You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி டெல்டா விவசாயிகளின் கோபம், தேர்தலில் எதிரொலிக்கப் போகிறதா? - பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், சாரதா.வி
- பதவி, பிபிசி தமிழ்
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. இம்முறை பரப்புரையில் பிரதான இடம் பிடிக்காத காவிரி நீர் பிரச்னை விவசாயிகளிடம் நீருபூத்த நெருப்பாக அனல் வீசுகிறது. தாங்கள் வேதனையுடனேயே வாக்களிக்க உள்ளதாக கூறுகின்றனர் டெல்டா விவசாயிகள்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். காவிரி நீரை பிரதானமாக நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை சோழர் காலம் முதலே விவசாயத்திலும் நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கிய பகுதி.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள தஞ்சையை சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதியை ‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்று கர்வத்துடன் கூறுவார்கள். ஆனால், இன்று அவர்கள் நீரின்றி விரிசல் விட்ட நிலங்களில் நின்று, காவிரி ஆற்றையும் வானத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் திருவிழாவில் விவசாயிகளின் குரல் பெரிதாக ஒலிக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது. இருப்பினும் தஞ்சை பகுதியில் வாழ்வாதார பிரச்னை பிரதானமாகவே உள்ளது.
டெல்டாவில் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பயிரிடப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கரில் குறுவை பயிரும் மற்ற நிலத்தில் சம்பா பயிரும் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் ஆறு லட்சம் விவசாயிகள் சொந்த நிலம் கொண்டு உழுகிறார்கள். கடந்த ஆண்டு சம்பா பயிர் செய்ய நீர் கிடைக்காததால், கிட்டத்தட்ட 40% நிலம் பயிர் செய்யப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தைத் தவிர பெரிய தொழிற்சாலைகள், தொழில்நிறுவனங்கள் இந்த பகுதிகளில் கிடையாது. அதனாலேயே விவசாயம் முக்கிய இடம் பெறுகிறது.
கடன் வாங்கி கடனை செலுத்தும் நிலை
தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது களிமேடு என்ற கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் கணேசன் பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர். காய்ந்த வயல்களை பார்த்துக்கொண்டு நின்றவர், தனது 12 வயது மகள் கொண்டு வந்து கொடுத்த ஒரு குவளை நீரை நம்மிடம் கொடுத்தார்.
“எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. தண்ணீர் இல்லாததால் எல்லாமே தரிசாக கிடக்கிறது. மூன்று லட்சம் ரூபாய் கடன் அடைக்க வேண்டும். பொதுவாக ஜனவரி மாதம் அறுவடை செய்வோம். மார்ச் மாதம் கடன் செலுத்தி முடிக்க வேண்டும். ஆனால், கையில் எதுவும் பெரிதாக மிச்சம் இருக்காது. அதனால் வெளியில் வட்டிக்கு வாங்கி, வங்கிக் கடனை அடைத்துவிட்டு, அடுத்து ஒரு வாரத்தில் மீண்டும் வங்கியில் கடன் வாங்குவோம். வெளியில் வாங்கிய கடனுக்கு வட்டி அடைக்கவே சரியாக இருக்கும். இந்த வருஷம் விவசாயம் இல்லாததால் வட்டிக்குக் கடன் கிடைப்பது கூட கஷ்டமாக இருக்கிறது” என்றார்.
தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை நெருங்கும் போது சாலையின் இருபுறமும் வெடித்த நிலங்கள், அவற்றில் எரிக்கப்பட்ட களைகளை காண முடிந்தது.
“இடது பக்கம் இருப்பது கட்டளை கால்வாய் பாசனப் பகுதி, வலதுபுறம் இருப்பது உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் பாசனப்பகுதி. இந்த நிலங்கள் தண்ணியைப் பார்த்து சரியாக ஒரு வருஷம் ஆகிறது” என்று காண்பிக்கிறார் அப்பகுதியை சேர்ந்த பாஸ்கரன்.
மாடுகளை விற்கும் விவசாயிகள்
செங்கிப்பட்டி, ராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாழவந்தான் கோட்டை ஏரி நிரம்பி, அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் நீர் கிடைக்கும். இந்த பகுதி அமைந்துள்ள இடத்தின் காரணமாக, மேட்டூரில் 100 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசன நீர் கிடைக்கும். இங்கு வசிக்கும் 70 வயது எம். முத்து நம்மிடம் பேசினார்.
ஊருக்கு நடுவே உள்ள கோவிலில் அமர்ந்திருந்த முத்து, “இங்கிருக்கும் பத்து ஊருக்கும் கால்வாய் தண்ணீர் மட்டுமே போதாது, மழையும் வந்தால் தான் விவசாயம். இங்கு எப்போதும் ஒரு போகம் தான் செய்யப்படும். ஒரு ஏக்கருக்கு 65 கிலோ மூட்டைகள் 30 கிடைக்கும். ஒரு வருஷமாக எதுவும் இல்லை. என் பிள்ளைகள் இரண்டு பேர் பக்கத்தில் இருக்கும் கம்பெனிக்கு வேலைக்கு செல்கின்றனர். அததை வைத்துத்தான் சாப்பிடுகிறோம். சித்திரை 1, தமிழ் புத்தாண்டு அன்று, கோவிலுக்குப் போகக்கூட காசு இல்லாமல் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.
அதேபகுதியில் வசிக்கும் பாஸ்கரன், “விவசாயம் செய்யாததால் நிலத்தில் களைகள் நிரம்பியுள்ளன. ஒரு ஏக்கர் மட்டும் வைத்திருந்தால் நாங்களே இறங்கி களை எடுத்துவிடுவோம். ஆனால், ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் வைத்திருப்பவர்கள் ஆட்கள் வைத்துத்தான் செய்ய வேண்டும். அவற்றை அகற்றவே ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 செலவாகும். ஆடு, மாடுக்கும் தண்ணீர் இல்லை. அதனால் சில பேர் மாடுகளை விற்கின்றனர்.” என்றார்.
“மறைமுகமாக நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்"
இந்த பாசனப்பகுதிகளில் இருக்கும் பலர், கட்டட வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறு, குறு, பெரிய விவசாயிகள் என, 80 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இவர்களின் வாக்குகள் நிச்சயமாக தேர்தலில் முக்கியமானது. இவர்களுக்கு பிரதானமான பிரச்னை காவிரி நீர். கர்நாடகாவில் தொடங்கும் காவிரி நீரை நம்பி தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உள்ளன.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டு விவசாயத்துக்கு பேராபத்தாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் விவசாயிகள். அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படவில்லை என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர். 1964-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணையை ஒகேனக்கலில் கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
“இப்பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. நிலத்தைத் தோண்டுவார்கள், எதற்காக என்று கேட்டால் வேறு ஏதாவது காரணம் கூறுகிறார்கள்” என்று கூறுகிறார், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வி கண்ணன்.
இதற்கு அடுத்தபடியாக உள்ள விவசாயிகளின் பிரச்னை கொள்முதல் மற்றும் விற்பனை. டெல்டாவில் நெல், பருத்தி, கரும்பு, வாழை, நிலக்கட்டை, பச்சைப் பயிர், கருப்பு உளுந்து பயிரிடப்படுகின்றன. பச்சைப் பயிர் மற்றும் உளுந்து நஞ்சை தரிசு நிலங்களில் விளையக் கூடியவை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களே தற்போது டெல்டா மாவட்டங்கள் ஆகும்.
தென்னை விவசாயத்திற்கு மாறிய விவசாயி
தென்னை விவசாயம் அதிகமாக செய்யப்படும் பகுதி ஒரத்தநாடு அருகில் உள்ள கக்கரை. ஒரத்தநாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 1,444 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வந்தது. இன்று இங்கு 600 ஏக்கரில் தென்னை வளர்க்கப்படுகிறது.
அங்கு நாம் சந்தித்த தென்னை விவசாயி சுகுமாறன், “தண்ணீர் இல்லாததால், நெல் பயிர் செய்து வந்த நான் கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டேன். நெல்லுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தென்னைக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் தேவைப்படும். ஒரு தேங்காய் பறித்து, அதை உரித்து விற்பனைக்குக் கொண்டு வரும் விவசாயிக்கு ரூ.5 முதல் ரூ.6 தான் கிடைக்கிறது.
ஆனால், சந்தையில் ஒரு தேங்காய் ரூ.30 வரை பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. இடையில் இடைத்தரகர்களுக்கு ரூ.25 எடுத்துக் கொள்கிறார்கள். அரசை கொள்முதல் செய்ய சொல்கிறோம். செய்வதில்லை” என்றார்.
கக்கரையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லும் வழியில் சில பகுதிகளில் இருபுறம் பசுமையாக நெல்பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன. காவிரி ஆற்றை மட்டும் நம்பியில்லாமல் ஆழ்துளை கிணறுகள் போட முடிந்த விவசாயிகள் பயிர் செய்ய முடிகிறது. ஆனால், கடைமடை நோக்கிச் செல்ல செல்ல நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.
கீழ்வேளுர் டவுனுக்குள் நுழையும் போது, கடைத்தெருவில் தமிநாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் மூத்த விவசாயி தனபாலை சந்தித்தோம்.
வெயிலில் களைப்புடன் வந்த நமக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். “தண்ணீர் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அவர் கொடுத்தது உப்புத்தன்மை மிகுந்த நீர். “இது தான் இங்கு குடிநீர். கடல் நீர் பூமிக்குள்வந்து குடிநீரையும் மண்ணையும் பாழாக்கிவிட்டது. இதனால் நாகப்பட்டினத்தில் பயிரிடப்படும் 8,300 ஹெக்டேர் நிலத்தில் 57% மலட்டுத்தன்மை நோக்கிச் செல்வதாக வேளாண் பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது” என்றார்.
கீழ்வேளுரில் வசிக்கும் கௌதமன் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். “இந்தப் பகுதியில் முறை பாசனம் தான் இருக்கிறது. அதாவது, ஒரு வாரம் எங்கள் நிலத்திற்கு தண்ணீர் கிடைக்கும். அடுத்த ஒரு வாரம் வேறு பகுதிக்கு வழங்கப்படும். நாற்பது நாள் வளர்ந்த பயிருக்கு 20 நாள் தான் தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதனால் நன்றாக துளிர்த்து வராது. வழக்கமாக ஒரு ஏக்கரில் 40-45 மூட்டை நெல் கிடைக்கும். இந்த ஆண்டு 15 மூட்டை தான் கிடைத்தது” என்றார்.
நம்மிடம் மேலும் பேசிய தனபால், “நாகப்பட்டினம் தொகுதியில் 80% விவசாயிகள். இதில் சுமார் 13.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே தொழிலாளர் நெருக்கம் அதிகமாக கொண்ட மாவட்டம். ஆனால், எந்தவித நீராதாரமும் இல்லாத மாவட்டமும் இது தான். இந்த மாவட்டத்தில் 1200 மி.மீ மழை சராசரியாக பெய்கிறது."
"100 ஏக்கர் முதல் 3ஆயிரம் ஏக்கர் வரையிலான பரப்பளவு கொண்ட 14 ஏரிகள் இங்கு உள்ளன. இவற்றை தூர்வாரினாலே ஒரு டி.எம்.சிக்கு மேல் நீர்தேக்க முடியும். ஆனால், பல ஆண்டுகளாக செய்யவில்லை. திருவையாற்றில், சோழர் காலத்தில் உருவாக்கிய செயற்கை மழைநீர் கிணறுகள் உள்ளன. ஆற்றின் உள்ளே இருக்கும் கிணறுகள், உபரிநீரை உள்வாங்கிக் கொள்ளும். அதுபோன்ற எந்த கட்டமைப்புகளும் ஏற்படுத்தவில்லை. எதுவுமே செய்யாமல் விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று அரசியல் கட்சிகள் கூறுவது முற்றிலும் பொய்” என்றார்.
மேலும்,“பணத்தின் மதிப்பு குறையும் போது பொருளின் விலை கூடும். இது தான் பொருளாதார நியதி. ஆனால் 1960களில் ஒரு மூட்டை நெல் கொண்டு 12 ஜோடி பேருக்கு சம்பளம் கொடுக்க முடிந்தது. தற்போது அதை கொண்டு ஒரு ஜோடிக்கு கூட கூலி கொடுக்க முடியவில்லை. ஆறாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகள் படி, விலை உயர்வுக்கு ஏற்ப 60 கிலோ அரிசி கொண்ட ஒரு மூட்டை ரூ.16,500 விற்க வேண்டும், ஆனால் ரூ.1460க்கு தான் விற்கிறோம். 15 ஆயிரம் ரூபாய் விட்டுக் கொடுத்து இருக்கிறோமே விவசாயிகள், நாங்கள் தியாகம் செய்யவில்லையா?” என்றார்.
காவிரி எப்படி இருக்கிறது?
திருவையாறில் காவிரி ஆற்றிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த வாழைத்தோப்புக்குள் நுழைந்தோம். ஆங்காங்கே நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் வெயிலிலிருந்து சற்று விடுதலை கொடுத்தன. தோப்புக்கு இடையே சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மயில்கள் அகவும் சத்துக்கு இடையே வாழை விவசாயி மதியழகனை சந்தித்தோம்.
“வாங்க, காவிரியை பாத்துவிட்டு வருவோம்” என்று அழைத்துச் சென்றார். முழுக்க வறண்ட காவிரி. எனினும் இந்தப் பகுதியில் 20 அடியிலேயே தண்ணீர் கிடைப்பதால் வாழை விவசாயம் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
“திருக்காட்டுப்பள்ளி, கோவிலடி, கணபதி அக்ரஹாரம் என இந்த பகுதியில் 2.5 கோடி வாழை மரங்கள் உள்ளன. சூரைக்காற்று, புயல், கனமழை பெய்தால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் இழப்பு ஏற்படும். மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டால் தான் இழப்பீடு தருவோம் என்று அரசு கூறுகிறது. இப்போது சில கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் வேறுபடுகின்றன” என்றார்.
தஞ்சாவூரில் உள்ள வழக்கறிஞர் ஜீவகுமார் கூறுகையில், கர்நாடகத்தில் விவசாயிகள் தனிப்பட்ட அமைப்புகளாக உள்ளனர். அரசியல் கட்சிகளின் கீழ் அவர்கள் கட்டிப்போடப்படவில்லை. விவசாயிகள் எதிர்ப்பு தற்போதைய அரசியல் சூழல் காரணமாக அழுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் வெகு காலம் வைக்க முடியாது.
பசி, தாகம் வெளியே வந்து தான் தீரும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தை பாலைவனமாக்க போகிறார்கள் என்று தானே அர்த்தம்? ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கிறோம் என்ற காரணத்துக்காக கூட, மேகதாது அணை விவகாரத்தை தள்ளி வைக்க கர்நாடக காங்கிரஸ் தயாராக இல்லை. தமிழ்நாடு இதில் போதிய முனைப்பு காட்டவில்லை. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் போராடுவதற்கு கூட உரிமை இருக்காது என்று அச்சம் உள்ளது. எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் பிரச்னைகள் இந்த தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்கலாம். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குள் பெரும் போராட்டங்கள் வெடிக்க உள்ளன" என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)