இது உண்மையில் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியா? ஒரு வரலாற்று ஆய்வு

    • எழுதியவர், ஜெர்மி ஹோவெல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியாக கருதப்படும் ட்யூரின் சவக்கோடி (Turin Shroud) இயேசுவின் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்களின் ஆய்வு முடிவு, முதலில் 2022 இல் வெளியிடப்பட்டது. ட்யூரின் சவக்கோடி இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இயேசு காலத்தை சேர்ந்தது அல்ல என்றும் பரவலாக சொல்லப்படும் கருத்துகளை இந்த ஆராய்ச்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஆராய்ச்சி சமீபத்தில் வைரலாகி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரிஷ் ஊடகங்களில் தலைப்பு செய்திகள் ஆகியுள்ளது.

இயேசு புதைக்கப்பட்ட போது அவர் மீது போர்த்தப்பட்ட துணி என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் ட்யூரின் சவக்கோடி, புனித துணி என்று பொருள் படும் வகையில் `புனித சவக்கோடி’ என்றும் அழைக்கப்படுகிறது.

முழு உலகிலும் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட வரலாற்றுப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ட்யூரின் சவக்கோடி என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?

ட்யூரின் சவக்கோடி என்பது 4.42 மீட்டர் (14.5 அடி) நீளம் மற்றும் 1.21 மீட்டர் (4 அடி) அகலம் கொண்ட ஒரு லினென் துணி (linen fabric) ஆகும்.

இந்த துணியில் ரத்தக் கறை படிந்துள்ளது. குழி விழுந்த கண்களுடன் தாடி வைத்த மனிதர் உடலின் முன் மற்றும் பின் புறத்தின் மங்கலான உருவம் உள்ளது.

இந்த துணியில் ஆச்சரியமான முறையில் பதிக்கப்பட்டுள்ள உருவம் இயேசுவின் உருவம் என்று பலர் நம்புகிறார்கள்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ஒத்ததாக சில அடையாளங்களும் இந்த புனித சவக்கோடியில் இருப்பதாக சில தேவாலய அதிகாரிகள் கூறுகின்றனர்.

உதாரணமாக, ரோமானிய வீரர்கள் அடித்ததில் முதுகில் காயங்கள், சிலுவையைச் சுமந்ததால் தோள்களில் காயங்கள், முள் கிரீடம் அணிந்ததால் தலையில் வெட்டுகள் ஆகிய காயங்களின் அடையாளம் இந்த புனித சவக்கோடியிலும் இருப்பதாக நம்பப்படுகிறது.

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த ஜோசப், இயேசுவின் உடலை கல்லறையில் வைப்பதற்கு முன்பு, அவரது உடலை ஒரு துணியால் சுற்றினார் என்று பைபிள் கூறுகிறது.

பிரான்சின் கிழக்கில் உள்ள லிரேயில் உள்ள தேவாலய அதிகாரியிடம் ஜெஃப்ராய் டி சார்னி என்ற வீரர் 1350களில் இந்த புனித சவக்கோடியை வழங்கினார். அந்த சமயத்தில் தான் இந்த கலைப்பொருள் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. அது இயேசுவின் அடக்கம் செய்யப்பட்ட போது அவர் மீது போர்த்தப்பட்ட துணி என்று அவர் அறிவித்தார்.

முதன்முதலில் 1389 ஆம் ஆண்டில், ட்ராய்ஸ் பிஷப் பியர் டி ஆர்சிஸ் இந்த துணி போலியானது என்று கண்டனம் தெரிவித்தார்.

1578 ஆம் ஆண்டில், இந்த ட்யூரின் சவக்கோடி இத்தாலியின் ட்யூரின் நகரில் உள்ள சான் ஜியோவானி பாட்டிஸ்டா கதீட்ரலில் உள்ள அரச தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இது விசேஷ காலங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

1988 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த துணியின் ஒரு சிறிய பகுதியில் ரேடியோகார்பன் சோதனைகளை மேற்கொண்டனர் மற்றும் இது 1260 மற்றும் 1390 பொதுக் காலத்துக்கு (Common Era) இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று முடிவு செய்தனர்.

சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ன?

இத்தாலியின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிஸ்டலோகிராஃபி (தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பகுதி) விஞ்ஞானிகள் `ட்யூரின் சவக்கோடி’ லினென் துணியில் இருந்து எட்டு சிறிய நூல்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை தேதியிட்டனர் (dated).

அவர்கள் இந்த ஆய்வு முடிவுகளை ஏப்ரல் 2022 இல் ஹெரிடேஜ் இதழில் முடிவுகளை வெளியிட்டனர். அவை சமீபத்தில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரிஷ் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

விஞ்ஞானிகள் அந்த லினென் ஆடையின் பிளாக்ஸில் (Flax : natural plant fiber) உள்ள செல்லுலோஸ் அதன் வயதுக்கு ஏற்ப எவ்வாறு சிதைந்தது என்பதை அளந்தனர். அதன் மூலம் அந்த துணியின் உற்பத்தியான காலம் கணக்கிடப்பட்டது.

புனித சவக்கோடியாக கருதப்படும் இந்த லினென் துணி வைக்கப்பட்டுள்ள வெப்பநிலை போன்ற மற்ற அளவுருக்களையும் இந்த குழு பயன்படுத்தியது. அதன் வரலாறு முழுவதும் அது 20 - 22.5C வெப்பநிலை மற்றும் 55-75% ஈரப்பதம் என்ற அளவில் வைக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் கிடைத்த டேட்டிங் முடிவுகளை வைத்து `டூரின் ஷ்ரூட்’ சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இயேசுவின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ரேடியோ கார்பன் டேட்டிங் செய்வதை விட அவர்கள் மேற்கொண்ட முறைகள் நம்பகமானவை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கைத்தறி போன்ற துணிகள் மாசுபடும் அபாயம் இருப்பதால், அவற்றில் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்வது துல்லியமற்றதாக மாறும் என்கின்றனர்.

ட்யூரின் சவக்கோடி பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை கைத்தறி நெசவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பலர் விமர்சித்தது போல் இந்த லினென் துணி இடைக்காலத்தை சேர்ந்தது அல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ட்யூரின் சவக்கோடி பற்றிய விவாதங்கள்

`ட்யூரின் சவக்கோடி’ உண்மையில் இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்ட துணி என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை.

அவர் உயிருடன் இருந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டது என்று மட்டும் உறுதியுடன் சொல்கிறார்கள்.

அவர்களின் தரவு இந்த கலைப்பொருளைப் பற்றி இதற்கு முன்பு செய்யப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இணைகிறது.

1980களில் இருந்து, 170க்கும் மேற்பட்ட ஆய்வு இதழ்களில் புனித சவக்கோடி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பலர் இது உண்மையானது என்றும் மற்றவர்கள் இது போலி என்றும் வாதிட்டனர்.

இந்த துணி உண்மையில் இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்டது என்று கருத வேண்டுமா என்பது குறித்து வாடிகன் பலமுறை தனது முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)