மனைவியைக் கொடூரமாக அடித்துக் கொன்ற முன்னாள் அமைச்சர் - கஜகஸ்தானை புரட்டிப்போட்ட கொலை வழக்கு

    • எழுதியவர், ஸோஃபி அப்துல்லா&சின்பெட் டோகோயேவா
    • பதவி, பிபிசி நியூஸ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

கஜகஸ்தானில் முன்னாள் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட பரபரப்பான கொலை வழக்கு லட்சக்கணக்கான மக்களால் கவனிக்கப்பட்டது. கூடவே, அந்நாட்டின் குடும்ப வன்முறை பிரச்னையை அது முன்னிலைப்படுத்தியது.

ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அரசியல்வாதி ஒருவர் அவரது மனைவி கொலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நாட்டில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றம் வெளிச்சம் போட்டுக் காட்டிய உண்மைகள் மிகவும் பயங்கரமானவை.

அந்நாட்டின் முன்னாள் பொருளாதார அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ் அவரது மனைவி சல்தனத் நுகினோவாவை அடித்துக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் ஓரளவு பதிவாகியுள்ளன.

வீடியோவில் இருந்தது என்ன?

கஜகஸ்தானின் உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:15க்கு, தலைநகர் அஸ்தானாவில் உள்ள ஒரு உணவகத்தின் சிசிடிவியில், குவாண்டிக் பிஷிம்பாயேவ் தனது மனைவி சல்தனத் நுகினோவாவை அடித்து உதைப்பது மற்றும் அவரது தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அடுத்த 12 மணிநேரத்தில் என்ன நடந்தது என்பது அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. இதில் நீதிமன்றத்திற்குக் காட்டப்பட்ட சில காட்சிகள் அவரது சொந்த கைப்பேசியில் படம்பிடிக்கப்பட்டவை. ஆனால் பொதுமக்களுக்கு அவை காட்டப்படவில்லை.

அந்த ஆடியோவில் பிஷிம்பாயேவ், சல்தனத்தை அவமதிப்பதும், வேறொரு நபர் பற்றி அவரிடம் கேள்வி கேட்பதும் பதிவாகியுள்ளது. கேமராக்கள் இல்லாத வி.ஐ.பி அறையில் அவரது மனைவி மயக்கமடைந்திருந்த நிலையில் பிஷிம்பாயேவ் பலமுறை ஒரு ஜோதிடரை அழைக்கும் காட்சியும் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்ட விரிவான தடயவியல் பரிசோதனை அறிக்கையின்படி, வெளிப்புறக் காயங்கள், கீறல்கள் மற்றும் தாக்குதல் காயங்கள் ஆகியவற்றின் விளைவாக சல்தனத்திற்கு மூளையில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. அவரது மண்டை ஓட்டின் மேற்பரப்புக்கும் மூளைக்கும் இடையே 230 மில்லி லிட்டர் ரத்தம் தேங்கியிருந்தது. கழுத்தை நெறித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிஷிம்பாயேவின் உறவினர், பக்ஸான் பாய்ஷெனோவ், அந்த உணவகம் அமைந்துள்ள வளாகத்தின் இயக்குநர். குற்றத்தை மறைத்ததற்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிஷிம்பாயேவ், சிசிடிவி பதிவுகளை நீக்குமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதாக விசாரணையின்போது அவர் கூறினார்.

மே 13ஆம் தேதி அஸ்டானாவில் உள்ள உச்சநீதிமன்றம் 44 வயதான குவாண்டிக் பிஷிம்பாயேவுக்கு, 31 வயதான சல்தனத்தை கொலை செய்த குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஆனால் கஜகஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் இணையரின் கைகளால் இறக்கிறார்கள்.

இவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவது அவ்வளவு எளிதல்ல. கஜகஸ்தானில் குடும்ப வன்முறை வழக்குகளில் நான்கில் ஒன்றில் மட்டுமே நீதி கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

பல பெண்கள் புகார் அளிக்க மிகவும் பயப்படுகிறார்கள். கஜகஸ்தானின் பெண்கள் "முன்பும் கதறியிருக்கிறார்கள், ஆனால் அவர்களின் சத்தத்தை இதுவரை யாரும் கேட்கவில்லை," என்று சல்தனத்தின் சகோதரர் குறிப்பிட்டார்.

ஜோதிடத்தின் மீதான ஆர்வம்

சல்தனத்தின் குழந்தைப் பருவம் ரஷ்யா-கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வடகிழக்கு நகரமான பாவ்லோடரில் கழிந்தது.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர் முன்னாள் தலைநகரான அல்மாட்டிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் தனது மூத்த சகோதரர் ஐட்பெக் அமங்கெல்டியுடன் சிறிது காலம் வாழ்ந்தார். "எங்கள் உறவைப் பொருத்தவரை, அந்தக் காலம் விலைமதிப்பற்றது," என்று ஐட்பெக் கூறினார், சிறுவயது முதலே தாங்கள் நெருக்கமாக இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

குவாண்டிக் பிஷிம்பாயே, சல்தனத் நுகினோவாவை கொலை செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பிஷிம்பாயே 2017இல் லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இறுதியில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான சிறைவாசம் அனுபவித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் சல்தனத் ஜோதிடராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவரை வளர்த்த பெண்மணி ஜோதிடம் பற்றிய புத்தகத்தை சல்தனத்திற்கு பரிசாகக் கொடுத்தபோது அவருக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது என்று அவருடைய சகோதரர் கூறினார்.

"பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் பெண்களுக்கு அவர் உதவினார். குடும்ப உறவுகளில் பிரச்னைகள், திருமணத்தில் உள்ள பிரச்னைகள், குழந்தைகளுடனான பிரச்னைகள் என்று எந்தவிதமான பிரச்னைகளையும் தீர்க்க உதவி செய்தார்,” என்றார் அவர்.

எப்போதும் மகிழ்ச்சியாக புன்னகையுடன் இருக்கும் தனது சகோதரியை நினைவுகூர்ந்த ஐட்பெக், ஜோதிடப் பள்ளியைத் திறக்கும் அவரது கனவு பற்றியும் குறிப்பிட்டார்.

'கொடூரமான கொலை'

பிஷிம்பாயேவ் சல்தனத்தை சந்திக்க முயன்றார் என்றும், சல்தனத் முதலில் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் என்றும் தனது சாட்சியத்தில் ஐட்பெக் தெரிவித்தார்.

"நீண்ட உணர்ச்சிமிக்க சந்திப்புகளுக்குப்" பிறகு பிஷிம்பாயேவால் சல்தனத்தின் தொலைபேசி எண்ணைப் பெற முடிந்தது என்று அவர் கூறினார். பிஷிம்பாயேவ் தன்னைச் சந்திக்குமாறு சொன்ன செய்திகளையும், தன்னைப் பற்றி எழுதப்பட்ட மற்றும் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட செய்திகளையும் தன் சகோதரி தன்னிடம் காண்பித்ததாக ஐட்பெக் கூறினார்.

இந்தச் சந்திப்பு நடந்த சில மாதங்களில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சிக்கல்கள் தொடங்க அதிக காலம் ஆகவில்லை.

சல்தனத் தனது காயங்களின் படங்களை சகோதரரிடம் பகிர்ந்து கொண்டார். பல சந்தர்ப்பங்களில் தனது கணவரைவிட்டு வெளியேற முயன்றார். சல்தனத் விரும்பிய வேலையைச் செய்யவிடாமல் பிஷிம்பாயேவ் தடுத்தார் என்றும் இதன்மூலம் அவரைத் தனிமைப்படுத்த முயன்றார் என்றும் ஐட்பெக் குறிப்பிட்டார்.

பிஷிம்பாயேவுக்கு தண்டனை விதித்த நீதிபதி, இது ஒரு 'கொடூரமான கொலை' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும் பிஷிம்பாயேவ் அதைக் குறைத்துக்காட்ட முயன்றார். சல்தனத்தின் மரணத்திற்குக் காரணமான உடல் ரீதியான காயங்களை விளைவித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதை அவர் கடுமையாக மறுத்தார்.

நடுவர் குழு, 'உண்மைகளை ஆராய வேண்டும், பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், பிஷிம்பாயேவின் வழக்கறிஞர் ஐட்பெக்கிடம் "சல்தனத், உறவுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்புவாரா அல்லது அவர் ஆதிக்கம் செலுத்துவாரா,” என்று கேட்டார்.

"நீங்கள் உண்மையிலேயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களா?" என்று ஐட்பெக் பதிலளித்தார்.

புதிய 'சல்தனத் சட்டம்'

இந்தக் கேள்வி கேட்கப்பட்ட முறையானது, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இயக்குநரான டெனிஸ் கிரிவோஷீவை ஆச்சரியப்படுத்தவில்லை.

"குற்றவாளியை 'தூண்டும்' விதமான நடத்தைக்காக பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படலாம். குடும்பத்தை அழித்ததாக, கணவன் அல்லது கணவனின் பெற்றோரை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"குடும்ப வன்முறையைப் பற்றி புகாரளிக்க தைரியம் தேவை. மேலும் இது மிகவும் குறைவாகவே புகார் செய்யப்படுகிறது என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன,” என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் குடும்ப வன்முறையில் சுமார் 400 கஜகஸ்தான் பெண்கள் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது. ஒப்பீட்டளவில் மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் மற்றும் வேல்ஸில், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த ஆண்டில் 70 பெண்கள் கொல்லப்பட்டனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நெருக்கடி மையங்களுக்கான அழைப்புகள் 2018 மற்றும் 2022க்கு இடையில் 141.8% அதிகரித்துள்ளது என்று கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

"குடும்ப வன்முறை தொடர்பாக இப்போதும் அதிக அளவு சகிப்புத்தன்மை உள்ளது. ஆனால் அது குறைந்து வருகிறது," என்று கிரிவோஷீவ் கூறுகிறார்.

ஆனால் சல்தனத்தின் இறுதித் தருணங்கள் பற்றிய விவரங்கள் நீதிமன்ற அறையிலிருந்து நேரலையில் நாடு முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டதால், நடவடிக்கை எடுக்க அரசின் மீது அழுத்தம் அதிகரித்தது. சமூக ஊடகப் பயனர்கள் டிக்டாக் போன்ற தளங்களில் இந்த வழக்கு பற்றிப் பேசினர். மேலும் குடும்ப வன்முறை தொடர்பான சட்டத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று 150,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனுவில் கோரப்பட்டது.

ஏப்ரல் 15ஆம் தேதி அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் குடும்ப வன்முறைக்கான தண்டனையை கடுமையாக்கும் மசோதாவில் கையெழுத்திட்டார். குற்றங்களின் பட்டியலில் இருந்து 2017-இல் இது நீக்கப்பட்டிருந்தது. புதிய 'சல்தனத் சட்டம்' குடும்ப வன்முறையை கிரிமினல் குற்றமாக ஆக்குகிறது. இது முன்னர் சிவில் குற்றமாக கருதப்பட்டது. பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்காமலேயே கூட இப்போது வழக்குகள் திறக்கப்படலாம்.

ஆனால் உண்மை என்னவென்றால், இத்தகைய நடவடிக்கைகள், தேவையானதை விட மிகக் குறைவு என்று கூறுகிறார், குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வுக்கு ஆளானவர்களுக்கு உதவும் NemolchikaZ அறக்கட்டளையை நிறுவிய டினாரா ஸ்மைலோவா.

தொடக்கமாக, ஒரு பெண் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கவில்லை என்றால், 'விளைவிக்கப்பட்ட தீங்கு' சிறியதாகக் கருதப்படுகிறது. எலும்பு முறிவு, உடைந்த மூக்கு மற்றும் தாடை ஆகியவை உடல்நலத்திற்கு சிறிய கேடுகள் என்று மதிப்பிடப்படுகின்றன.

தனது இளமைப் பருவத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறையில் இருந்து தப்பியதைப் பற்றி சமூக ஊடகங்களில் இடுகையிட்டு அதற்கு வந்த பதில்களைப் பார்த்து ஸ்மைலோவா 2016-இல் தனது அறக்கட்டளையை நிறுவினார். சில நாட்களிலேயே, "தாங்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், தாங்கள் பேசுவதற்கு இருக்கும் தடை மற்றும் ஆண்கள் எவ்வாறு தண்டிக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி பெண்களிடமிருந்து சுமார் நூறு செய்திகள் வந்தன," என்று அவர் கூறினார்.

‘இது ஒரு தொடக்கம்’

அரசிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாதபோதும் தனது அறக்கட்டளை 'எட்டு ஆண்டுகளாக அதிர்ச்சியூட்டும் வன்முறை வழக்குகள்' பற்றிய விவரங்களை வெளியிட்டு வருவதாக அவர் கூறினார். அவர் தற்போது கஜகஸ்தானில் வசிக்கவில்லை. தவறான தகவல்களை பரப்பியதற்காகவும், தனியுரிமையை மீறியதற்காகவும், மோசடி செய்ததற்காகவும் அதிகாரிகள் அவரை 'தேடப்படுபவர்களின் பட்டியலில்’ சேர்த்துள்ளனர்.

இத்தகைய கதைகள்தான் சல்தனத் மீது மக்களின் இரக்கத்தைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

"சல்தனத் எப்பொழுதும் நீதிக்காகப் போராடி வந்தார். அது எந்தச் சூழலில் இருந்தாலும் சரி. நியாயத்தின் மீது அவருக்கு நாட்டம் இருந்தது. யாரையாவது காயப்படுத்துவதைப் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும்போதேல்லாம் சல்தனத் அவர்களுக்காக இருந்தார்,” என்று ஐட்பெக் கூறினார்.

"இன்னும் போதுமான அளவுக்குச் சட்டங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இது ஒரு தொடக்கம். மிகவும் சக்திவாய்ந்தவர்கள் கூட தண்டிக்கப்படுவார்கள் என்பதை இது மக்களுக்குக் காட்டுகிறது,” என்றார் அவர்.

”இந்த வழக்கு, கஜகஸ்தானில் 'சட்டம் அனைவருக்கும் சமம், சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதை மக்களுக்கு காண்பிக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.