளார்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்தவர், அவரது இசையில் இல்லாத உணர்ச்சிகளே இல்லை, வாழ்க்கையின் எந்த விதமான சூழலுக்கும் அவரது ஏதோ ஒரு பாடல் பொருந்திப் போகும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளையராஜாவின் இசை குறித்து அன்றாடம் நாம் பார்த்தும், கேட்டும், படித்தும் வருகிறோம்.
பாடல்களுக்குச் சமமாக அவரது பின்னணி இசைக் கோர்வைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவிலேயே அவரைப் போல பின்னணி இசை என்கிற கலையைப் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்று பல இயக்குநர்கள் இளையராஜாவைப் பாராட்டியுள்ளனர். இதற்கு ராஜாவின் மேதைமை மட்டுமல்ல, இதில் அவர் காட்டிய ஈடுபாடு, எடுத்துக் கொண்ட பயிற்சியும் முக்கியக் காரணிகள்.
இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தவர் இளையராஜா. அந்த நேரத்தில் அன்னக்கிளி வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்துக்கான பாடல்களின் பதிவும் முடிந்தது. பாடல்கள் எவ்வளவு சிறப்பாக வந்திருக்கின்றன என்று ஜிகே வெங்கடேஷிடம் சிலர் கூறி, இளையராஜாவை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளனர். அதைக் கேட்ட வெங்கடேஷ், அவன் பாடல்களுக்கு இசையமைக்கலாம், ஆனால் பின்னணி இசை அவனால் முடியாது என்று பேசியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட இளையராஜாவுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதை இளையராஜாவே ஒரு மேடையில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் அவர் பேசியதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, இசை தொடர்பான அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து, இன்று வரை பின்னணி இசைக் கோர்வையில் தனி முத்திரை பதித்து வருகிறார். இளையராஜாவைப் பொருத்தவரை, ஒரு இசைக் கோர்வையோ அல்லது பாடலோ நன்றாக இருந்தால் கிடைக்கும் பாராட்டு, நன்றாக இல்லையென்றாலும் கிடைக்கும் விமர்சனம், இரண்டுமே அவரையே சேர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பவர்.
இளையராஜா திரைப்படங்களின் பின்னணி இசைக் கோர்வைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதில்லை என பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் உள்ளிட்ட பல இயக்குநர்கள் பாராட்டிப் பேசியுள்ளனர். ஒரு ரீலை ஒரு முறை ஓட்டிப் பார்த்தால், அந்த கால நேர அளவுக்கான சரியான இசையை அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதைப் போல இளையராஜா எழுத ஆரம்பித்துவிடுவார். அவர் சொல்லும் இசையின் அளவு அப்படியே பொருத்தமாகவும் இருக்கும் என்பதுதான் இதில் அதிசயம்.
இந்தியாவில் முதல் முதலாக தனது சிம்ஃபொனி இசையை இளையராஜா அரங்கேற்றவிருக்கும் இந்தத் தருணத்தில், அவரது சில திரைப்படங்களின் பின்னணி இசைக்குப் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான சில தகவல்களின் தொகுப்பே இந்தச் சிறப்புக் கட்டுரை.
கரகாட்டக்காரன்
இளையராஜா ஒரு பிறவி இசை மேதை என்று இசைக் கலைஞர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் ஒரு மேடையில் புகழ்ந்திருக்கிறார். அதற்கு ஓர் உதாரணம், இந்தச் சம்பவம். இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன் இயக்கிய திரைப்படம் கரகாட்டக்காரன். 1989ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்தப் படம் தமிழகத்தில் ஓடியது. இந்தப் படத்துக்கான பின்னணி இசை கோர்வை குறித்து, பேட்டி ஒன்றில் கங்கை அமரன் பகிர்ந்துள்ளார்.
"அண்ணன் இளையராஜா வேறு ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தத் தயாரிப்பாளர் தனது தேதிகளை ஒத்தி வைத்தார். உடனே என் படம் தயாராக இருக்கிறதா என்று அண்ணன் கேட்டார். நானும் இருக்கிறது என்றேன். அவர்களுக்கு ஒதுக்கிய தேதியில் என் திரைப்படத்துக்கு பின்னணி இசையமைக்க முடிவு செய்தார். அவரிடம் நான் கரகாட்டக்காரன் படத்தின் கதையையும் சொல்லவில்லை, பாடல்களுக்கான சூழலையும் சொல்லவில்லை.
