You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?
- எழுதியவர், பிபிசி உலக சேவை
ஒரு காலகட்டத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு ஒவ்வாதது எனக் கருதப்பட்ட ஒரு செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர்.
அதாவது ஒவ்வொரு டிசம்பர் மாதமும், மக்களிடையே ஒரு மிதமிஞ்சிய கொண்டாட்ட சூழல் இருந்தது. எனவே ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலை.
மக்களிடம் ஆடம்பர அல்லது கட்டுப்பாடில்லாத நடத்தை கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.
மது வகைகளை பரிமாறும் உணவகங்கள் உற்சாகம் கொண்ட மக்களால் நிரம்பியிருந்தன, கடைகள் மற்றும் வணிகங்கள் சீக்கிரமாகவே மூடப்பட்டன, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் விஷேச உணவுகளை சாப்பிடுவதற்காக ஒன்று கூடினர், வீடுகள் தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டன, அப்போது தெருக்களில் பாடுவது என்பது உலகின் மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றியது.
'உண்மையான' கிறிஸ்தவர்கள் யார்?
1644இல் ஆங்கிலேய ப்யூரிடன்கள் (Puritans) கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒழிக்க முடிவு செய்தனர். பியூரிடன்கள் என்பவர்கள் கடுமையான மத விதிகளின் மீது நம்பிக்கை கொண்ட புரோடஸ்டன்ட் (Protestant) கிறிஸ்தவர்கள்.
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததற்கு பைபிளில் ஆதாரம் இல்லை என கூறி ப்யூரிடன் அரசாங்கம் கிறிஸ்துமஸை ஒரு பேகன் (Pagan- கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் போன்ற ஆபிரகாமிய சமயங்களைச் சாராதவர்கள்) விடுமுறையாகக் கருதியது.
நாட்காட்டியைப் பற்றிய விஷயத்தில் அவர்கள் ஓரளவு தெளிவாக இருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை விட்டுக் கொடுங்கள் என்பது தான் பிரச்னையாக இருந்தது. இங்கிலாந்தில் 1660 வரை கிறிஸ்துமஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.
இதனால் டிசம்பர் 25 அன்றும், கடைகள் மற்றும் சந்தைகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பல தேவாலயங்கள் தங்கள் கதவுகளை மூட வேண்டியிருந்தது. கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் சட்டவிரோதமானதாக இருந்தன.
ஆனால், மக்களால் அந்தத் தடையை அவ்வளவு எளிதாக ஏற்க முடியவில்லை.
மீண்டும் ஒன்று கூடி மது அருந்த, விருந்து உண்ண, பாடல்கள் பாட, என தங்களின் சுதந்திரங்களை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
மன்னர் இரண்டாம் சார்லஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை, கிறிஸ்துமஸ் எதிர்ப்புச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை.
அமெரிக்க ப்யூரிடன்களும் விருந்து மற்றும் கொண்டாட்டங்களை வெறுத்தனர்.
இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸிலும் 1659 மற்றும் 1681க்கு இடையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடைசெய்யும் சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, பல ப்யூரிடன்கள் 'டிசம்பர் விடுமுறையை' பேகன் நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்தி வெறுத்தனர்.
இயேசுவின் உண்மையான பிறந்த தேதி என்ன?
உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.
சில இறையியலாளர்கள், 'வயல்களில் மேய்ப்பர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளை இரவில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்' என்ற பைபிள் குறிப்பை மேற்கோள் காட்டி, அது வசந்த காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு அடைக்கலம் தேடியிருக்கலாம்.
அல்லது அது இலையுதிர்காலமாக இருந்திருக்கலாம். ஆடுகளின் இனச்சேர்க்கை காலம் எனும்போது, ஏற்கனவே இனச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆடுகளை மற்றவற்றிலிருந்து பிரிக்கும் நோக்கில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கலாம்.
ஆனால் பைபிளில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பேகன் சடங்குகள்
ரோமானிய காலத்திலிருந்தே, டிசம்பர் மாத இறுதியில் பண்டிகையைக் கொண்டாடுவது என்பது பேகன் பாரம்பரியத்தின் அங்கமாக இருந்தது.
அடிப்படையில், அது ஒரு அறுவடை திருவிழா. பரிசுகள் பகிரப்பட்டன, வீடுகள் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன, உண்பதற்கு ஏராளமான உணவு வகைகள் இருந்தன மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது அந்த விடுமுறை காலத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.
வரலாற்றாசிரியர் சைமன் செபாக் மான்டிஃபியோரின் கூற்றுப்படி, "பேகன் மரபுகளில், சில 'கேளிக்கை செயல்பாடுகளில்' ஈடுபட மக்களுக்கு அனுமதி இருந்தது. இது ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. போட்டி உணர்வை அதிகரித்தது."
ரோமானியர்கள் படிப்படியாக பேகன் நம்பிக்கைகளை கைவிட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த மாற்றத்தில், கிறிஸ்தவ நாட்காட்டி படிப்படியாக பேகன் நாட்காட்டியின் இடத்தை எடுத்துக் கொண்டது.
ஒரு காலகட்டத்தில், ரோமானியர்கள் இரண்டு மரபுகளிலும் பங்கெடுத்தனர். 4ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேகன் சடங்குகள் மற்றும் கிறிஸ்தவச் சடங்குகள் ஒரே சமயத்தில் (டிசம்பர் மாதத்தில், 14 நாட்களுக்கு) நடத்தப்பட்டன.
ஆனால் இரு மரபுகளுக்கிடையே மோதல் இல்லாமல் இல்லை.
வென்றவர்களும் தோற்றவர்களும்
இறுதியில், கிறிஸ்தவம் வெற்றி பெற்றது.
17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மீது நடத்தப்பட்ட போர் என்பது, பேகன் பாரம்பரியத்தின் எச்சங்கள் என்று எதையெல்லாம் ப்யூரிட்டன்கள் கருதினார்களோ, அதை அழிப்பதற்கான அவர்களின் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது நம்மைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்தல் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகப் புரியும்.
இந்த பண்டிகை நாட்களில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை வைப்பார்கள், இறைச்சியை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார்கள், மதுவை உற்சாகமாக அருந்துவார்கள்.
அவர்களின் இந்த பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு பின்னால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறு உள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)