"அண்ணாமலை ரகசியமாக பேசும் தமிழக அமைச்சர் யார்?" நிர்மல்குமார் குற்றச்சாட்டால் தகிக்கும் பாஜக, அதிமுக

- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்துள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திரைமறைவில் மாநில அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், அதிமுக, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் எதிர்வினை விமர்சனத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த இரு கட்சிகளின் கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், கட்சியில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலும் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேகம் காட்டி வருகிறார். அதிமுக ஒட்டுமொத்தமாக தன் பின்னே திரள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், பிற கட்சி நிர்வாகிகளையும் கட்சியில் இணைத்துக் கொள்ள அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது
அதன் ஒரு பகுதியாகவே, கூட்டணி கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அடுத்தடுத்து அதிமுகவில் அவர் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.
பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பதவி வகித்த சி.டி.ஆர். நிர்மல்குமாரும் அவர்களில் ஒருவர்.
காயத்ரி ரகுராமைப் போல சி.டி.ஆர்.நிர்மல்குமாரும் பா.ஜ.க.வில் இருந்து விலகும் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
அதேநேரத்தில், நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.
அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.
அதிமுக - பா.ஜ.க. இடையிலான தற்போதைய முறுகல் நிலைக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்த சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் இது குறித்து பிபிசி தமிழ் பேசியது.
"இது திடீர் முடிவு அல்ல. நன்றாக ஆலோசித்த பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்" என்று அவர் கூறினார்.
அண்ணாமலை தொண்டர்களை வேவு பார்க்கிறார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறித்து கேட்டோம்.
"கூட்டணி கட்சியாக இருக்கும் போதே சமீப காலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அதிமுகவினர் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் பலரும் தாக்குதல் நடத்துவதுடன், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தையும் எரித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தாமல் அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் செய்யும் காரியமா இது?" என்று அவர் பதிலளித்தார்.

பட மூலாதாரம், CTR.Nirmalkumar/ facebook
திரைமறைவில் அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை பேரம் பேசுவதாக குறிப்பிட்டிருந்தீர்களே. அது யார்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
அதற்கு அவர், "என்னுடன் பயணிக்கும் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என் முடிவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியே நான் சில விஷயங்களை தெரிவித்திருந்தேன். அதைத் தாண்டி குறிப்பிட்ட அமைச்சர் யார்? என்ன நடந்தது? என்பது குறித்துப் பேசி கூடுதல் தர்மசங்கடங்களை உருவாக்க விரும்பவில்லை. அதைத் தாண்டி, என் மீதான பா.ஜ.க.வினரின் தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமாக இருக்கலாம் என்பதால் அந்த சங்கடங்களை தவிர்க்க விரும்புகிறேன்" என்றார்.
பா.ஜ.க.வில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு அதிமுகவில் இன்னும் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் வலுவான தலைவராக உருவெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படப் போவதாக அவர் கூறுகிறார்.
அதேநேரத்தில், பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்துச் சென்று அதிமுகவை வளர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்ற அண்ணாமலை விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கண்ணாடி அல்ல, கல் வீசியதும் உடைந்து விழுவதற்கு. அது சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் கல் காணாமல் போகுமே தவிர சமுத்திரம் அப்படியேதான் இருக்கும்," என்றார்.
அவர் மேலும் "அம்மாவைப் போன்ற தானும் ஒரு தலைவர் என்று அண்ணாமலை தன்னை அழைத்துக் கொள்ளக் கூடாது. செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம்" என்றும் ஜெயக்குமார் கூறினார்.

பட மூலாதாரம், வைகைச்செல்வன்/ twitter
பா.ஜ.க. - அதிமுக இடையே சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்று டி.ஜெயக்குமார் கூறினார். நம்முடன் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனும் இதையே பிரதிபலித்தார்.
"பா.ஜ.க. - அதிமுக இடையே இருப்பது தேர்தல் கூட்டணிதான். தேர்தல் அல்லாத மற்ற நேரங்களில் கட்சியை வளர்க்க ஒவ்வொருவருமே ஆசைப்படுவது இயல்புதான். தமிழ்நாட்டில் . 25 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வோம், நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்பன போன்ற பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகள் அப்படியான ஆசைகளே. ஆனால், ஆசைக்கும், குறிக்கோளுக்கும் வேறுபாடு இருக்கிறது. குறிக்கோள் என்பது நடைமுறை யதார்த்தம் சார்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் வரும் போது அவர்களிடம் அந்த யதார்த்த அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்" என்று அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படங்களை பா.ஜ.க.வினர் எரித்தது அநாகரிகம் என்று சாடிய வைகைச்செல்வன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதிர்ச்சியற்ற தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார்.
சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அதிமுக தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழ் பேசியது.
சி.டி.ஆர்.நிர்மல்குமார் கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், சுயலாபத்திற்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, கட்சி மீது நிர்மல்குமார் பழி போடுவதாக நாகராஜன் கூறினார்.
தமிழ்நாட்டு அரசியலில் கட்சி மாறுவது என்பது புதிதல்லல, செந்தில்பாலாஜி, நயினார் நாகேந்திரன், முத்துசாமி போன்ற பலரும் கட்சி மாறியவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணியைப் பொருத்தவரை அண்ணாமலையோ, எடப்பாடி பழனிசாமியோ கூறுவதே இறுதியானதாக இருக்கும். மற்ற தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகளோ, சமூக வலைதள பதிவுகளோ கூட்டணியை தீர்மானிக்காது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டணி அமைந்து பெரு வெற்றி பெற்றது. அரசியலில் ஒரேயொரு நாளில் எத்தகைய மாற்றங்களும் நடக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்ற டி.ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைவர் என்பது போல அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவர். அவர் தன்னுடைய கட்சியில் ஒரு தலைவராக, அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறார். சிறப்பாக செயல்படுகிறார். அதிமுக வங்கக்கடல் என்றால் பா.ஜ.க இந்திய பெருங்கடல் போன்றது" என்கிறார் கரு.நாகராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