படத்தை போடச் சொன்னார், முதல் ரீல் ஓடியது. பார்த்தார், கவுண்டமணி நகைச்சுவையை ரசித்தார், சிரித்தார். உடனே கையில் பேனாவை எடுத்து அந்த காட்சிக்கான பின்னணி இசைக் கோர்வையை எழுதினார். கரகாட்டக்காரனின் மிகப் பிரபலமான அந்த நகைச்சுவை பின்னணி இசை இப்படித்தான் உருவானது. மொத்தப் படத்துக்கும், அந்த நேரத்தில் படத்தை ஓட்டிப் பார்த்து பார்த்து அப்படியே பின்னணி இசை எழுதினார் இளையராஜா. படத்தின் இமாலய வெற்றிக்கு அவரது இசைதான் மிக முக்கியமான காரணம்" என்கிறார் கங்கை அமரன்.
கேளடி கண்மணி
பெரும்பாலும் இளையராஜா இரண்டிலிருந்து நான்கு நாட்களுக்குள் திரைப்படங்களுக்கான மொத்த பின்னணி இசைக் கோர்வையையும் முடித்துவிடுவார். படம் பார்த்து, பிடித்து விட்டால், அடுத்த நாளே பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்கிவிடுவார். இயக்குநர் வசந்த் அறிமுகமான கேளடி கண்மணி திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வைக்கு மொத்தம் நான்கு நாட்கள் திட்டமிட்டிருந்தார் இளையராஜா.
பவுர்ணமி தினத்தன்று தவறாமல் திருவண்ணாமலை செல்லும் வழக்கம் கொண்டவர் இளையராஜா. கேளடி கண்மணி படத்தின் இசைக் கோர்வை பணிகள் 3 நாட்கள் முடிந்த நிலையில், நான்காவது நாள் பவுர்ணமி. எனவே அவர் திருவண்ணாமலை சென்று வந்த பிறகே இதை முடிக்கப் போகிறார் என்கிற நிலை. ஆனால் படத்தின் தயாரிப்பாளர், படத்தின் வெளியீடு, விளம்பரம் என்றெல்லாம் சில திட்டங்களை செய்திருந்ததால், படத்தின் பின்னணி இசைக் கோர்வை சீக்கிரமாக முடிய, ஆர்வமாகக் காத்திருந்தார். இயக்குநர் வசந்திடம், எப்படியாவது நான்காவது தினத்தில் மிச்சமிருக்கும் வேலைகளை முடித்துத் தரச் சொல்லி கேளுங்கள் என்று சொன்னார் தயாரிப்பாளர்.
இயக்குநர் வசந்தும், இளையராஜாவிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார். இதைக் கேட்ட இளையராஜா, "மிச்சம் ஒரு நாள் இல்லை. உன் படத்தின் இறுதிக் கட்டம் அவ்வளவு உணர்ச்சிகரமாக இருக்கிறது. நான் அதற்கென்றே 3 நாட்கள் தனியாக எடுத்துக் கொள்ளப் போகிறேன்" என்று பதில் சொல்லியிருக்கிறார். "இன்றும் கேளடி கண்மணி படத்தின் இறுதிக் காட்சியில் அந்த உணர்ச்சிகள் அவ்வளவு அழுத்தமாக பார்ப்பவர்களைச் சென்று சேருகிறதென்றால் அதற்குக் காரணம் இளையராஜாவின் பின்னணி இசைதான்" என்று இயக்குநர் வசந்த் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
புலன் விசாரணை
தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்குநராக அறிமுகமான திரைப்படம் புலன் விசாரணை. விஜயகாந்த் நடிப்பில் 1990ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் படத்தின் பின்னணி இசைக்கு முந்தைய இறுதிப் பிரதியைப் பார்த்த படத்தில் பணியாற்றியவர்கள் பலருக்கும், படத்தின் மேல் பெரிய நம்பிக்கை வரவில்லை.
காரணம், அப்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த படங்களிலிருந்து மிக வித்தியாசமான ஒரு திரைப்படம் அது. படத்தில் வசனங்கள் மிகக் குறைவு. விஜயகாந்தின் ஆக்ஷனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இயக்குநர் செல்வமணியும், தயாரிப்பாளர் ராவுத்தரும் மட்டுமே படத்தின் வெற்றி குறித்து நம்பிக்கையுடன் இருந்தனர்.
இயக்குநர் மனதில் என்ன நினைத்தாரோ அதை விட மிகச் சிறப்பான ஒரு பின்னணி இசைக் கோர்வையை படத்துக்குத் தந்திருந்தார் இளையராஜா. இப்போது படத்தைப் பார்த்தால் அதே நபர்களுக்கு இது முற்றிலும் வேறொரு படமாகத் தெரிந்திருக்கிறது.
"எங்கள் திரைப்படத்தின் பலம் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர் முதலில் இளையராஜாதான். அவரது பின்னணி இசையோடு பார்க்கும் போதுதான், எங்களுக்கு எங்கள் திரைப்படத்தின் பிரம்மாண்டம், ஆழம் என்ன என்பது புரிந்தது. அவரே ஒரு இயக்குநர் என்பேன் நான்" என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.கே செல்வமணியின் நண்பரும், ஒளிப்பதிவாளருமான பன்னீர் செல்வம்.
நந்தலாலா
இயக்குநர் மிஷ்கினின் நந்தலாலா 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதுவெ மிஷ்கின் இளையராஜாவுடன் பணியாற்றிய முதல் திரைப்படமும் கூட. இளையராஜாவுடனான தனது உரையாடல்கள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
"என் அம்மாவுக்குப் பிறகு நான் மிகவும் மதிக்கும், கால் தொட்டு வணங்கும் ஒருவர் இளையராஜாதான். ஆனால் அவருடன் பணியாற்றும் போது அதிகமாக சண்டையிட்டிருக்கிறேன். அது அவர் மேல் இருக்கும் உரிமையில் போடும் சண்டையே. அவர் என்னை எவ்வளவு திட்டினாலும் நான் கேட்டுக் கொள்வேன். ஏனென்றால் எனக்கு அவரது திட்டுகள் பெரிதாகத் தெரியாது. அவர் என்னை வெளியே போ என்று சொன்னாலும் அமைதியாக வந்துவிடுவேன். அவரே சிறுது நேரம் கழித்து என்னை அழைப்பார். நந்தலாலா திரைப்படத்தை அவர் முதலில் எடுக்க வேண்டாம் என்று என்னை அறிவுறுத்தினார். ஆனால், உங்களுடன் 6 மாத காலம் செலவிடலாம் என்பதற்காகவே எடுக்கிறேன் என்றே அவரிடம் சொன்னேன்.
படத்தின் முதல் காட்சியில் சிறிய ஓடையைக் காட்டியிருப்பேன். அதைப் பார்த்ததும் இளையராஜா, என்ன இசையமைக்கலாம் என்று திட்டமிட ஆரம்பித்தார். ஆனால் அவரை உடனே நிறுத்தி, எனக்கு இங்கு அமைதியாக இருந்தால் போதும் என்றேன். இந்தப் புள்ளியிலிருந்தே எங்களுக்குள் சண்டை வர ஆரம்பித்துவிட்டது. கோபத்தில் என்னை வெளியே அனுப்பிவிட்டார். நான் கிளம்பி வந்துவிட்டேன். சிறிது தூரம் சென்றதும், மீண்டும் அழைத்தார். ஸ்டூடியோ சென்றேன். இப்படித்தான் எங்கள் உறவு இருந்தது.
ஒரு நாள், திரைப்படத்தின் இறுதிக் காட்சியை அவருக்கு விவரித்தேன். தன்னை சிறு வயதில் விட்டுச் சென்ற அம்மாவைக் காண, பல வருடங்கள் கழித்து மகன் செல்கிறான். அவனும் மனநிலை பாதிக்கப்பட்டவன். உன்னால் நான் பட்ட கஷ்டங்களைப் பார் என்று கேள்வி கேட்டு சண்டையிட தயாராகவே செல்கிறான். ஆனால் அங்கே அவன் அம்மா சங்கிலியால் கட்டப்பட்டு, மனநலம் குன்றி, ஆதரவின்றி கிடக்கிறாள். நான் இதைச் சொல்லும்போது அழுதுவிட்டேன். இதைக் கேட்ட இளையராஜா சில நிமிடங்கள் யோசித்தார். தனது ஹார்மோனியத்தில் கை வைத்தார். அந்தச் சூழலை உள்வாங்கிக் கொண்டு, 'தாலாட்டு கேட்க நானும் எத்தன நாள் காத்திருந்தேன்' என்று பாடல் வரிகளுடன் மெட்டைப் பாடினார், நான் அசந்துவிட்டேன். ஒரு எழுத்தாளருக்கான வேலையையும் அன்று அவர் சேர்த்து செய்தார்".
ஹேராம்
ஹேராம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன், தயாரித்து, நடித்து இயக்கினார், அந்தப் படத்துக்கு முதலில் வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார். அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கமல்ஹாசன் இளையராஜாவிடம் வந்தார், ஏற்கனவே போட்ட மெட்டுகளுக்கு, ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளுக்கு ஏற்றவாறு புதிதாக ஒரு இசையை உருவாக்கி அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தினார் இளையராஜா. இந்தத் தகவல்கள் எல்லாம் கமல் உள்ளிட்ட பலராலும் பொதுவெளியில் அடிக்கடி பகிரப்பட்டவைதான்.
ஆனால் தனக்காக இவ்வளவு உதவி செய்த இளையராஜாவுக்காக, கமல்ஹாசன் ஒரு விஷயம் முடிவு செய்தார். ஹேராம் திரைப்படத்தின் இசைக்கோர்வையை, சிம்ஃபொனி இசைக் கலைஞர்களை வைத்து, வெளிநாட்டில் பதிவு செய்யலாம் என்று திட்டமிட்டார். இதை இளையராஜாவிடமும் சொன்னார். அதற்கு முன்னரே இப்படியான பல வாக்குறுதிகளை, பல்வேறு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவுக்குத் தந்திருக்கின்றனர். எனவே கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகளில் இளையராஜாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
ஆனால் கமல்ஹாசன், அவர் சொன்னதைப் போல, இளையராஜாவை வெளிநாடு அழைத்துச் சென்றார், புடாபெஸ் இசைக் குழுவைக் கொண்டு ஹே ராம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வையை செய்ய வைத்தார். இதுவே இந்த இசைக் குழுவுடன் இளையராஜா பணியாற்றிய முதல் திரைப்படம். இதற்குப் பிறகு பல முறை இந்த இசைக் குழுவுடன் இளையராஜா பணியாற்றும் அளவுக்கு அவர்களின் திறமை இளையராஜாவைக் கவர்ந்துள்ளது.
முதல் மரியாதை
இளையராஜாவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜா, 1985ஆம் ஆண்டு, சிவாஜி, ராதா நடிப்பில், முதல் மரியாதை திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இறுதிப் பிரதியைப் பார்த்த இளையராஜாவுக்கு, திரைப்படம் பிடிக்கவில்லை. என்ன இப்படி எடுத்திருக்கிறாய் என்று பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு, சில விஷயங்களை சேர்த்து, படம்பிடித்துக் கொண்டு வா என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தனது திரைப்படத்தின் மீது முழு நம்ப்க்கை கொண்ட பாரதிராஜா, அதைச் செய்யவில்லை. அதே பிரதியை பின்னணி இசைக்கும் அனுப்பினார். இளையராஜாவுக்கு இது புரிந்தது. ஆனாலும், தனது கலைக்கு நேர்மையாக, செய்யும் தொழிலுக்கு நேர்மையாக, மிகச் சிறப்பான இசைக் கோர்வையைக் கொடுத்திருந்தார். படத்தின் இறுதிக் கட்டத்துக்கான பின்னணி இசைக் கோர்வை மட்டும், தொடர்ச்சியாக, 16 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்திருக்கிறது. பின்னணி இசையுடன் படத்தைப் பார்த்த பாரதிராஜா, கண் கலங்கி, நெகிழ்ந்து, இளையராஜாவைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னார்.
இன்றும் அந்தத் திரைப்படத்தின் இசைக் கோர்வையைக் கேட்டால், படம் பிடிக்காமல் ஒருவர் இசையமைத்ததைப் போல இருக்காது. ஆனால் இளையராஜாவோ, இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றும், ஒரு படத்தைப் பிடிக்காமல் இசையமைத்துள்ளேன், எனவே சம்பளம் வேண்டாம் என்று, கடைசி வரை தனக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவே இல்லை என்று, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
இசையின், ஒலியின் ஒட்டுமொத்த தன்மையைப் புரிந்த ஒரே இசைக் கலைஞன் இளையராஜா தான் என்று பாராட்டியுள்ளார் இசைக் கலைஞர் டிவி கோபாலகிருஷ்ணன். அதற்கான சான்றுகளே இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். ஆனால் இளையராஜா செய்திருக்கும் இவையெல்லலாம் இந்தச் சம்பவங்கள் என்பது ஒரு சிறு துளிகூட இல்லை என்பதே உண்மை. கண் பார்த்தால், கை இசை எழுதும் என்கிற வேகத்தில் செயல்பட்டவர் இளையராஜா.
எத்தனையோ திரைப்படங்களுக்கு அவர் சம்பளம் வாங்கியதில்லை என்று, பல பேட்டிகளில், திரையுலகினர் பேசுவதைக் கேட்கும்போது, தன் இசையால் யாருக்கு என்ன முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற தாகமே இளையராஜாவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. இன்றும் தினசரி தனது ஸ்டூடியோவுக்கு நேரம் தவறாமல் செல்லும் இளையராஜாவைப் பார்க்கும் போது, அந்தத் தாகம் அப்படியே இருப்பதாகத் தான் தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு