இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் வெற்றிக்காக தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைத்த முஸ்லிம் வணிகர் - எங்கே?

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெரும்பாலான நகரங்களின் மையத்திலோ, பிரதான வீதிகளின் சந்திப்புகளிலோ 100 ஆண்டுகளைக் கடந்தும் மணிக் கூண்டுகள் நிற்பதைக் காண முடியும். சில நகரங்களில் மணிக் கூண்டுகள் இடிக்கப்பட்டு பெயர்கள் மட்டும் வழக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் மணிக்கூண்டின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கும். இது மயிலாடுதுறை மணிக்கூண்டின் பின்னால் இருக்கும் இரண்டாம் உலகப்போர் காலத்திய கதை.
மயிலாடுதுறை கடை வீதியில் இருக்கும் மணிக்கூண்டு, 1943ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டைக் கட்டியவர் ஒரு முஸ்லிம் வர்த்தகர்.

இரண்டாம் உலகப்போரின்போது, வட ஆப்பிரிக்க பகுதியில் தொடக்கத்தில், அனைத்து போர் முனைகளிலும் ஜெர்மனியும் இத்தாலியும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன.
ஆனால், வட ஆப்பிரிக்காவில் உள்ள துனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க வெற்றியை பிரிட்டன் பெற்றது. இது பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் இந்த மணிக்கூண்டைக் கட்டியதாகக் கூறுகிறார் விழுப்புரம் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ்.
பிரிட்டன் வெற்றிக்கான நினைவுச் சின்னம்

அப்துல் காதரின் சொந்த ஊர் மாயவரம் அருகே உள்ள நீடூர். இவர் பாத்திரக்கடை வைத்து வர்த்தகம் செய்து வந்தார். அவர் முழுக்க முழுக்க தனது சொந்தச் செலவில் இந்த மணிக்கூண்டைக் கட்டினார்.
கடந்த 1943ஆம் ஆண்டிலேயே இந்த மணிக்கூண்டைக் கட்ட ரூ.8,000 செலவானது என்பதைத் தனது தந்தையார் கூறக் கேட்டிருப்பதாக நினைவுகூர்கிறார் இந்த மணிக்கூண்டைக் கட்டிய அப்துல் காதரின் மகனும் வழக்கறிஞருமான முகமது அலி. ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் ஒருமுறை மணி ஒலிக்கும் வகையில் இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது.

"என் சிறு வயதில் இதிலிருந்து எழும் மணி ஓசையைக் கேட்டிருக்கிறேன். கணீர் என்ற அந்த ஒலி இன்னமும் எனது செவியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மணிக்கூண்டை எனது தகப்பனார் அப்துல் காதர் தனது சொந்தச் செலவில் கட்டினார். மயிலாடுதுறை நகரத்தின் காந்திஜி சாலை, பட்டமங்கலம் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டின் திறப்பு விழா கி.பி.1943ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது," என்று தற்போது 86 வயதாகும் முகமது அலி கூறுகிறார்.
அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் ஆர்தர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் மணிக்கூண்டை திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை அணிவிப்பதற்குத் தனது தந்தை அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாக முகமது அலி, திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைக் காண்பித்தார்.

"துனீசிய வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகங்களை இப்போதும் பார்க்க முடிகிறது.
அப்துல் காதர், இதைத் தனது சொந்தச் செலவிலேயே முற்றிலும் கட்டியிருந்தாலும், அப்போதே நகராட்சியின் வசம் இதை ஒப்படைத்துவிட்டதாகக் கூறுகிறார் அவரது மகன் முகமது அலி.

"இடைப்பட்ட காலகட்டத்தில், இந்த மணிக்கூண்டில் இருந்த கடிகாரம் பல ஆண்டுகளுக்குப் பழுதாகிக் கிடந்தது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு சரிசெய்தனர். ஆனால் இது கட்டப்பட்ட காலத்தில் எழுந்த மணியோசை என்பது வேறு. இப்போது இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு அந்தக் கடிகாரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
பிரிட்டன் பெற்ற வெற்றிக்காகக் கட்டப்பட்ட அந்த மணிக்கூண்டைக் கடக்கும் போதெல்லாம், தான் மட்டுமின்றி அங்கிருக்கும் அனைவருமே ஒரு நொடி அதை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் செல்லும் அளவுக்கு அதன் சிறப்பு இருப்பதாகக் கூறுகிறார் முகமது அலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












