You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஔரங்கசீப்பின் அரசவையில் அவமதிக்கப்பட்டபோது சிவாஜி என்ன செய்தார்?
- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்திக்காக
ஐந்தரை அடி உயரம், விறைப்பான உடல், சூரியனைப் போன்ற முகம், ஆக்ராவுக்குள் நுழையும் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் ஒருவன். அவனுடன் எத்தனை யானைகள், எத்தனை குதிரைகள்.. எத்தனை காலாட்படை வீரர்கள்.
ஔரங்கசீப்பை சந்திக்கச் சென்று அவமதிக்கப்பட்டு, டெல்லி நீதிமன்றத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி வெளியேறியதை இப்படித்தான் விவரிக்கிறது ஒரு பண்டைய கால ஆவணம். இந்த ஆவணம் மிர்சராஜ் ஜெய்சங்கிடம் பணிபுரிந்த பிரகல்தாஸ் என்பவரால் எழுதப்பட்டது.
ஆக்ராவில் இருந்து சிவாஜி தப்பிக்கும் கதையை நாம் பலர் கேட்டிருப்போம். ஆனால் அதற்கு முன் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான முழு விவரம் அந்த கால வழக்கறிஞரின் ஆணவத்தில் உள்ளது.
இந்த ஆவணம், ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள ஆவணங்களின் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆவண அருங்காட்சியகம் பல முக்கியமான பதிவுகளை பாதுகாப்பதில் நாட்டிலேயே முதன்மையானது.
ராஜஸ்தானின் அரச குடும்பங்களின் வரலாற்றின் பல முக்கியமான பதிவுகள் இங்கே உள்ளன. ஆனால், இதில் முக்கியமானது சத்ரபதி சிவாஜி, ஔரங்கசீப் மற்றும் பின்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வரலாற்றை விரிவுபடுத்தும் ஒரு சிறப்பு பகுதி.
ராஜஸ்தானின் அரச குடும்பங்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அரச குடும்பங்களின் அனைத்து ஆவணங்களும் அரசிடம் சென்றன. அதில் பல முக்கியமான பதிவுகள் இருந்தன.
அந்த அருங்காட்சியகத்தில் உள்ள பல ஆவணங்களில், பல பேப்பர்கள் மிகவும் தேய்ந்த நிலையில் இருந்தன. மிக சமீபத்திய ஆவணங்கள் கூட சீரழிந்து போகும் நிலையில், இந்த பண்டைய வரலாற்று ஆவணங்கள் மட்டும் எப்படி நல்ல நிலையில் இருக்க முடியும்?
ஆனால், இந்த முக்கியமான ஆவணங்களை ராஜஸ்தான் அரசின் தொல்லியல் துறையினர் ஒவ்வொன்றாகத் தேடிப் படித்துப் பார்த்துள்ளனர்.
டெல்லி தர்பாருக்குச் சென்ற சிவாஜி அவமதிக்கப்பட்டார். சத்ரபதி சிவாஜி டெல்லியில் முகலாய அரசவைக்குச் சென்றபோது அவருக்கு மரியாதை அளிக்கப்படவில்லை, என அதனை விவரித்து பிரகலதாஸ் அந்த ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
“அவர்கள் நிற்க வேண்டிய இடத்தில் நிற்க விடாமல், ஜோத்பூர் ராஜாக்களுக்குப் பின்னால் ஐயாயிரம் மன்சப்தர்கள் வரிசையில் நிற்க வைத்தார்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு நஸ்ரானா வழங்கப்பட்டு இந்த வரிசையில் அனுப்பப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார்."
"அவர் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. ஔரங்கசீப் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரியாக என்ன நடந்தது என்று மிர்சராஜே ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கிடம் கேட்டார்,” என அப்போது நடந்ததை அந்த ஆவணத்தில் பதிவு செய்திருக்கிறார் பிரகலதாஸ்.
ராம் சிங், சிவாஜி மகராஜின் கையைப் பிடித்துக் கொண்டார். அப்போது சத்ரபதி சிவாஜி மகாராஜ், "நான் உன்னை பார்த்தேன். உன் தந்தையைப் பார்த்தேன். உங்கள் அரசரையும் கவனித்தேன். அவர்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் என்னைக் கொல்ல விரும்பினால், என்னைக் கொல்லுங்கள். சிறை வைக்க வேண்டுமானால் சிறை வையுங்கள்" என்று கூறினார். பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அரசவையை விட்டு வெளியேறினார்”.
இந்த விளக்கம் ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணத்தில் பிரகலதாஸ் பதிவு செய்துள்ளதார். இவ்விஷயத்தை ராஜஸ்தான் அரசின் தொல்லியல்துறை இயக்குநர் மகேந்திர சிங் கட்காவத் அவ்வபோது தன் பேச்சுகளில் குறிப்பிடுகிறார். இதனால், அந்த சம்பவம் இப்போது வரை உயிர்ப்புடன் இருக்கிறது.
அருங்காட்சியகத்தின் இயக்குநர் மகேந்திர சிங் கட்காவத்தின் முயற்சியால் தான் இந்த அருங்காட்சியகம் நிறுவனப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றை ராஜபுத்திர மன்னர்களின் பார்வையில் விரிக்கும் முழு பகுதியும் இங்கு உள்ளது.
அவர்களின் போர்கள், உடன்படிக்கைகள் மற்றும் துணிச்சலின் கதைகள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளது.
எதற்காக புரந்தர் உடன்படிக்கை?
அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும் ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கு உள்ள ஒரு காட்சிப்பெட்டியில் உள்ள ஒரு ஆவணம் தான் டெல்லி முகலாய அரசவைக்கு சிவாஜி மகாராஜ் சென்ற கதையைச் சொல்கிறது.
புரந்தர் உடன்படிக்கையின் போது, சத்ரபதி சிவாஜி மகாராஜ், தனது கோட்டைகள் மற்றும் ஆயுதங்களில் எவற்றையெல்லாம் கொடுக்க விரும்பினார் என்று மிர்சராஜே ஜெய்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட தாளின் உயரம் 22 அடி. இந்த புரந்தர் உடன்படிக்கை ஒப்பந்தத் தாள், மிர்சராஜ் ஜெய் சிங் என்பவரால் ஔரங்கசீப்பிற்கு அனுப்பப்பட்டது. அதை திருப்பி அனுப்பும் போது, ஒளரங்கசீப், சிவாஜி மகாராஜுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதனுடன் ஒரு மதிப்புமிக்க துணியும் அனுப்பப்பட்டது. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் பயன்படுத்தப்படும் கைரேகை பதிவும், சிவாஜி மகாராஜுக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டது.
சிவாஜிக்கு ஔரங்கசீப் எழுதிய கடிதத்தில், "இந்த உத்தரவுடன் சத்ரபதி சிவாஜியின் பெயரில் ஒரு மதிப்புமிக்க துணியையும் அனுப்பியுள்ளோம். இந்த உத்தரவுடன் எங்கள் கைரேகைப் பதிவும் உள்ளது. அவரது குற்றங்களை மன்னித்து, அவரது தவறுகளை புறக்கணித்து இந்த உத்தரவுகளை அனுப்புகிறோம்." என்று குறிப்பிட்டுள்லார்.
"இந்த ஆடையை (பேரரசர் கொடுத்த ஆடை) அவருடைய மரியாதைக்காகவும், புகழுக்காகவும் அனுப்பியுள்ளோம். அவருடைய புகழையும், புகழையும் போற்றுவதற்காகவே இந்த ஆடையை அவருக்கு அர்ப்பணிக்கிறோம். அவர் எப்போதும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார் என்ற வார்த்தையை கொடுக்க வேண்டும். அரசருக்கு சேவை செய்ய தயாராக இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்."
அத்துடன் சிவாஜிக்கு பல லட்சம் தங்கக் காசுகள் கொடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுளது.
இந்த முழு ஒப்பந்தத் தாள், ஆவணக்காப்பகத்திற்கு கிடைத்தபோது, அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
"இந்த காகிதம் மிர்சராஜ் ஜெய்சிங்குடன் ராஜஸ்தானுக்கு வந்தது, இந்த காகிதத்தை நாங்கள் பெற்றபோது, அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. நாங்கள் அதை சரியாக இணைத்தோம். அதைப் பாதுகாத்து இங்கே வைத்துள்ளோம். இது இப்போது பாதுகாக்கப்பட்டாலும், சேதத்தைத் தடுக்க அதன் காட்சிக்கு அருகில் சிறப்பு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. நாங்கள் ஒப்பந்த ஆவணத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம்,” என்றார் காப்பகத்தின் இயக்குநர் மகேந்திர சிங்.
சத்ரபதி சிவாஜியின் வீர வரலாறு என்ன?
சிவாஜி காலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய ஆவணங்களும் அந்த அவணக்காப்பகத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் மகாராஜா ராம் சிங், சத்ரபதி சாம்பாஜி ராஜுக்கு டெல்லி பேரரசரை எதிர்க்காமல் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கடிதம் எழுதியதும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.
அவருக்கு சத்ரபதி சாம்பாஜிராஜ் அளித்த பதிலும் இந்த ஆவணக்காப்பத்தில் உள்ளது.
மகாராஜா ராம்சிங்கின் கடிதத்திற்குப் பதிலளித்த சத்ரபதி சாம்பாஜி ராஜே, "நாம் எடுத்த முடிவுகளையும், நாம் இழந்ததையும் நினைத்துப் பாருங்கள். இந்த அரச வாழ்க்கையை நாம் வாழ்ந்திருக்கலாம். நம் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள், அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுகின்றன, கோயில்கள் இடிக்கப்படுகின்றன. நீங்கள் டெல்லியின் சக்கரவர்த்தியாகுங்கள், நாங்கள் உங்களோடு வருவோம், இல்லையென்றால், அதை விட்டுவிட்டு எங்களுடன் வாருங்கள்.”இவ்வாறு எழுதியுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள முதல் ஆவண அருங்காட்சியகம்
ராஜஸ்தானின் 27 அரச குடும்பங்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி இன்றும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆவணத்தையும் பாதுகாக்க இரசாயனங்கள் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அதை வாசிக்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காகிதமும் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டும் வருகிறது.
“எங்களிடம் 17 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆவணங்கள் உள்ளன. மொகலாயர்கள் ராஜபுத்திர மன்னர்களுக்கு எழுதிய ஆணைகளின் எண்ணிக்கை 327. இந்த ஆவணங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
அவை இந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மிசல் கியா ஹோடே தஸ்தூர் கோன்வாருக்கு என்ன நடந்தது என்பதை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது,” என்றார் மகேந்திர சிங் கட்காவத்.
இன்றும் புதிய கட்டுரைகள் ஆய்வாளர்களின் கைகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. ராஜபுத்திரர்களின் பார்வையில் இருந்து வெளிவரும் இந்த மராட்டிய வரலாறு எதிர்காலத்தில் வரலாற்றின் முக்கியமான பக்கங்களை வெளிப்படுத்தக்கூடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)