ஆட்டத்தை மாற்றிய 15 பந்துகள்: அதிரடியில் மிரட்டிய தென் ஆப்ரிக்கா தடம் புரண்டது எப்படி?

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மீண்டும் சாம்சன் - அபிஷேக் ஜோடியின் அதிரடி

கில் காலில் காயமடைந்த காரணத்தால், மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார் சஞ்சு சாம்சன். கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும், அபிஷேக்கும் சேர்ந்து ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபிஷேக், இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். யான்சன் வீசிய அந்த ஓவரில் சாம்சனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அதன் பின்னும் அவர்கள் தங்கள் அதிரடியைத் தொடர, 4.4 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை இருவரும் நாலாப்புறமும் அடித்தார்கள்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது. பவர்பிளேவிலேயே அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பத்தாவது ஓவரில் அவுட்டான சாம்சன், 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 81.7% ரன்களை பவுண்டரிகள் மூலமே எடுத்தனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டி கைவிடப்பட்டது.

கடைசி 8 ஓவர்களில் மிரட்டிய திலக் - ஹர்திக் ஜோடி

இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்கள்) தவிர்த்து, அனைத்து இந்திய பேட்டர்களுமே களமிறங்கியது முதலே அதிரடி காட்டினர். அபிஷேக், திலக் இருவரும் தங்களின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, ஹர்திக்கும் துபேவும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்கள். குறிப்பாக திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காட்டிய அந்த அதிரடி அணுகுமுறை இந்தியாவை ஒரு மிகப் பெரிய இலக்கை நோக்கி பயணப்பட வைத்தது.

வேகம், சுழல் என எந்த பந்தாக இருந்தாலும் இருவரும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தனர். திலக் வர்மா மைதானத்தின் நாலாபுறமும் 360 டிகிரியில் பந்துகளை விளாசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 'ரிவர்ஸ் ஸ்வீப்' என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 'ரேம்ப் ஷாட்' ஆடினார். பந்துகள் ஒவ்வொன்றையும் சரியாக அவர் அடிக்க, எல்லாம் பவுண்டரிக்குப் பறந்தன. அதனால், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் அவர்.

மறுபுறம் தன் அசாத்திய பலத்தால் பவுண்டரிகள் விளாசிக் கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், பதினாறு பந்துகளிலேயே அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இது.

இந்த ஜோடி களத்தில் இருந்தது 7.2 ஓவர்கள் தான். ஆனால், அதில் அவர்கள் அடித்தது 105 ரன்கள். அவர்கள் ஜோடி சேரும்போது 9.45 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், கடைசி ஓவரில் அவர்கள் பிரியும்போது 11.28 ஆக உயர்ந்திருந்தது. அதனால் தான் இந்தியாவால் 231 என்ற இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது.

ஹர்திக் பாண்டியா 63 ரன்களிலும் (25 பந்துகள்), திலக் வர்மா 73 ரன்களிலும் (42 பந்துகள்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்திக் மற்றும் திலக் இருவரின் அதிரடியால் 231 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா

15 பந்துகளில் ஆட்டம் மாறியது எப்படி?

பெரிய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக் பெரும் நம்பிக்கை கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், அந்த அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். அதனால், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஒருபக்கம் தடுமாறிய போதும் கூட பவர்பிளேவிலேயே அந்த அணி 67/0 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

ரீஸா ஹெண்ட்ரிக்ஸை வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற, அதன்பிறகு களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரெவிஸ், டி காக் உடன் இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். வருண் வீசிய இன்னிங்ஸின் 9வது ஓவரில் இருவரும் இணைந்து 23 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் வீசிய அடுத்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட, 10 ஓவர்கள் முடிவில் 118/1 என நல்ல நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா.

தேவைப்படும் ரன்ரேட்டை விட அந்த அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்ததாலும், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததாலும், அவர்களால் இலக்கை சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அதையெல்லாம் அடுத்த ஓவர் பந்துவீச வந்த ஜஸ்ப்ரித் பும்ரா உடைத்தார். 11வது ஓவரை வீசிய பும்ரா, டி காக் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் பிரெவிஸ் சிங்கிள் எடுக்க, டி காக் ஸ்டிரைக்குக்கு வந்தார். அப்போது பும்ரா ஒரு பவுன்சரை வீச, நடுவர் அதை வைட் என அறிவித்தார். அடுத்ததாக யார்க்கர் லென்த்தில் சற்று மெதுவாக பந்தை வீசி பேட்டருக்கு அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா.

'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து பும்ரா ஏற்படுத்திய கோணத்தால், பந்து பேட்டரை நோக்கி உள்ளே வந்தது. டி காக்கால் அதை சரியாக அடிக்க முடியாமல் போக, பந்து எட்ஜாகி பும்ராவின் கையிலேயே விழுந்தது. இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த டி காக் 65 ரன்களில் (35 பந்துகள்) வெளியேறினார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் 10 ஓவர்களில் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கியிருக்க, 11வது ஓவரில் பும்ராவை அழைத்துவந்தார் கேப்டன் சூர்யகுமார். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது.

அந்த ஒரு விக்கெட் தென்னாப்பிரிக்காவை சீட்டு கட்டு போல் சரியச் செய்தது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக்கின் பவுன்சரை, பிரெவிஸ் 'புல்' செய்ய, அது மிட்விக்கெட் திசையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் கையில் தஞ்சமடைந்தது. 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார் பிரெவிஸ்.

அதற்கடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை பெரும் சரிவுக்குள்ளாக்கினார் வருண் சக்கரவர்த்தி. 12வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்க்ரம் எல்பிடபிள்யூ ஆக, அடுத்த பந்திலேயே டானவன் ஃபெரீரா போல்டாகி வெளியேறினார்.

10.1 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 120/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. அடுத்த 15 பந்துகளில், 135/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அந்த அணி. பத்தாவது ஓவர் முடிவில் 11.4 ஆக இருந்த அந்த அணியின் தேவைப்படும் ரன்ரேட், 13வது ஓவர் முடிவில் 13.71 ஆக உயர்ந்தது. அந்த 15 பந்துகள் அந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் இரண்டாவது ஓவரில் 23 ரன்கள் கொடுத்திருந்த வருண், தன்னுடைய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வலுவான நிலையை அடைய உதவினார்

அதன்பிறகு மீண்டுவர முடியாத தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மொத்தம் 432 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில், 4.25 என்ற எகானமியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பால்கள். வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட் கைப்பற்றினார்.

பேட்டிங்கில் 252 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 63 ரன்கள் எடுத்ததோடு, பிரெவிஸ் விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என (நான்காவது போட்டி கைவிடப்பட்டது) இந்தியா கைப்பற்றியது. இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு