You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பூர் அவிநாசி கோவிலில் சிலைகள் சேதம் - கொள்ளை முயற்சியா என சந்தேகம் - பிடிபட்ட நபர் யார்?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான கோவிலில் இன்று காலையில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள் வழக்கம் போல் கோவில் நடையை திறந்துள்ளனர். அப்போது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும்கோவிலுக்குள் இருந்த இரண்டு உண்டியல்களை உடைக்கவும் முயற்சி நடந்துள்ளது.
மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் மற்றும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. சாமி சிலைகள் மீது இருந்த துணிகள் மற்றும் அருகில் இருந்த பொருட்கள் களையப்பட்டுள்ளன.
முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் கோவில் பொருட்களும் காணவில்லை. இதனைக் கண்ட அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கோவில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து களவு போன வேல் மற்றும் இதர பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அவிநாசி கோவிலில் இன்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை, பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பிறகு அர்ச்சகர்கள் கோவிலை சுத்தம் செய்தனர்.
போராட்டத்தில் இந்து அமைப்புகள்
இந்த நிலையில் கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றதை கண்டித்து இந்து அமைப்புகள் அவிநாசி கோவில் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், ”நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது.
ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை. கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது.
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவில் நிர்வாகம் என்ன சொல்கிறது?
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவிலில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை. கோவிலுக்குள் நுழைந்த நபர் நாயன்மார்கள் சிலைகளை சிறிய அளவில் சேதப்படுத்தியுள்ளார். சுவாமி சிலைகள் மீது இருந்து துணிகளையும் கலைத்துள்ளார். பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை. காவல் துறையில் புகார் கொடுத்துள்ளோம். கோவிலில் பாதுகாப்பு குறைபாடு என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லை,” என்றார்.
அவிநாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில்,“நேற்று இரவு கோவில் வளாகம் மூடப்படுவதற்கு முன்பு கோவிலுக்கு முன்பு உள்ளே வந்து தங்கியுள்ளார். கோவில் மூடப்பட்ட பிறகு திருடிவிட்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் அங்கிருந்த சிலைகள் சிலவற்றை சேதப்படுத்தியுள்ள்ளார். கோவிலில் மொத்தம் 22 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அனைத்திலும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளது பதிவாகியுள்ளது. திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்காததால் கோவிலுக்கு வெளியிலும் செல்ல முடியாமல் கோபுரம் மீது ஏறி தஞ்சமடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதித்தவர் இல்லை, தெளிவாக தான் பேசுகிறார். தனிப்பட்ட செலவுகளுக்கு கோவிலில் திருட முயன்றுள்ளார். இதில் வேறு யாரும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன,” என்கிறார்.
அவிநாசி கோவிலுக்கு சொந்தமான தேர் முன்பு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அதில் அவிநாசி தேர் முற்றிலும் தீக்கு இரையானது. அதன் பின்னர் புதிதாக தேர் தயார் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் இன்றைய திருட்டு சம்பவம் பெரிய பேசு பொருள் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக கோவிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.
இதனால் இந்த சம்பவம் தொடர்பாக தவறான அல்லது பதற்றத்தை தூண்டும் விதத்தில் செய்திகள் பரவாமல் தடுக்க சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்