சௌதியில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மொத்தம் 54 பேர் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு நவம்பர் 9ம் தேதி கிளம்பியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் மெக்காவிலேயே இருந்துவிட்டனர். இன்னும் நான்கு பேர், கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதினா சென்றடைந்தனர். மீதமிருந்த 46 பேர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்" என்று கூறினார்.
அவர்கள் மெக்காவிலிருந்து மதினா சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஆயில் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து மதினாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நடந்திருக்கிறது.
"பேருந்தில் சென்றவர்களில் ஒருவர் தவிர 45 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த ஒரேயொரு பயணி மொஹம்மது அப்துல் ஷோயப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்று தெரிவித்தார் வி.சி.சஜனார்.
இவர்கள் அனைவரும் வரும் 23ம் தேதி ஜெட்டாவில் இருந்து ஹைதராபாத் திரும்புவதற்கு விமான டிக்கட் பதிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், PTI
ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் விபத்தை உறுதி செய்திருக்கிறது. அத்துடன், பேருந்து விபத்து தொடர்பான தகவல்களை அது வழங்கியுள்ளது.
"ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் சௌதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட உம்ரா நடத்துபவர்களுடனும் தொடர்பில் உள்ளனர்" என்று அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்திய சமூகத்தைச் சேர்ந்த துணைத் தூதரக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் பல மருத்துவமனைகளிலும் சம்பவ இடத்திலும் உள்ளன. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்திருக்கிறது. "சௌதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து துயர விபத்தை சந்தித்தது. இதையடுத்து, ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது" என்று துணை தூரதகம் அறிவித்திருக்கிறது.
உதவி எண்: 8002440003
மெக்காவில் இருந்து மதீனா சென்றபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் விரைந்து பெறுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபி-க்கு (DGP) உத்தரவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Stefan Wermuth/Bloomberg via Getty
ஹைதராபாத் எம்பி-யும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதின் ஒவைசியும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார்.
"ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் நான் பேசினேன். இதுபற்றி தகவல்கள் பெற்றுவருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துமாறும், இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் இந்திய அரசையும், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதற்கும், மீட்பு பணிகளை கண்காணிப்பதற்கும், தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்கள்:
+91 79979 59754
+91 99129 19545

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
சௌதி அரேபியாவின் மதீனாவில் உம்ரா பயணத்திற்காக இந்தியர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"சௌதி அரேபியாவின் மதீனாவில் இந்திய குடிமக்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார்.
குடும்பத்தினர் கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினரான முகமது மன்சூஃப் கூறுகையில், "என்னுடைய மூத்த சகோதரர் முகமது மன்சூர், தாய் ஷோஹ்ரத் பேகம், என்னுடைய அண்ணி ஃபர்ஹீன் பேகம் மற்றும் உடன்பிறந்தவரின் மகன் ஷாஹீன் ஆகிய நால்வரும் மெதீனாவுக்கு சென்றனர்." என்றார்.
அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், தனது குடும்பத்தினர் குறித்து தகவல் அளிக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
மேலும், மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையிலான அரசுக் குழுவை அனுப்பவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












