பிகார்: ஒரு கழுதையின் மரணத்தால் 55 பேர் மீது வழக்குப் பதிவு - ஏன்? என்ன நடந்தது?

மின்சாரம் தாக்கி கழுதை உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின்சாரம் தாக்கி கழுதை உயிரிழந்தது (சித்தரிப்புப் படம்)
    • எழுதியவர், சிட்டு திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் கழுதை ஒன்று இறந்ததை அடுத்து 55 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த வாரம் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு கழுதை உயிரிழந்தது. இதையடுத்து, பஞ்சாயத்துப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேசத் பவர் கிரிட் நிறுவனத்தின் இளநிலை பொறியாளர் அவ்னிஷ் குமார் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, 2 மணிநேரம் 26 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது, இதனால் மின்சார துறைக்கு 1,46,429 ரூபாய் இழப்பு ஏற்பட்டது" என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அரசுப் பணிக்கு இடையூறு, வருவாய் இழப்பு மற்றும் அரசு ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பாசுதேவா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வாட்ஸ் ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

பக்சர் மாவட்டத்தில் உள்ள கேசத் தொகுதியின் ராம்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த தாதன் ராஜாக் என்பவரிடம் நான்கு கழுதைகள் இருந்தன.

அந்தக் கழுதைகளை செங்கல் சூளைக்கு செங்கற்கள் முதலியவற்றை எடுத்துச் செல்ல தினமும் பயன்படுத்துகின்றார்.

இதுகுறித்து தாதன் ராஜாக் கூறுகையில், "செப்டம்பர் 11ஆம் தேதி மாலை, நான்கு கழுதைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கிராமத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. மழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியிருந்தது” என்றார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கழுதையின் உரிமையாளர்

பட மூலாதாரம், amjad

படக்குறிப்பு, ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தாதன் ராஜாக் என்பவருடைய கழுதை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

"மின்கம்பம் அருகே சென்றபோது, கழுதைகள் அந்த மின்கம்பத்தைத் தொட்டன. எப்படியோ, கிராமவாசிகளின் உதவியுடன், நான் மூன்று கழுதைகளை வெளியே இழுத்துவிட்டேன். ஆனால் ஒரு கழுதை மின்சாரம் தாக்கி இறந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

கழுதை இறந்ததையடுத்து, கிராம மக்கள் கேசத் மின்வாரியத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த நிர்வாக அதிகாரிகளிடமும் உடன்படிக்கை ஏற்பட்டது.

ஆனால் மின்வாரியத்தினர் கூறுகையில், "கிராம மக்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, கேசத் மின்வாரியத்தில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த அரசு ஊழியர்கள் சுஜித்குமார், ரவிக்குமார் ஆகிய இருவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து, மின்சாரத்தைத் துண்டித்தனர்.

பின்னர், இந்த விவகாரத்தில் ராம்பூர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் விகாஸ் சந்திர பாண்டே, விசுந்தேவ் பாஸ்வான், மஞ்சு குமாரி, ஆலம்கிர், அப்தாப் அன்சாரி மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர் மீது இந்திய நீதிச்சட்டம் மற்றும் மின்சாரச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மின்சாரத் துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது.

ஒரு வருடத்தில் ஐந்து கால்நடைகள் உயிரிழப்பு

இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து விகாஸ் சந்திர பாண்டே கூறுகையில், “மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஓராண்டில், ஐந்து கால்நடைகள் இறந்துள்ளன. மின்கம்பத்தின் இணைப்பைச் சீரமைக்க, மின்வாரியத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மின்வாரியத்தினர் அலட்சியமாக உள்ளனர்,'' என்கிறார்.

“அன்றைய தினம் (செப்டம்பர் 11) நாங்கள் யாரும் மின்சாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லவில்லை, அப்போது எப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது?

அங்கிருந்த ஊழியர்கள் மின்சாரத்தைத் துண்டித்ததால் இருள் சூழ்ந்தது. எங்களால் போராட்டம் நடத்த முடியவில்லை” என்கிறார்.

மின்சாரம் தாக்கி கழுதை உயிரிழப்பு

பட மூலாதாரம், amjad

படக்குறிப்பு, தாதன் ராஜாக்கிடம் தற்போது மூன்று கழுதைகள் மட்டுமே உள்ளன

இருப்பினும், கிராம மக்களோ அல்லது பஞ்சாயத்து பிரதிநிதிகளோ மின்சாரத் துறையிடம் கொடுத்த எழுத்துப்பூர்வ புகாரை பிபிசியிடம் வழங்கவில்லை.

பஞ்சாயத்து செயலர் ஆலம்கீர் அன்சாரி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், "கிராமத்தின் முதன்மை மின்மாற்றியின் சுவிட்ச் பழுதாகி, இரண்டு ஆண்டுகளாகிறது. புனர் யாதவ் மற்றும் ஹவில்தார் பாஸ்வானின் எருமை மாடுகளும் இதேபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், இதுகுறித்து இளநிலை பொறியாளரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் பதிவேட்டில் எழுதி வைத்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் அவ்னிஷ் குமார் கூறுகையில், "இதுபோன்ற புகார் எதுவும் இதுவரை கிராம மக்கள் தெரிவிக்கவில்லை. கழுதை இறந்த பிறகு புகார் அளித்தனர். அதன்பிறகு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி மின்கம்பத்தைச் சரிசெய்தோம். ஆனால், இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 8 ஊராட்சிகளைச் சேர்ந்த 50 கிராமங்கள் இருளில் மூழ்கின” என்றார்.

விசாரணை தொடர்கிறது

இந்த விவகாரம் பக்சர் மாவட்ட நிர்வாக வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்கப்படுகிறது.

பொறியாளர் அவ்னிஷ் குமார் கூறும்போது, ​​“இதுவரை பிகாரில் இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் கண்டதில்லை” என்றார்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து பாசுதேவா காவல் நிலையப் பொறுப்பாளர் சுன்முன் குமாரி கூறுகையில், “இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

மின்சாரம் தாக்கி கழுதை உயிரிழப்பு

பட மூலாதாரம், amjad

படக்குறிப்பு, இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களால் உற்று கவனிக்கப்படுகிறது

ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி கழுதைகளை வாங்கியதாகவும் தாதன் ராஜாக் கூறினார். ராம்பூர் பஞ்சாயத்தில் உள்ள செங்கல் சூளைகளில் ஆறு மாதங்களுக்கு செங்கல் உற்பத்தி செய்யும்போது, தன்னுடைய நான்கு கழுதைகள் மூலம் தனக்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய் வருமானம் கிடைத்ததாக அவர் கூறினார்.

மன வளர்ச்சி குன்றிய இரண்டு மகன்களின் தந்தையான தாதன் கூறுகையில், "கடந்த ஆண்டுதான் அந்தக் கழுதைகளை வாங்கினோம். தற்போது அவை மின்கம்பத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்களிடம் பணம் இல்லை. எங்களுக்கு அரசாங்கம் என்ன செய்யும்?” என்று கேள்வியெழுப்பினார்.

இதுபோன்ற நேரங்களில், மாநில மின் துறை, 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குகிறது. தாதனும் இந்த இழப்பீட்டிற்காக காத்திருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)