இரானில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, இரானில் கிஸ் பகுதியில் வசிக்கும் தங்கச்சிமடத்தை சேர்ந்த எல்ரோ, அருகில் உள்ள பகுதியில் குண்டுகள் வீசப்படுவதால் அங்கிருக்க பயமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரான் இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள் சிலரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

பிபிசி தமிழ் தொடர்பு கொண்டவர்கள் தற்போது வரை பத்திரமாக இருப்பதாகவும், ஆனால் நாடு திரும்புவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போர் சூழல் காரணமாக செல்போன் இணையம் மற்றும் செல்போன் நெட்வொர்க் முறையாக அங்கே இயங்கவில்லை. எனவே மீனவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், அவர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதும் சவாலாக இருப்பதாக, தமிழகத்தில் உள்ள மீனவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்ட போது தெரிவிக்கப்பட்டது.

இரானில் உள்ள தமிழக மீனவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்து வரும் நிலையில் விரைவில் மீனவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன உளைச்சலில் தமிழக மீனவர்கள்

இரானில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடி தொழிலுக்காக செல்வது வழக்கம்.

இரானில் கிஸ் தீவு உள்ளிட்ட தீவுகளில் நெல்லை மாவட்டம், உவரி பீச் காலனியைச் சேர்ந்த 36 பேர், தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த இனிகோ ஆகிய 37 பேர், ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, தங்கச்சிமடம், மோர்ப்பண்ணை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது இரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இரானில் உள்ள மீனவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் நெல்லை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மீனவ பிரதிநிதிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து, இரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து 37 மீனவர்களையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சுகுமார் அயலகத் தமிழர் நலத்துறையின் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதே போல் தங்கச்சிமடத்தில் தூண்டில் வளைவு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திடம் இரானில் உள்ள மீனவர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, இரானில் சிக்கியுள்ள தன் மகன் எல்ரோவை மீட்கக் கோரி அவரது தாய் ஆரோக்ய செல்வி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

உயிருக்கு பயந்து படகில் முடங்கியுள்ள தமிழக மீனவர்கள்

இரான் கிஸ் தீவில் மீன் பிடி தொழில் செய்து வரும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர் சதையூஸ் பிபிசி தமிழிடம் பேசினார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வரும் அவர், இதுவரை இப்படி ஒரு போர் பதற்றத்தை எதிர்கொண்டதில்லை என்கிறார்.

" ஒரு வாரத்திற்கும் மேலாக போர் தீவிரமடைவதால் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகிலேயே தங்கி இருக்கிறோம். என்னுடன் தமிழகத்தை சேர்ந்த பல மீனவர்கள் தங்கி உள்ளனர். நாங்கள் வாழும் பகுதியில் வானில் இருந்து குண்டுகள் விழுவது, ட்ரோன் தாக்குதல் போன்ற எந்த பாதிப்பும் இதுவரை இல்லை.

இருப்பினும், போர் தீவிரம் அடைந்தால் கிஸ் தீவு பகுதி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. தாக்குதல் நடந்தால் தீவு முழுமையாக கடும் பாதிப்பை சந்திக்கும். எனவே அதற்குள் எங்களை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தூதரக அதிகாரிகளிடம் கடந்த ஒரு வார காலமாக தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எந்த உதவியும் கிடைக்கவில்லை" என்கிறார்.

எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற மனநிலையில் அனைவரும் படகிலேயே தங்கி இருப்பதாகவும், கடந்த சில நாட்களாக இணைய வசதி இல்லாததால் குடும்பத்துடன் பேச முடியாமல் மேலும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

"சாப்பிடுவதற்கு போதிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. வெளியில் நடக்கும் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள செய்திகளை எங்களால் பார்க்க முடியவில்லை.

வரும் வெள்ளிக்கிழமை நெஞ்சடி திருவிழா (மொஹரம் போன்ற ஒரு நாள்) இரான் மக்களால் அனுசரிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன் இரானில் உள்ள மீனவர்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விடுங்கள்" என்று அரசுக்கு சதையூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, இரானின் கிஸ் பகுதியில் இருக்கும் சதையூஸ்.

அதே தீவில் மீன்பிடி தொழில் செய்து வரும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் எல்ரோ பிபிசி தமிழிடம் பேசுகையில், " போர் தொடங்கிய போது மீனவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தமிழர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கடலில் தங்கி இருக்கிறோம்." என்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், " எங்களுடைய முதலாளியிடம் கேட்கும்போது 12 நாட்களில் உங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அவர் சொல்லி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. அவர் எங்களை பத்திரமாக ஊருக்கு அனுப்புவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

நாங்கள் இருக்கும் பகுதியில் பெரிய போர் பாதிப்பு இல்லாவிட்டாலும் இரவு நேரங்களில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள அசலூயே என்ற பகுதியி தாக்குதல்கள் நடைபெறுவதாக அங்குள்ள தமிழர்கள் எங்களிடம் சொல்வதால் அச்ச உணர்வு உள்ளது" என்று எல்ரோ கூறினார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் பலரும் இரானில் கிஸ் பகுதியில் உள்ளனர்.

இரவில் வீசப்படும் குண்டுகள் - அச்சத்தில் மீனவர்கள்

இரானில் அசலூயே என்ற இடத்தில் தங்கியுள்ள மீனவர் சுதீப் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது திடீரென குண்டுகள் வீசப்படுகிறது. நான் இருக்கும் பகுதிக்கு மிக அருகே நேற்று குண்டுகள் வீசப்பட்டது. எப்போது தலை மீது குண்டுகள் விழுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து விட்டனர். நாங்களும் மீன்பிடி படகுகளுக்குள் முடங்கி கிடக்கிறோம்.

வயிற்று பிழைப்புக்காக வந்த இடத்தில் இரான் போரில் சிக்கிக் கொண்டு உயிர் பிழைத்து எப்படி இந்தியா வரப்போகிறோம் என இதுவரை இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை. உடனடியாக அரசு எங்களை மீட்டு சொந்த ஊர் அழைத்து வரவேண்டும்.

பெரும்பாலான வணிக வளாகங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என பல கடைகள் நாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மூடப்பட்டுவிட்டது. எங்களிடம் உள்ள உணவுப் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வருகிறோம். இந்திய அரசு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை விமானம் மூலம் இந்தியா அழைத்து செல்வதில் கவனம் செலுத்துவது போல் இரானில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை கப்பலில் உடனடியாக இந்தியா அழைத்து செல்ல துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, இரானில் கிஸ் கடற்கரைப் பகுதியில் கூடியுள்ள தமிழக மீனவர்கள்

1000 மீனவர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 மீனவர்கள் இரானில் சிக்கியிருக்கலாம் என்று தெற்கு ஆசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இரானில் சிக்கியிருந்த சுமார் 700 தமிழக மீனவர்களை மீட்பதில் உதவியிருந்த சர்சில், "கிஸ் பகுதியில் 700 பேர் இருப்பதாக அங்கிருப்பவர்கள் என்னிடம் பேசும் போது கூறினர். அதே போன்று அசலூயே பகுதியில் 120 பேர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிற இடங்களையும் சேர்த்து சுமார் 1000 பேர் அங்கு சிக்கியிருக்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்" என்கிறார்.

இரானில் சிக்கியிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை (INFIDET) தலைவர் ஜஸ்டின் ஆண்டனியும் இரானில் 1000 மீனவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்கிறார்.

இரானில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் என்ற அதிகாரபூர்வ தரவுகள் இல்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஆணையர், "வெளிநாடு செல்லும் அனைவரும் அரசிடம் பதிவு செய்வதில்லை. எனவே அவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே தமிழர்களுக்கான உதவி எண்ணை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா திரும்பியவர்களில் இது வரை தமிழர்கள் யாரும் இல்லை" என்றார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, தெற்கு ஆசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் சர்ச்சில்

தமிழக மீனவர்கள் ஏன் இரான் செல்கின்றனர்?

இரானில் கடற்கரைப் பகுதியிருந்தாலும் அங்கு மீன்பிடி தொழில் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு என்கிறார் சர்சில். "தென் மாவட்டங்கள் குறிப்பாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களே இரானில் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிலும், பல நாட்கள் கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடிப்பதிலும் திறன் பெற்றவர்கள்.

எனவே அவர்களில் பலர் கேப்டன்களாக உள்ளனர். இரானில் மீனவராக பணிபுரிய நேரடியான விசா வழங்கப்படுவதில்லை என்பதால், இவர்கள் துபாய் சென்று, அங்கிருந்து seamen certificate என்ற இரானில் கடல் சார் தொழிலில் ஈடுபடுவதற்கான முறையான ஆவணங்களைப் பெற்று சென்றுள்ளனர்" என்கிறார்.

இரானில் அதிக தமிழக மீனவர்கள் தங்கியிருக்கும் கிஸ் பகுதியிலிருந்து தூதரகத்தை தொடர்பு கொள்வது மீனவர்களுக்கு சவாலாக இருப்பதாக சர்ச்சில் தெரிவிக்கிறார். "கிஸ் பகுதிக்கு அருகில் பந்தர் அப்பாஸ் ( Bandar Abbas) என்ற இடத்தில் தூதரக அலுவலகம் உள்ளது. ஆனால் அங்கிருந்து மீனவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய இயலவில்லை.

அதற்கு பதிலாக இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அலுவலகத்துக்கு அவர்களை வர சொல்வதாக கூறுகின்றனர். கிஸ் பகுதியிலிருந்து டெஹ்ரான் செல்ல சாலை மார்க்கமாக 15 மணி நேரமாகும். அது ஆபத்தானதாக இருக்கும் என்று அச்சப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனவே, மீனவர்களை தொடர்பு கொண்டு, அவர்களை கணக்கெடுத்து, தேவையான ஆவணங்களை தூதரகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்" என்கிறார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என் மகன்களை பத்திரமாக அழைத்து வாருங்கள்

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வியின் இரண்டு மகன்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரானில் மீன் தொழிலுக்கு சென்றுள்ளனர். "இரண்டு ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை, கடந்த 20 நாட்களாக அவர்கள் இருவரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. இணைய சேவை முறையாக இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் என் மகனுடன் தங்கியுள்ள நண்பர் ஒருவர் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசினான். என் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் போர் தீவிரம் அடைந்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சொல்லி அழுதான்." என்கிறார்.

தன் மகன்களையும், தனது மகனைப் போல் அங்கு இருக்கும் மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கிய செல்வி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆறு மாதத்துக்கு முன் இரான் சென்ற தனது 20 வயது மகனை நினைத்து அழுது புலம்புகிறார் அவரது தாய் ரீனா. "எனது குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் கடன் இருக்கு. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப சுமையை குறைக்கவே, அவனை இரானுக்கு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தேன். எங்கள் ஊரிலிருந்து பலரும் செல்கின்றனர் என்ற நம்பிக்கையில் அனுப்பி வைத்தேன். ஆனால் இப்போது பேச கூட முடியவில்லை. இணைய வசதி இல்லாததால், செல்போன் ரீசார்ஜ் செய்து சாதாரண அழைப்பு வழியாக இரண்டு நாட்கள் முன்பு பேசினான். தொழிலுக்கு போகாததால், செல்போனை இது போன்று அடிக்கடி ரீசார்ஜ் செய்து பேசுவதும் கடினம்" என்கிறார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

இரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், இரானில் உள்ள மீனவர்களை மீட்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்து வருகின்றனர் என்றார்.

"இந்த மனுக்கள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரானில் சிக்கி உள்ள மீனவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்டர்நெட் வசதி இல்லாததால் மீனவர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை என்பதால் தூதரகங்கள் உதவியுடன் மீனவர்கள் குடும்பத்தினருடன் செல்போனில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதற்கு, மீனவர்களுக்கு முதல் கட்ட உதவிகள் செய்வது தொடர்பாகவும், மீன்வளத்துறை செயலாளர்கள் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விரைவில் இரானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு உதவிகள் சென்றடைவதுடன் பத்திரமாக தமிழக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு