காணொளி: அரபு ஊடகங்கள் இஸ்ரேல்-அமெரிக்கா உறவு குறித்து கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, நெதன்யாகு - டிரம்ப் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
காணொளி: அரபு ஊடகங்கள் இஸ்ரேல்-அமெரிக்கா உறவு குறித்து கூறுவது என்ன?

பாலத்தீன பிரதேசங்களில் இஸ்ரேல் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், அமெரிக்கா இஸ்ரேல் இடையே பதற்றமான நிலைமை இருப்பதாக அரபு பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இறையாண்மையை வழங்கும் மசோதாவிற்கு இஸ்ரேலிய நாடாளுமன்ற ஆரம்ப ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமெரிக்கா வெளிப்படுத்தும் கடுமையான தொனி மற்றும் கோபம் குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான அரசியல் தந்திரம் என்றும், இந்த இணைப்பு முயற்சி காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்த ஜே.டி வான்ஸின் கருத்தை அரபு ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய அரபு தொலைக்காட்சி சேனல்கள், அமெரிக்கா வெளிப்படுத்திய எதிர்ப்பை தங்கள் காலை செய்திகளில் தலைப்புச் செய்திகளாக்கின.

அபுதாபியை தளமாகக் கொண்ட ஸ்கை நியூஸ் அரேபியா தனது காலை முதன்மைச் செய்தியில், மேற்குக் கரையை இணைக்கும் முயற்சிக்கு டிரம்ப் கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதாகவும், இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுக்காது என டிரம்ப் கூறியதையும் ஒளிபரப்பின.

இணைப்புத் திட்டங்களை இஸ்ரேல் தொடர முயன்றால், அது அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளதை குறிப்பிட்ட அந்த சேனல், அரபு நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு டிரம்ப் உறுதியுடன் இருப்பதாகவும், இணைப்பை அபாயமான சிவப்புக் கோடு என கருதுவதாகவும் கூறியது.

அக்டோபர் 23 அன்று ஒளிபரப்பான ஸ்கை நியூஸ் அரேபியாவின் அல் தசியா நிகழ்ச்சியில், டிரம்பின் எச்சரிக்கை நெதன்யாகுவுக்கு புதிய சோதனை என்று கூறப்பட்டது.

கத்தாரின் அல் ஜசீரா தொலைக்காட்சி சேனல் தனது காலை செய்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடத்தை 'காஸா அமைதி ஒப்பந்தத்தை முறிக்கக்கூடும்' என்று வெள்ளை மாளிகை கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

டிரம்பின் திட்டங்களை நெதன்யாகு சீர்குலைத்தால், அவர் தண்டிக்கப்படுவார் என்றும் அந்த அதிகாரி கூறியதாக அந்த செய்தி கூறியது.

அமெரிக்காவில் இஸ்ரேலிய பிரதமர் மீது கோபம் அதிகரித்து வருவதாக பல பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

'டிரம்ப் இதற்கு முன்பு ஒருபோதும் நெதன்யாகு மீது இவ்வளவு கோபமாக இருந்ததில்லை' என்று வெள்ளை மாளிகை வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வலைத்தளமான எரெம் நியூஸ் தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதாக கூறும் அந்த செய்தி, மத்திய கிழக்கு நாடுகளுடன் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்குவதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய டிரம்ப் விரும்புகிறார். ஆனால், போரை நடத்துவதிலும் பதற்றங்களை அதிகரிப்பதிலும் இஸ்ரேலின் பாதுகாப்பு இருப்பதாக நெதன்யாகு நம்புகிறார் என குறிப்பிட்டுள்ளது.

செளதி செய்தித்தாள் அஷார்க் அல்-அவ்சத் தனது செய்தியில், 'மேற்குக் கரை இணைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு இஸ்ரேலை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது என தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் RT அரபு சேனல், அமெரிக்கா இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், இஸ்ரேல் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது என அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அதே போல அக்டோபர் 23 அன்று வெளியான மற்றொரு செய்தியில் , டைம் ஊடகத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியை RT அரபிக் ஊடகம் சுட்டிக்காட்டுகிறது. அதில் அவர், நீங்கள் முழு உலகத்தையும் எதிர்த்துப் போராட முடியாது. சில போர்களில் வெல்லலாம், ஆனால் உலகம் உங்களுக்கு எதிராக உள்ளது, மேலும் இஸ்ரேல் உலகத்துடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய நாடு என நெதன்யாகுவிடம் கூறியதாக கூறியிருந்தார்.

இதேபோல், அல்-குத்ஸ் அல்-அரபி செய்தித்தாளும் டைம் நேர்காணலை சுட்டிக்காட்டி உள்ளது. இந்த நேர்காணலின் சாரம்சம், 'அமெரிக்கா இப்போது அதன் நட்பு நாடான இஸ்ரேலைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, இதன் மூலம் அரபு நாடுகளுடனான அதன் உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று நினைப்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று அல்-குத்ஸ் அல்-அரபி செய்தித்தாள் கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு