மோதி அரசு சறுக்கியது எங்கே? நாடாளுமன்ற தேர்தலில் காத்திருக்கும் 9 சவால்கள்

    • எழுதியவர், ஷூபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2019, மே 30ஆம் தேதி இந்திய பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செவ்வாய்க்கிழமை 9 ஆண்டுகளை ஆட்சிப்பொறுப்பில் நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் ஆகியுள்ளார் நரேந்திர மோதி.

இந்த 9 ஆண்டுகளில் அவர் பல சாதனைகள் படைத்திருந்தாலும் பல சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறார்.

கீழ்காணும் சாதனைகளை அவரது 9 ஆண்டுகால சாதனைகளாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

வறுமையை நீக்க ஜன் தன் யோஜனா போன்ற பல திட்டங்களை மோதி அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனோடு, அனைத்து வீடுகளிலும் கழிவறை, சுவட்ச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் ஆகியவை சில முக்கிய திட்டங்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு விரைவான வளர்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மோதி அரசைப் போல வேறு எந்த அரசும் அதிகம் கவனம் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாக இந்தியாவின் அந்தஸ்து உலக அளவில் உயர்ந்துள்ளது. இதை அவரது எதிர்ப்பாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

எந்த இடத்தில் மோதி அரசு தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது?

எனினும், சில விஷயங்களில் மோதி அரசு தோல்வியடைந்ததாக சிலர் கருதுகின்றனர்.

பொருளாதார சீர்திருத்தங்கள் - மோதி அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் இல்லை என சிலர் நம்புகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்குப் பதிலாக வேலையின்மை அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஏழைகளின் வருமானம் குறைந்துள்ளது.

விவசாயம் தொடர்பான கொள்கைகள் - மோதி அரசின் விவசாயத் துறை தொடர்பான சில கொள்கைகளிலும் சர்ச்சைகள் காணப்படுகின்றன. மோதி அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தச் சட்டங்கள் தங்களின் வருமானத்தைக் குறைக்கும் என்றும், விவசாயத் தொழிலை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்

மத விவகாரங்கள் - மோதி அரசின் ஆட்சியில் சமூகத்தில் பிளவு அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். தேர்தல் நேரங்களில் இந்து - முஸ்லிம் பிரச்னை எழுப்பப்பட்டு அது நாட்டின் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் பாதிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மோதி அரசின் முன்னுள்ள 9 சவால்கள்

மோதி அரசின் முன்னே உள்ள சவால்களை மக்கள் உற்றுக்கவனிக்கின்றனர். 2024 பொதுத்தேர்தலை வெல்வது பிரதமர் நரேந்திர மோதிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மோதி அரசின் முன் உள்ள மற்ற சவால்களைப் பார்ப்போம்

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மோதி அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

’’கர்நாடகாவில் காங்கிரஸின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மோதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பலை இருந்தாலும் மோதியால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற பிம்பத்தை கர்நாடக வெற்றி உடைத்துள்ளது. 2024ல் ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் மோதிக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். வெற்றி தோல்வியை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே தீர்மானிக்கும்’’ என்கிறார் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அசுதோஷ்.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை

கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பின்மை என்பது மோதி அரசுக்கு சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மோதி அரசின் முன் உள்ள சவால்.

விவசாயிகள் பிரச்னை

இந்திய விவசாயிகள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். விவசாயிகளின் பிரச்னைக்கு மோதி அரசு தீர்வு காண வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சுய சார்பு இந்தியா மற்றும் விநியோகம்

2020 மே 12ஆம் தேதி கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவோம் என பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

இந்த நடவடிக்கை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை பெருமளவு குறைத்து அந்நாடு மீதான நம் சார்பை பெருமளவு குறைக்கிறது. ஆனால், சீனாவுடனான இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், இந்த வர்த்தகம் ஒரு வருடத்தில் 130 பில்லியன் டாலர்களை எட்டியது.

நாட்டை உற்பத்தி மையமாக மாற்றவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் 'Production Linked Incentive' என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் அரசின் உதவியைப் பெறுகின்றன.

இதன் காரணமாக உற்பத்தி அதிகரித்து, தற்போது ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. எந்தவொரு நாடும் தன்னிறைவு பெறுவதற்கு கால அவகாசம் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெளியுறவுக் கொள்கை சவால்கள் - வரும் ஆண்டுகளில் சீனாவை கையாள்வது மோதி அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான சவாலாக இருக்கும், மேலும் சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தலைவலியாக இருக்கும் என்கின்றனர் வெளியுறவுக் கொள்கை கண்காணிப்பாளர்கள்.

மூத்த பத்திரிகையாளர் அசுதோஷ் கூறும்போது, “வெளியுறவுக் கொள்கை அளவில் சீனா அதிகரித்து வரும் தலைவலி. இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் விவகாரத்தில் இந்திய மக்களை அரசு ஏமாற்றி வருகிறது. ஒரு பொய் பரப்பப்பட்டு, சீனாவுக்குப் பாடம் கற்பித்த மோதி சூப்பர்மேன் என்று அரசாங்க ஆதரவுடன் ஊடகங்கள் கதையை உருவாக்கியுள்ளன. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை’’ என்றார்.

பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒன்றிணைப்பது பெரிய சவால்

நரேந்திர மோதி தலைமையில் இந்திய சமூகம் இந்து, முஸ்லிம், உயர் மற்றும் கீழ் சாதி என்று பிளவுபட்டுள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

’’'பிளவுபடுத்தி ஆட்சி செய்தல்’ என்பதே மோதியின் அரசியல். இயல்பிலேயே முஸ்லிம் விரோத உணர்வை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவாவால் வழிநடத்தப்படுவதால் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. எனவே அவர்கள் தரப்பில் எந்த ஒரு நல்லிணக்க முயற்சிக்கான சாத்தியக்கூறுகளும் இல்லை" என்கிறார் அசுதோஷ்.

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவை காப்பாற்றுதல் - நரேந்திர மோதியின் கீழ், ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை அவரது அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கின்றனர் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆர்வலர்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு - காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான லட்சிய இலக்குகளை மோதி அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. எனினும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளை உறுதியாக அமல்படுத்துவது அவசியம்.

ஊழல் மற்றும் தேவையற்ற அலைக்கழிப்பு - இந்தியாவில் ஊழல் மற்றும் தேவையற்ற அலைக்கழிப்புகள் இன்னும் அதிகமாக இருப்பதாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் புகார் கூறுகின்றனர். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஊழலைச் சமாளிக்கவும், அதிகாரத்துவ செயல்முறைகளை சீரமைக்கவும் மோதி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: