டெல்லி சட்டமன்ற தேர்தல்: கேஜ்ரிவால் உள்பட தோல்வியை தழுவிய ஆம் ஆத்மியின் 5 முக்கிய தலைவர்கள்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது பாஜக. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, இந்த வெற்றி மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு இணையாக கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களின் தோல்வி.
இந்த காணொளியில் ஐந்து முன்னணி ஆம் ஆத்மி தலைவர்களின் தோல்வியைப் பற்றி பார்க்கலாம். முன்னாள் முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் துணை முதல்வரான மனிஷ் சிசோடியாவும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஜங்புரா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்வீந்தர் சிங்கிடம் வெறும் 675 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார் மனிஷ் சிசோடியா. டெல்லி சுகாதார அமைச்சரான சௌரப் பரத்வாஜ் பாஜகவின் ஷிகா ராயிடம் தோல்வி அடைந்தார்.
கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட இவர், 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். முன்னாள் அமைச்சரான சத்யேந்தர் ஜெயின், பாஜகவின் கர்னைல் சிங்கிடம் வெற்றியை இழந்தார். ஷகூர் பஸ்தி தொகுதியில் போட்டியிட்ட இவர், 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
முன்னாள் அமைச்சரான சோம்நாத் பாரதி, மால்வியா நகர் தொகுதியில் தோல்வி அடைந்தார். டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரான சதீஷ் உபாத்யாய், சோம்நாத் பாரதியை 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



