You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“என்னை காப்பாற்றிய இந்த ஹீரோக்களுக்கு நன்றி” – ரிஷப் பந்த் உருக்கம்
கார் விபத்தில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தான் “குணமடைந்து கொண்டிருப்பதாக” கூறியுள்ளார்.
அவர், “மயக்கம் ஏற்பட்ட நிலையில்” கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கடந்த மாதம் அவருடைய கார் விபத்திற்குள்ளாகி, கவிழ்ந்து தீப்பிடித்தது.
ஜனவரி 4ஆம் தேதியன்று, அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். மேலும், தலை, முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பந்த், சிகிச்சைக்கு வெற்றி கிடைத்து வருவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“அனைவரின் ஆதரவுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நான் அன்போடும் நன்றியுடனும் இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
“நலம் பெற்று மீண்டு வருவதற்கான பாதை தொடங்கியுள்ளது. வரவுள்ள சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். நம்ப முடியாத அளவுக்கு ஆதரவளித்தமைக்கு பிசிசிஐக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
“அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்கத்திற்காக எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள், உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவர்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து ஆழமான நன்றியைக் கூற விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு பதிவில், “என்னால் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூற இயலாமல் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டு ஹீரோக்களுக்கு நிச்சயமாக நன்றி தெரிவித்தாக வேண்டும்.
எனக்கு விபத்து நடந்தபோது, என்னை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராஜத் குமார், நிஷு குமார் ஆகிய இருவருக்கும் நன்றி. நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று தன்னைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரிஷப் பந்த்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்(பிசிசிஐ), முன்னர் ரிஷப் பந்துக்கு “தசைநார் கிழிந்துள்ளதற்கான அடுத்தடுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறியது.
டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டது.
25 வயதான, இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த், இந்தியாவுக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், மார்ச் மாதம் தொடங்கும் இந்த ஆண்டுக்கான தொடரில் ஆடும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளார்.
ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் விபத்து நடந்த நேரத்தில் தெரிவித்தார்.
அப்போது, ரிஷப் பந்தின் காயம் குறித்து டெஹ்ராடூன் மேஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்நிக், "ரிஷப் நிலைமை சீராக உள்ளது. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவரது காயத்தை பரிசோதித்து வருகிறது. பரிசோதனை விரைவில் முடிவடையும்.
அதன்பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். அது குறித்து மருத்துவ புல்லட்டின் மூலம் தெரிவிக்கப்படும்." எனத் தெரிவித்திருந்தார்.
கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த பந்த்
விபத்து நடந்த நேரத்தில், ஹரித்வார் எஸ்.எஸ்.பி. அஜய் சிங் பிபிசியிடம் பேசியபோது, “காலையில், 5.30 முதல் 6 மணிக்குள் விபத்து நிகழ்ந்தது. சாலையின் நடுவிலுள்ள தடுப்பு மீது கார் மோதியுள்ளது. அவர், காரின் முகப்புக் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், “மருத்துவரிடம் பேசியபோது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாகத் தெரிவித்தனர். உள்காயம் எதுவும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டார்.
“ரிஷப் பந்த் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,” என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரிஷப் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்