அமெரிக்காவின் அடுத்த அதிபரை முடிவு செய்யும் இந்த 7 மாகாணங்களில் முந்துவது யார்?
அமெரிக்கத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிபர் பைடன் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக அறிவிக்கும் முன்பு வரை, அவர் டொனால்ட் டிரம்பை விட கருத்துக் கணிப்பில் பின்தங்கியே இருந்தார். கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட சமயத்திலும் டிரம்ப் தான் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் டிரம்பை விட கருத்துக் கணிப்புகளில் சற்று முன்னணியில் உள்ளார். ஏபிசி நியூஸ் தரவுகளின்படி கமலா ஹாரிஸ் 47 சதவிகித ஆதரவையும், டிரம்ப் 44 சதவிகித ஆதரவையும் பெற்றுள்ளனர்.
நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் குறிப்பிட்ட சில மாகாணங்களை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.
அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே உண்மையிலேயே கடுமையான போட்டி நிலவுவது ஒரு சில மாகாணங்களில் மட்டுமே என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஏழு மாகாணங்கள் வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



