இந்தியாவிடம் ஹாட்ரிக் தோல்வி, வீரர்கள் நடத்தை பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவது என்ன?

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் நடத்தை குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் அதிக செய்திகளை வெளியிட்டுள்ளன.
    • எழுதியவர், ஜைனுல் அபித்
    • பதவி, பிபிசி

துபை கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களும் நடந்தேறின. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றங்கள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தின.

147 என்ற இலக்கைத் துரத்திய இந்தியாவுக்கு திலக் வர்மா, ஆட்டமிழக்காமல் எடுத்த 69 ரன்கள் ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வெல்ல உதவின.

இருப்பினும், இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஷின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்கப் போவதில்லை என்று கூறி, கோப்பை வழங்கும் நிகழ்வை இந்திய அணி புறக்கணித்தது.

இந்தக் காரணத்தினால், பரிசளிப்பு விழா 90 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

இறுதியில் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அவரது இந்த நடவடிக்கை இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது.

பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியது என்ன?

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பாகிஸ்தான் ஊடகங்கள் இதுகுறித்து அதிகம் விவாதித்துள்ளன. 'இந்திய அணியின் செயல் விளையாட்டின் விழுமியங்களுக்கு எதிரானது, அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் கிரிக்கெட்டின் நெறிமுறைகளுக்கு அவமரியாதை செய்வது' என்று அவை விவரித்துள்ளன.

இந்த முழு சம்பவத்தையும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றங்களுடன் தொடர்புபடுத்திய பாகிஸ்தான் ஊடகங்கள், மே மாதம் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் கிரிக்கெட் தொடர் இது என்றும் குறிப்பிட்டன.

பல பத்திரிகையாளர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை 'அவமானகரமானது' என்று குற்றம்சாட்டி, இந்திய அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆசியக் கோப்பை வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்' உடன் தொடர்புபடுத்தியதை விமர்சித்து பாகிஸ்தானில் வெளியாகும் டான் (Dawn) என்ற ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை பிரதமர் மோதி, 'பிகார் தேர்தல் போன்ற ஒரு சிறிய நிகழ்வுக்காக பயன்படுத்துவதாக' அந்த செய்தித்தாள் கூறுகிறது.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் இந்திய அணியை வாழ்த்தினார். அவர் தனது பதிவில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

"விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். ஆனால் முடிவு ஒன்று தான் - இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்," என மோதி தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டது.

பிரதமரின் இந்தப் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, "போர் தான் பெருமைக்கான உங்களின் அளவீடு என்றால் பாகிஸ்தானிடம் இந்தியா பெற்ற அவமானகரமான தோல்வியை வரலாறு பதிவு செய்துள்ளது, அதை எந்த கிரிக்கெட் போட்டியாலும் மாற்ற முடியாது. விளையாட்டிற்குள் போரை இழுப்பது ஏமாற்றமளிக்கிறது மற்றும் விளையாட்டு உத்வேகத்தை அவமதிப்பதாக உள்ளது." என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி பதிவிட்டிருந்தார்.

கோப்பையை ஏற்க மறுத்த இந்திய அணி

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி கிரிக்கெட்டில் அரசியலை நுழைத்துவிட்டதாக பல பாகிஸ்தான் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மிக முக்கியமான பிரச்னை என்னவென்றால், இந்திய அணி மொஷின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பை கோப்பை மற்றும் பதக்கங்களை ஏற்க மறுத்தது. நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சருமாக உள்ளார்.

இந்தியாவைப் பற்றி நக்வி கூறுகையில், 'விளையாட்டில் போர் இழுக்கப்படுகிறது' என்றார்.

'பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ மோதலில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தை கிரிக்கெட் மூலம் இந்தியா வெளிப்படுத்தி வருவதாக' பிடிவி ஊடகத் தொகுப்பாளர் பீனிஷ் சலீம் கூறினார்.

மே மாதத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலில் தாங்களே வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் பல ராணுவ தளங்களை வெற்றிகரமாக தாக்கியதாக இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தானில் 'பல பயங்கரவாத மறைவிடங்களை அழித்துவிட்டதாகவும்' இந்தியா கூறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நடத்தையை கண்டித்து, "விளையாட்டைப் போரைப் போலவும், போரை விளையாட்டைப் போலவும் அவர்கள் நடத்துவதாகத் தெரிகிறது" என்று பிடிவி-யிடம் பேசிய பாகிஸ்தான் அரசியல் தலைவர் ராசா ஹாரூன் கூறினார்.

'ஜியோ நியூஸ்' (Geo News) தொகுப்பாளர் ஜாவேத் பலோச், கோப்பையை ஏற்க மறுக்கும் இந்திய அணியின் அணுகுமுறை "சர்வதேச அளவில் கண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

ஜியோ நியூஸ், இந்திய அணியின் செயல் "மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றும் "சீற்றத்தைத் தூண்டிய ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம்" என்றும் கூறியது.

டான் செய்தித்தாள் "இதை கிரிக்கெட்டில் அரசியலின் தலையீடு என்றும், அதனால் போட்டிக்குப் பிந்தைய நிகழ்வுகள் தாமதப்படுத்தப்பட்டன" என்றும் குறிப்பிட்டது.

ஏஆர்ஒய் (ARY) நியூஸிடம் பேசிய விளையாட்டு நிருபர் ஷோயப் ஜாட், "இந்தியா, தனது அரசியலை கிரிக்கெட்டிற்குள் நுழைத்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப், "இந்திய கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்யுமாறு ஐசிசி-க்கு" கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், "ஐசிசி-க்குள் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை" என்றும் அவர் கூறினார்.

கைகுலுக்க மறுத்த இந்திய அணி

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்திறனை விமர்சித்து வருகின்றனர்.

டாஸ் போடும் போதோ, போட்டிக்குப் பின்னரோ அல்லது தொடரின் போதோ இந்திய கேப்டன் சூர்யகுமார் பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்கவில்லை என்பதை செய்தி ஊடகங்கள் பலமுறை சுட்டிக்காட்டின.

விமர்சகர்கள் இதை 'விளையாட்டின் விழுமியங்களுக்கு எதிரானது' என்றும் பதற்றங்களை அதிகரிக்க, வேண்டுமென்றே செய்யப்படும் முயற்சி என்றும் வர்ணித்துள்ளனர். அரசியலை கிரிக்கெட்டிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்திய கேப்டனின் நடத்தையை விளையாட்டு பத்திரிகையாளர் மோஹி ஷா கண்டித்துள்ளார். விளையாட்டில் அரசியலைக் கொண்டுவரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா என்ன சொன்னது?

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், மொஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற வேண்டாம் என்ற முடிவு இந்திய அணியின் கூட்டு முடிவு என்று விவரித்தார்.

இந்திய அணியின் முடிவைத் தொடர்ந்து, நக்வி கோப்பையுடன் வெளியேறினார், இது இந்தியாவில் பலத்த எதிர்வினைகளைத் தூண்டியது.

இது குறித்துப் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "ஒரு சாம்பியன் அணிக்கு கோப்பை வழங்கப்படாமல் விட்டதை இதுவரை நான் பார்த்ததில்லை. இது நாங்கள் கடின உழைப்பால் வென்ற ஒரு கோப்பை. நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நம்புகிறேன். வேறு எதுவும் சொல்ல முடியாது, நான் என் கருத்தை தெளிவுபடுத்திவிட்டேன். கோப்பைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்டால், எனது கோப்பைகள் எனது டிரஸ்ஸிங் அறையில் உள்ளன. என்னுடன் இருக்கும் 14 வீரர்களும் துணை பணியாளர்களும் தான் உண்மையான கோப்பைகள்" என்று அவர் கூறினார்.

மொஷின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க மறுப்பது அதிகாரப்பூர்வமான முடிவா இல்லையா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, ​ "நாங்கள் இந்த முடிவை மைதானத்திலேயே எடுத்தோம், வெளியில் இருந்து யாரும் அப்படிச் செய்யச் சொல்லவில்லை. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ஓர் அணி வெற்றி பெறும்போது, அவர்கள் கோப்பைக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை நீங்கள் சொல்லுங்கள்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

இருப்பினும், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா செய்தி முகமையான ஏஎன்ஐயிடம் பேசுகையில், "ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அவர் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அதனால் தான் அவரிடமிருந்து அதை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதற்காக கோப்பை மற்றும் பதக்கங்கள் அவரிடம் தான் இருக்கும் என்று அர்த்தமல்ல. அவை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நவம்பரில் துபையில் ஒரு ஐசிசி கூட்டம் நடக்கவுள்ளது. ஏசிசி தலைவருக்கு எதிராக நாங்கள் கடுமையான எதிர்ப்பை அங்கு பதிவு செய்வோம்." என்றார்.

பாகிஸ்தானில் கிரிக்கெட்டின் தரம் குறித்த கவலைகள்

ஆசியக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட்

பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images

படக்குறிப்பு, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின் போது சோகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத், "இந்தியாவின் நடத்தை கிரிக்கெட் விதிமுறைகளை மீறுவதாகும்" என்றும் "கிரிக்கெட்டின் உயர்ந்த மதிப்புகள் மற்றும் விழுமியங்களை இந்தியா புறக்கணித்ததாகவும்" கூறினார்.

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, அந்நாட்டு கிரிக்கெட்டின் நிலை குறித்து பல பத்திரிகையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் 'மெல்ல சரிந்து வருகிறது' என்றும் நிதி பற்றாக்குறை இருப்பதாகவும் அரசியல் தலைவர் ராசா ஹாரூன் கூறினார்.

ஏஆர்ஒய் செய்தி தொகுப்பாளர் அஷ்ஃபக் இஷாக் சத்தி, "ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களும் தங்கள் அணியிடமிருந்து மிகச் சிறந்த செயல்திறனை எதிர்பார்த்தனர், ஆனால் ஆசியக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணி சந்தித்த தொடர்ச்சியான தோல்விகள் ஏமாற்றத்தையே அளித்தன." என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.