You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்கிய 'திட்வா' - ஐஎம்எஃப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுமா?
- எழுதியவர், ஆர்.யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திட்வா புயலால் பேரழிவை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட அண்டைய நாடுகளின் பூரண உதவிகளும் சர்வதேச நாடுகளின் நிதி மற்றும் நிவாரண உதவிகளும் கிடைத்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக ஆஸ்திரேலியா, மாலத்தீவு, நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளின் மூலமாகவும், அதேபோல் ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட நிறுவனங்ககளின் நிதி உதவிகளும் இந்தியா, ஐக்கிய அமீரகம், ஜப்பான் போன்ற நாடுகள் நிதிக்கு அப்பால் மேலும் பல வழிகளில் உதவிகளையும் வழங்கி வருகின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதில் இருந்து மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு பேரிடர் நாட்டின் பொருளாதாரத்தின் மீது மேலும் பாரிய சுமையை சுமத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளனர்.
"ஐ.எம்.எப் நிபந்தனைகளுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது"
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், "நாடு முகங்கொடுத்திருக்கும் மிக மோசமான அனர்த்த நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய செயற்பட முடியாது. ஆகவே இலங்கைக்கு சாதகமான விதத்தில் உடனடியாக புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள வேண்டும். மக்களை மிக மோசமாக நசுக்கும் விதத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஐ.எம்.எப் நிபந்தனைகளுடன் நாம் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. ஆகவே உடனடியாக ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நிபந்தனைகளை நீக்கிக்கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் கூறுங்கள் நாம் ஐ.எம்.எப்புடன் கலந்துரையாடி தெளிவுபடுத்துகின்றோம்." என தெரிவித்துள்ளார்.
மேலும், "மிகப்பெரிய அழிவொன்றை இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் எவ்வாறு நாம் ஐ.எம்.எப் நிபந்தனைகளுடன் இணைந்து பயணிப்பது. எனவே உடனடியாக உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் இந்த வரவு-செலவு திட்டத்தை கைவிட்டு புதிய வரவு-செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டும்," எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
"அரசாங்கத்தின் பொருளாதார முதன்மை கையிருப்பு 2.3 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும், அரச வருமானம் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் ஐ.எம்.எப் நிபந்தனைகளில் முக்கியமானவையாகும். ஆனால் இந்த இரண்டு இலக்குகளையும் கடந்து அரசாங்கம் நிதி கையிருப்பை தக்கவைத்துள்ளது. ஐ.எம்.எப் வலியுறுத்திய இலக்கை கடந்து மேலதிகமாக வைத்துள்ள நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளுக்காக வழங்க வேண்டும்." எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம் கூறுகையில், " இப்போதுள்ள நெருக்கடியான நிலைமையில் பொருளாதார சுமையை அரசாங்கத்தினால் தாக்குப்பிடிக்க முடியாது. இது இறுதியில் மக்கள் மீதே சுமையாக போய்ச் சேரும். ஆகவே குறைந்தபட்சம் ஐ.எம்.எப் உடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியேனும் நாம் செலுத்த வேண்டிய கடன்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிற்போடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல் சர்வதேச நிதி உதவியாளர் மாநாட்டை நடத்தி இலங்கைக்கான நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்." எனவும் அவர் வலியுறுத்தினார்.
"வரவு -செலவு திட்டத்தில் மாற்றமில்லை"
எதிர்கட்சிகளின் யோசனைகளுக்கு பதில் தெரிவிக்கும் விதத்திலும், அதேபோல் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக, " நாம் இப்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட கட்டமைப்பிற்கு உள்ளேயே இருக்கின்றோம், இவ்வாறான ஒரு அனர்த்த நிலையில் எதிர்க்கட்சியினரில் பலர், ஐ.எம் .எப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுங்கள், மீள புதிய திட்டத்தை வகுத்து செயற்படுங்கள் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் நாம் நினைத்தாற்போல் இந்த உடன்படிக்கைகளில் இருந்து வெளியில் வர முடியாது. இது சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடனடியாக மீற முடியாது." எனத் தெரிவித்தார்.
"இப்போது ஐ.எம்.எப் உடன் ஐந்தாம் கட்ட மீளாய்வுக்கு நாம் செல்லவேண்டும். அதற்கான கலந்துரையாடல் இம்மாதம் 15-ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நாடு இப்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலையில் அதனை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த இணக்கம் கண்டுள்ளோம். எவ்வாறு இருப்பினும் நாம் தீர்மானித்ததற்கு அமைய ஐ.எம்.எப் நிபந்தனைகளுக்கு ஏற்பவே இந்த வரவு செலவு திட்டத்தையும் தயாரித்துள்ளோம். அதில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை." எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
206 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்
இந்நிலையில் ஐ.எம்.எப் பின் இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு வாஷிங்டனில் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை, 'திட்வா' புயலால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்குமென 206 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளரும், பதில் தலைவருமான கென்ஜி ஒகமுராவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- இலங்கையைத் தாக்கிய மிகமோசமான சூறாவளியினால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் அழிவடைந்து, நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
- இப்பேரனர்த்தமானது அவசர மனிதாபிமான மற்றும் புனரமைப்புத் தேவைகளை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இறைசார் அழுத்தங்களையும் சென்மதி நிலுவைத் தேவைப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
- துரித நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள அவசரகால நிதியுதவியானது இவ்வழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்குத் துணைபுரியும்.
- அவசியமேற்படுமாயின், நிதியியல் முறைமைக்கு அவசியமான திரவத்தன்மைசார் ஆதரவினை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராக இருக்கின்றது.
- மீட்சி மற்றும் புனரமைப்பு சார்ந்த தேவைகள் கணிசமானளவில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில், இறை மற்றும் படுகடன் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இறை முன்மீதியைப் பேணுவதில் இலங்கை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
- சகல அவசரகால செலவினங்களும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்துடன் முழுமையாக இணங்கியொழுகும் விதத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்.
- அத்தோடு அவை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தரநியமங்களுக்கு ஏற்புடைய விதத்தில் முறையான கண்காணிப்பு மற்றும் சீரான பகிரங்க அறிக்கையிடல் என்பவற்றுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
- தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவரும் வேளையிலும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் உரியவாறு பலனளித்துவரும் சூழ்நிலையிலுமே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
- இருப்பினும் வலுவான மறுசீரமைப்புச் செயற்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதானது ஸ்திரமான பொருளாதார மீட்சி, விலை உறுதிப்பாடு, கணிசமான இறைத்திரட்சி மற்றும் வெளிநாட்டுக் கையிருப்பில் முன்னேற்றம் என்பவற்றை அடைந்துகொள்வதற்குத் துணைபுரிந்துள்ளது.
- பொருளாதாரமானது தொடர்ந்தும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி நெருக்கடிக்கு முன்னரான மட்டத்துக்கு மீட்சியடையாதுள்ளது.
- இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவருவதுடன், அடுத்தகட்டக் கலந்துரையாடல்கள் வெகுவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும்.
- இக்கடினமான தருணத்தில் நாணய நிதியம் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நிற்பதுடன் இலங்கையின் மீட்சி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்
ஐ.எம்.எப்பின் 5 ஆம் கட்ட மீளாய்வு கூட்டம் எப்போது?
அதேவேளை பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்கும், இத்தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குமான முயற்சிகளுக்கு ஐ.எம்.எப்பின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஊடாக எவ்வாறு செயற்திறன்மிக்க வகையில் ஆதரவளிக்கமுடியும் என்பதை மதிப்பீடு செய்வதற்கும் தேவையான காலப்பகுதியினைக் கருத்திற்கொண்டு, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5-ஆம் கட்ட மீளாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், 2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதுபற்றிய கலந்துரையாடல்கள் மீள ஆரம்பமாகும் எனவும் நாணய இயக்குநர் சபை அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு