அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் கவசத்திற்குப் பதில் 'டீ கப்' பொருத்தப்பட்டதா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவனுக்கு ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக டீ கப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார கட்டமைப்பில், இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலையா என புருவத்தை உயர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த பள்ளி சிறுவனுக்கு மூக்கின் வழியாக மருந்து செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, அதற்கு உரிய முக கவசம் இல்லாததால், டீ கப்பில் துளையிட்டு அதன் மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன. டீ கப் கொண்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் காட்சிகள் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
பள்ளிக்கு செல்லும் முன் சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை கவனித்த தந்தை விநாயகம், சிறுவனை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு காலை 8.30 மணியளவில் அழைத்து வந்தார். பள்ளிச்சீருடையிலேயே வந்த சிறுவனுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்த செய்தி பரவலாக பேசப்பட்டு வந்ததை அடுத்து, சுகாதாரத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. சிறுவனுக்கு ஏன் டீ கப் பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது என சுகாதாரத்துறை இணை இயக்குநர், மருத்துவ ஊரக சேவைகள் உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செவிலியர் மீது நடவடிக்கை உறுதி
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செல்வி நான்கு கவசங்கள் மட்டுமே இருப்பதாகவும், அதை சுத்தப்படுத்தி தரும் வரை சிறுவனின் தந்தை காத்திருக்கவில்லை என்றும் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விளக்கிய அவர், “சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்படவில்லை. மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் நெபுலைஸ் செய்வதற்கு மருத்துவர் பரிந்துரைத்திருந்தார். இது போன்று நெபுலைஸ் செய்து மூக்கு வழியாக மருந்துகள் செலுத்த நான்கு முக கவசங்கள் உள்ளன. அன்று காலை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஒருவருக்கு நெபுலைஸ் செய்ய பயன்படுத்திய முக கவசத்தை மற்றவருக்கு பயன்படுத்தும் முன், அதிலுள்ள கிருமிகளை அழிக்க ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும். அதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும் என்பதை செவிலியர் சிறுவனின் தந்தையிடம் தெரிவித்திருந்தார்.

இதை கேட்டவுடன், சிறுவனின் தந்தை, அருகில் இருந்த டீ கடையிலிருந்து டீ கப் வாங்கிக் கொடுத்துள்ளார். ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் இது போன்று டீ கப் பயன்படுத்துவதை பார்த்திருப்பதாக தெரிவித்த சிறுவனின் தந்தை, முக கவசம் சுத்தம் செய்து தரும் வரை காத்திருக்க முடியாது என்பதால், பள்ளிக்கு நேரம் ஆகி விட்டது என கூறி டீ கப் வாங்கி வந்துள்ளார். டீ கப் பயன்படுத்துவதால் மருத்துவ ரீதியாக சிறுவனுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பதால், செவிலியர் அதை பொருத்தியுள்ளார்.
கொரோனா நேரத்தில், தொற்று ஏற்படாமல் இருக்க சில மருத்துவமனைகள் இது போன்று பயன்படுத்தியுள்ளன. எனினும் அது நிரூபிக்கப்பட்ட மருத்துவ முறை கிடையாது. நோயாளியின் உதவியாளர் கூறுவதை கேட்டு செவிலியர் அப்படி செய்திருக்கக் கூடாது. எனவே, செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முக கவசங்கள் போதிய அளவில் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
32 படுக்கைகள் கொண்ட உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், புற நோயாளி பிரிவில் சுமார் 600 பேர் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சுகாதாரத்துறை நடத்திய விசாரணையின் போது சிறுவனின் தந்தை தாமாகவே டீ கப் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனுக்கு அளித்த சிகிச்சை தனக்கு திருப்திகரமானதாக இருந்ததாகவும், யார் மீது புகார் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சிறுவன் டீ கப் உடன் இருக்கும் வீடியோவை யார் எடுத்தார்கள் என்பது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இன்று போரூரில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கவசங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.












