இலங்கை: புயல், மழைக்கு நடுவில் பாதிக்கப்பட்ட மக்களின் பசியை போக்கும் மனிதநேய உள்ளங்கள்

- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கைப் பேரழிவின் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, அடுத்த நொடி என்ன செய்வதென்று அறியாது நிலைகுலைந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், பல மனிதநேய உள்ளங்களைக் களத்தில் பயணிக்கும் பிபிசி குழுவினால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
அவர்களில் ஒருவரே நநீகா.
கண்டி நகரில் இருந்து கலஹா நகருக்குச் செல்லும் பிரதான வீதியின் வெலிகல பிரதேசத்தில் நாம் அவரைச் சந்தித்தோம்.
வீதியோரத்திலுள்ள கட்டடம் ஒன்றில் சிலர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். அடுப்பொன்று எரிந்து கொண்டிருந்தது. சிலர் மரக்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
இந்த இடத்தில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் பார்ப்பதற்காக பிபிசி குழுவினர், அவர்களுடன் பேசியது.
வாகன போக்குவரத்து இல்லாமை காரணமாக சிலர் மழையில் நனைந்து கொண்டு, கண்டியில் இருந்து கலஹா நோக்கி இரவு வேளையில் சென்றுள்ளனர்.
இதை நநீகா, சுதன் உள்ளிட்ட சிலர் அவதானித்துள்ளனர்.
வெலிகல பகுதியிலுள்ள மல்லிகா என்ற பெண், தனது கட்டடத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளார்.
உடனே, விறகு அடுப்பொன்றை வீதியோரத்திலுள்ள கட்டடமொன்றில் அமைத்து, தன்னால் முடிந்தளவில் தேநீர் ஊற்றி, மழையில் நனைந்து, குளிரில் தமது உறவுகளைத் தேடிச் செல்லும் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதன்போது, சிலர் கடும் பசியில் வந்ததை அவர்கள் உணர்ந்ததை அடுத்து, தமது வீடுகளிலுள்ள உணவுகளை முதலில் வழங்கியுள்ளனர்.
இப்படியாக, நநீகா, சுதன், மல்லிகா ஆகியோரின் தலைமைத்துவத்தில் இந்தச் செயல்பாடு இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேநீர் ஊற்றி மக்களின் குளிரையும், தாகத்தை போக்குவதற்கு எண்ணிய இவர்களின் இந்த எண்ணம், பின்னர் மக்களின் பசியை ஆற்றும் அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
''இந்த ஆட்களுக்கு வெறும் தேநீர் மற்றும் கோப்பியை கொடுப்பதற்கே நாங்கள் போனோம். சாப்பிடுவதற்கு இல்லை என்று கேட்டார்கள். வீட்டிலுள்ள சாமான்களை (பொருட்கள்) கொண்டு ஆக்கினோம். சமைக்க சமைக்க ஆட்கள் வந்து பார்த்துவிட்டு, எங்களுக்கு சாமான் (பொருட்கள்) கொண்டு வந்து கொடுத்தார்கள்.
எல்லாருக்கும் நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். வருவோருக்கு விடிய விடிய சாப்பாடு கொடுத்தோம். தேநீர் கொடுத்தோம். தங்க இடம் கொடுத்தோம். விடிந்த பிறகுதான் மக்களை இங்கிருந்து அனுப்பினோம்" என்று தெரிவித்தார் சமைப்பதற்குத் தனது கட்டடத்தை வழங்கிய பெண்ணான மல்லிகா.
மேலும் அவர், "மக்கள் பாவம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவுதான். குடிக்கிறதுக்கு தண்ணீர்தான் இல்லை'' என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மக்களுக்கு தேநீர் முதல் உணவு சமைத்துக் கொடுப்பது வரை தலைமை தாங்கிச் செயல்படும் நநீகா, பிபிசி தமிழிடம் பேசியபோது, "பாதிக்கப்பட்ட மக்கள் நிறைய பேர் சாப்பாடின்றி சாலைகளில் செல்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஆரம்பித்ததே இந்தச் சமைத்து கொடுக்கும் நடவடிக்கை" என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், "ஊரில் இருக்கின்றவர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றார்கள். கிறிஸ்தவ தேவாலயத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். வீடுகளை இழந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களால் முடிந்த எல்லா சாமான்களையும் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள்.
நாங்கள் சமைத்துக் கொடுக்க, பசியாறச் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். இந்த நேரம் எங்களால் முடிந்தது அவ்வளவுதான். வீட்டு ஆட்கள் எல்லாம் சேர்ந்துதான் செய்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குவதற்குக் கொடுக்கப்பட்ட இடம்தான் இது" என்றும் அவர் விவரித்தார்.

அதோடு, முதலில் தேநீர் மட்டும் கொடுப்பதற்காகத் தொடங்கி, இரவுச் சாப்பாடு, பகல் சாப்பாடு என்று வழங்கத் தொடங்கியதாகக் கூறும் நநீகா, "இது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று சொல்ல முடியாது. இயன்ற வரைக்கும் நாங்கள் செய்வோம்," என்று குறிப்பிட்டார்.
மேலும், தங்களின் இந்தச் சேவையால் நாளொன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் பசியைப் பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார் அவர்.
''நான் இந்தக் கட்டடத்தைக் கட்டியபோது, மக்களுக்கு இவ்வளவு உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் வருகிறார்கள். கொழும்பில் இருந்து அழுதுகொண்டே வருகிறார்கள். எங்களால் முடியுமானளவு உதவி செய்து கொடுப்போம்'' என்று மல்லிகா கூறுகின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












