சென்னை ஈசிஆர் விரிவாக்கம்: போலி ஆவணம் மூலம் அரசிடமே ரூ.16 கோடி மோசடி நடந்தது எப்படி?

"சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கத்துக்காக எங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்தனர். ஆனால், போலி ஆவணங்களைக் கொடுத்த நபருக்கு 16 கோடி ரூபாயை உடனே விடுவித்துள்ளனர்" என்கிறார், சிவகணேசன்.

இவருக்குச் சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து அரசிடம் 16 கோடி ரூபாயை இழப்பீடாகப் பெற்றதாக டிசம்பர் 3-ஆம் தேதி ஒரு நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

இழப்பீடு பெறுவதற்காக 2022-ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டு சிலர் வேலை செய்துள்ளதாகக் கூறும் வருவாய்த்துறை அதிகாரிகள், 'இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' என்கின்றனர்.

மோசடியின் பின்னணியில் என்ன நடந்தது?

10 கிமீ சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்ற திட்டம்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சுமார் 10 கி.மீ சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணியில் மாநில நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதலே சாலை விரிவாக்க திட்டத்துக்காக (ECR widening project) நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையின் நில எடுப்பு மற்றும் மேலாண்மையின் சிறப்பு வருவாய் அலுவலர் (DRO) மற்றும் வட்டாட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசிடம் நிலங்களை ஒப்படைக்கும் மக்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கு 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு

இந்த நிலையில், நீலாங்கரையில் தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அரசிடம் ஒப்படைத்து சிலர் 16 கோடி ரூபாயை இழப்பீடாகப் பெற்றுவிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவில் சிவகணேசன் என்பவர் புகார் அளித்தார்.

மத்திய குற்றப்பிரிவின் நிலமோசடி புலனாய்வு காவல் ஆய்வாளர் சிவசுப்ரமணியனிடம் கடந்த ஜூன்- 4ஆம் தேதி இந்தப் புகார் மனுவை அவர் அளித்துள்ளார்.

மனுவில், 'நீலாங்கரையில் ஆர்.எம்.சி டிரேடர்ஸ் என்ற நில வணிக நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறேன். இந்நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை சில தனி நபர்களும் அரசு அதிகாரிகளும் இணைந்து மோசடியாக ஆவணங்களைத் தயாரித்து அரசிடம் இழப்பீட்டைப் பெற்றுள்ளனர்' என்று அவர் கூறியுள்ளார்.

1974 ஆம் ஆண்டு ஜி.எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பவரிடம் இருந்து 50 ஏக்கருக்கும் மேல் நிலங்களை வாங்கி கபாலீஸ்வரர் நகர் என்ற பெயரில் மனைப் பிரிவுகளாக உருவாக்கியதாக சிவகணேசன் தனது புகாரில் கூறியுள்ளார்.

'நிலத்தின் முன்புறத்தில் உள்ள சில பகுதிகளை நிறுவனத்தின் பெயரிலேயே வைத்துக் கொண்டோம். சாலை விரிவாக்கப் பணியின் போது கையகப்படுத்தப்பட்ட எங்களின் ஒரு நிலத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது சி.ஏ.நடராஜன் என்கிற நபர் ஆள்மாறாட்டம் செய்து சதி செய்துள்ளதை அறிந்தோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோசடி அம்பலமானது எப்படி?

சுப்ரமணிய ஐயரின் வாரிசுகளிடம் இருந்து அதிகார பத்திரம் (Power of Attorney) மூலம் நிலத்துக்கான உரிமையை சி.ஏ.நடராஜன் பெற்றதுபோல ஆவணங்களைத் தயாரித்துள்ளதாகவும் தனது மனுவில் சிவகணேசன் கூறியுள்ளார்.

'சுப்பிரமணிய ஐயரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் விசாரித்தபோது, அவர்கள் குறிப்பிட்ட நிலத்துக்கு எவ்வித இழப்பீடும் கோரவில்லை என்பது தெரிந்தது. ஆகவே, இந்த ஆவணங்கள் போலியானவை, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவை. இதுதொடர்பான மோசடி பரிவர்த்தனைகளும் சட்டவிரோத நடவடிக்கைகளும் நீலாங்கரையில் நடந்துள்ளன' என்று அவர் புகார் அளித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நீலாங்கரையில் எங்களுக்குச் சொந்தமான இடங்களை அரசு கையகப்படுத்திய வகையில் ஆறு கோடி ரூபாய் வரையில் இழப்பீட்டுத் தொகை வரவேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணத்தை அவ்வளவு எளிதில் பெற முடியவில்லை" என்கிறார்.

"அதிகாரிகள் அலைக்கழித்ததால் நீதிமன்றம் சென்று இழப்பீடு பெறுவதற்கான உத்தரவை வாங்கினேன். அதன்பிறகும் தாமதம் செய்தனர். 'ஏன் இவ்வளவு தாமதம்?' என விசாரித்தபோது தான் எங்கள் நிலத்தின் ஒரு பகுதியை வைத்து 16 கோடி ரூபாய் வரை மோசடியாக இழப்பீடு பெறப்பட்டிருப்பது தெரியவந்தது" எனக் கூறுகிறார்.

சிவகணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் சி.ஏ.நடராஜன் மற்றும் சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலாங்கரை சார் பதிவாளருக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி கடிதம் ஒன்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பினர்.

அந்தக் கடிதத்தில், '2024 ஆம் ஆண்டு நிலத்தை சி.ஏ.நடராஜன் என்பவர், அரசிடம் ஒப்படைக்கும் போது அளிக்கப்பட்ட சான்றுகள், வருகை புரிந்த நபர்களின் காணொளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்' என்று அதில் கூறப்பட்டிருந்தது.

'அதிகாரிகளுக்கு தொடர்பு'

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சி.ஏ.நடராஜனை கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. இவர் சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் பின்னணி குறித்த தகவலை காவல்துறை வெளியிடவில்லை.

"ஆனால், இதில் நடராஜன் மட்டுமே தனி நபராக ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கலாம்" என்று சிவகணேசன் குற்றம்சாட்டுகிறார். .

இந்த விவகாரத்தின் பின்னணியில் அளிக்கப்பட்ட ஆவணங்களை பிபிசி தமிழ் சரிபார்த்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் சுப்ரமணிய ஐயரின் வாரிசுகளிடம் இருந்து சி.ஏ.நடராஜனுக்கு அதிகார பத்திரம் (Power of attorney) வழங்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இதன்பிறகு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டங்களில் சி.ஏ.நடராஜன் பங்கெடுத்து வந்துள்ளார்" என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பத்து கோடிக்கும் அதிகமாக இழப்பீட்டுத் தொகை இருந்தால் மாநில அளவிலான கமிட்டியில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்திலும் நடராஜன் பங்கேற்றுள்ளார்." என்கிறார்.

"கடந்த ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் நடத்திய தனி நபர் இழப்பீடு கூட்டத்திலும் சி.ஏ.நடராஜன் பங்கேற்று, இழப்பீடு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆவணங்களைச் சரிபார்த்து வருவாய்த் துறை அதிகாரிகள் கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இழப்பீட்டைக் கொடுப்பதற்கு கமிட்டி ஒப்புதல் அளிக்கிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

'ரூ.16 கோடி' - உத்தரவுக் கடிதம் சொல்வது என்ன?

நடராஜனுக்கு இழப்பீடு பணத்தைக் கொடுப்பது தொடர்பாக 2023-ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள நிலஎடுப்பு மற்றும் மேலாண்மையின் தனி வட்டாட்சியருக்கு சிறப்பு வருவாய் அலுவலர் உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'நீலாங்கரை கிராம ஆவணங்களின்படி, சர்வே எண்: 88/3ல் உள்ள 1050 சதுர மீட்டர் (நில எடுப்பு பரப்புப் பகுதி 1050 சதுரமீட்டர்) சுப்ரமணிய ஐயர் பெயரில் தனி பட்டாவாக தாக்கலாகி வருவதால், அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.

'நிலத்துக்கு சதுர மீட்டருக்கு 54,729 ரூபாய் எனக் கணக்கிட்டு கூடவே நிலத்தின் (225 சதவீதம்) உயர்ந்த மதிப்பு, கட்டடம் மற்றும் மரங்களின் மொத்த மதிப்பு, அடிப்படை நில மதிப்பில் 25 சதவீத கூடுதல் இழப்பீட்டுத் தொகை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு 16 கோடியே 18 லட்ச ரூபாயை வழங்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.

'உத்தரவு கிடைத்த உடன் தனி வட்டாட்சியரிடம் அசல் பத்திரம், தாய்ப் பத்திரம், 40 வருட வில்லங்க சான்று, அசல் பட்டா, நில வரி ரசீது, வங்கிக் கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி'

சிறப்பு வருவாய் அலுவலரின் கடிதம், சி.ஏ.நடராஜனுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிகாரிகள் நடத்திய தொடர் கூட்டங்களில் அவர் பங்கெடுத்து வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வருவாய்த்துறை அதிகாரி கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணிய ஐயரின் வாரிசு ஒருவர் வசிப்பதாகக் கூறி அந்த அதிகார பத்திரம் பெறப்பட்டுள்ளது. நடராஜன் அளித்த போலி ஆவணங்களின் அடிப்படையில் நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் சாலை விரிவாக்கப் பணிகளையும் நெடுஞ்சாலைத் துறை முடித்துவிட்டது." என்றார்.

நிலத்தின் மீது 40 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று முறையாக சரிபார்க்கப்பட்டிருந்தால் அவ்வாறு இழப்பீடு அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார்.

இதையே பிபிசி தமிழிடம் தெரிவித்த புகார்தாரர் சிவகணேசன், "இழப்பீடு பெறுவதற்காகவே 2022-ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டு மோசடியை நடத்தியுள்ளனர். இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வரவேண்டும். மோசடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அதிகாரிகள் கூறும் விளக்கம் என்ன?

இதுதொடர்பாக வருவாய்த்துறையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

போலி ஆவணம் மூலம் 16 கோடி ரூபாய் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கிண்டியில் உள்ள நில எடுப்பு தனி வட்டாட்சியர் சித்ராவிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"எங்களிடம் அதுதொடர்பாக யாரும் எந்த அறிக்கையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்கும்போது விவரங்களைத் தருவோம்" எனக் கூறிய அவர், "இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"இழப்பீடு வழங்கப்பட்ட காலகட்டத்தில் பணியாற்றிய வருவாய்த்துறை உயர் அதிகாரிகளில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றொருவர் வேறொரு பிரிவில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. காவல்துறை விசாரணை முடிவில் உறுதி செய்யப்படும் தகவல்களைப் பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என, வருவாய்த்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத் துறையின் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட கோட்டப் பொறியாளர் ராஜகணபதியிடம் பிபிசி தமிழ் பேசியது. "நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டு வருகிறது. இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது." எனக் கூறினார்.

நில மோசடிப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசுப்ரமணியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "இப்போதைக்கு இதுகுறித்து பேச இயலாது." என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு