You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவருமான செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் முன்பாக அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்த அளவுக்கு உதவும்? அ.தி,மு.கவின் துவக்க காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்த ஒருவரது வெளியேற்றத்தால், அக்கட்சிக்கு எந்த அளவுக்கு இழப்பு?
வியாழக்கிழமையன்று காலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்திருந்தனர். அதற்குப் பிறகு அங்கு வந்த செங்கோட்டையன் கட்சியின் தலைவர் விஜயை சந்தித்துப் பேசினார்.
பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதற்குப் பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ பதிவில், "20 வயது இளைஞராக இருந்தபோதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்தச் சிறிய வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டது எப்படி?
கடந்த 1972இல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன் நீடித்து நிற்பதற்கும், அதிருப்தியை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் பெயர்போனவர்.
அவர் மிக இளம் வயதிலேயே சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார். அதற்குப் பிறகு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்.எல்.ஏ-வாக தேர்வானவர். 2012ஆம் ஆண்டில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி, அவரது கட்சிப் பதவிகளை ஜெ. ஜெயலலிதா பறித்தபோதும் வேறு முடிவுகள் எதையும் எடுக்காமல் தனது தருணத்திற்காகக் காத்திருந்தவர்.
ஆனால், 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து, அவர் தனது அதிருப்தியை மெல்ல மெல்ல வெளிக்காட்டத் தொடங்கினார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறத் தொடங்கினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளே, அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதில் வந்து முடிந்தது.
இதற்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் தொடர்ந்து தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வேறொரு கட்சியில் சேர முடிவு செய்திருக்கிறார். இருந்தபோதும், சமீபத்தில்தான் துவங்கப்பட்டு இதுவரை ஒரு தேர்தலையும் சந்தித்திராத தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய முடிவு செய்ததுதான் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
'சரியான முடிவாகத் தெரியவில்லை'
பிற முன்னாள் அமைச்சர்களைச் சேர்த்துக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கட்சியின் ஒருங்கிணைப்பை அவர் வலியுறுத்தியது சரியானதுதான் என்றாலும், தற்போது அவர் எடுத்துள்ள முடிவு துரதிர்ஷ்டவசமானது என்கிறார் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்புரத்தினம்.
"செங்கோட்டையனின் தற்போதைய முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விஜயின் கட்சி இன்னும் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படவில்லை. 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், விஜயை தலைவராக ஏற்றுக்கொண்டு போகிறார் என்றால் பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்றுதான் கருத வேண்டும்.
அ.தி.மு.க பொதுக் குழுவின் பொருளாளராக இருந்து, அந்த பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றவர் இவர். 1980ஆம் ஆண்டு நடந்த அ.தி.மு.க-வின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட்டு ஈரோட்டின் மாவட்டச் செயலாளர் ஆனவர். அதற்குப் பிறகு, கொள்கை பரப்புச் செயலாளர், தலைமை நிலைமைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர்.
போக்குவரத்து துறை, வனத்துறை அமைச்சராக இருந்தவர். இவ்வளவு பெரிய பின்னணியைக் கொண்ட செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டியிடாத இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என்பது அவ்வளவு சரியான முடிவாகத் தெரியவில்லை" என்கிறார் சுப்புரத்தினம்.
அரசியல் தற்கொலை என விமர்சிக்கும் அ.தி.மு.கவினர்
செங்கோட்டையனை பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் சிறந்த திட்டமிடுதலுக்காக அறியப்பட்டவர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்களின்போது, அவரது வாகனம் எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த இடத்தில் நின்று ஜெயலலிதா பேச வேண்டும் என்பதையெல்லாம் மிகக் கச்சிதமாக செங்கோட்டையன் வடிவமைப்பார்.
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 1980இல் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் 1996 முதல் 2006 வரையிலான பத்து ஆண்டுகளைத் தவிர, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். ஈரோடு மாவட்ட அ.தி.மு.கவின் வலுவான முகமாகவும் இருந்தார். இந்த நிலையில், அவர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டு, த.வெ.கவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி, இதுபோன்ற கேள்விகளுக்கே பதில் சொல்ல விரும்பவில்லை. மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, செங்கோட்டையன் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை என்பதால், இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மட்டும் கூறினார்.
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செம்மலை, செங்கோட்டையனை பொறுத்தவரை இது ஒரு அரசியல் தற்கொலையாகத்தான் இருக்கும் என்கிறார்.
"ஒருங்கிணைப்பு முயற்சி என்பது செங்கோட்டையன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். அந்த நாடகம் புஸ்வாணமாகிவிட்டது. இன்று அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, அரசியல் தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து யாரும் வேறொரு கட்சியில் இணைவது, அ.தி.மு.கவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
பொதுவாக, நதிகள் கடலில் கலப்பதுதான் இயற்கை. இவருடைய நடவடிக்கை, கடல் நீர் நதியில் கலப்பதைப் போன்றது. அவர் த.வெ.க-வில் இணைவதன் மூலம் விஜயிடம் அரசியல் கற்றுக்கொள்ளப் போகிறாரா அல்லது விஜய்க்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய செம்மலை, "ஒரு பெரிய இயக்கத்தில் இருந்து, பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமாக இருந்துவிட்டு, அதே போன்ற குழப்பத்தை இங்கும் ஏற்படுத்துவாரோ என்ற சந்தேகம் அந்தக் கட்சியினரிடம் இருக்கும். ஆகவே அக்கட்சியின் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் அவரால் இணைந்து பணியாற்ற முடியாது.
த.வெ.கவின் தொண்டர்கள், விஜயின் ரசிகர்கள் வாக்குரிமை பெறும் வயதை இப்போதுதான் அடைந்திருக்கிறார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். இவரால் அவர்களோடு இணைந்து பயணிக்க முடியுமா? மேலும், புதிதாக துவக்கப்பட்டுள்ள கட்சிக்கு ஊர் ஊராகச் சென்று கிளைகளை அமைத்து, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்தாலும் அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும்," என்று கூறினார்.
பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?
ஆனால், மூத்த பத்திரிகையாளர் மணி போன்றவர்கள் செங்கோட்டையன் வெளியேறியது அ.தி.மு.கவில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகிறார்கள்.
"தேர்தல் களத்தில் வெல்வதற்கு முன்பாக கருத்து ரீதியான போரில் வெல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் 6 முதல் 8 தொகுதிகளில் சிறிய அளவில் வாக்குகளை உடைத்தாலே பெரிய இழப்புதான். அதேபோல, த.வெ.க-வுக்கு அவர் எவ்விதமான வழிகாட்டுதலை அளிக்கப் போகிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.
எத்தனையோ தலைவர்கள் அ.தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அக்கட்சித் தொண்டர்களிடம் ஏற்படாத ஒரு வருத்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவரது வெளியேற்றம் குறிப்பிடத்தக்க சேதாரத்தை ஏற்படுத்தும்" என்கிறார் ஆர். மணி.
மூத்த பத்திரிகையாளர் ப்ரியனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "அ.தி.மு.க-வில் கீழ் நிலை நிர்வாகிகள்தான் இப்போதும் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இருக்கிறார்கள். இடைநிலை தலைவர்களில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் த.வெ.கவை நோக்கிச் செல்லும் வாய்ப்பை செங்கோட்டையன் உருவாக்கியுள்ளார்.
செங்கோட்டையனை பொறுத்தவரை, தன்னை உதாசீனப்படுத்திய அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தத் துணிந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக, தான் கலந்துகொண்ட கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியைக் காட்டியபோது, அதைப் பார்த்து 'கூட்டணி உருவாகிவிட்டது' என்பதைப் போல ஒரு கருத்தைத் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி. ஆனால், செங்கோட்டையன் இப்போது அங்கு சென்று சேர்ந்திருப்பதன் மூலம் அந்தக் கூட்டணிக்கு இனி வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது" என்று கூறுகிறார் ப்ரியன்.
மேலும், "பா.ஜ.கவுடனான கூட்டணியால் ஏற்படக்கூடிய எதிர்மறை வாக்குகள் வேறு இருக்கின்றன. அ.தி.மு.கவுடன் வேறு கட்சிகள் எதுவும் கூட்டணியை உறுதிப்படுத்தவும் இல்லை. இது தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தும்" என்கிறார் அவர்.
ஆனால், மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனின் கருத்து முற்றிலும் மாறானதாக இருக்கிறது.
செங்கோட்டையன் எப்போதுமே தன்னை ஒரு தனித்த ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதால், அவர் வெளியேறியது அ.தி.மு.கவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் அவர்.
"செங்கோட்டையன் அந்தக் கட்சியில் தன் இருப்பை பெரிய தடபுடல் இல்லாமல்தான் வைத்திருந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார் அவ்வளவுதான். அ.தி.மு.கவில் அவருடைய முக்கியமான செயல்பாடாக, ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தை அவர் திட்டமிடுவதைக் கூறுவார்கள்.
குறிப்பாக கொங்கு பகுதியிலும் தென் மாவட்டங்களிலும் அதை அவர் செய்வார். அந்தந்த மாவட்டச் செயலாளர்களைக் கலந்தாலோசித்து இதைச் செய்து வந்தார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய அரசியல் சாணக்கியராகவோ, தலைவராகவோ முன்னிறுத்திக் கொண்டதில்லை. செயல்பட்டதுமில்லை."
அப்படியிருந்திருந்தால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, "வி.கே. சசிகலா ஒரு முக்கியப் பதவியை இவருக்கு வழங்கியபோது, அதை ஏற்க மறுத்திருப்பாரா?" என்று வினவுகிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
மேலும், "இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். சாதிரீதியாக பார்த்தாலும்கூட, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவில் இருக்கும்போது இவர் வெளியேறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. அப்படிப் பார்த்தால் இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி, முத்துசாமி போன்றவர்கள் வெளியேறியுள்ளார்கள்.
அவர்கள் வெளியேறியதால் ஏற்படாத பாதிப்பு, இவரால் எப்படி ஏற்படும்? ஒருவேளை எல்லோரும் சொல்வதைப்போல, பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.கவினர் அங்கே செல்வார்கள். அவ்வளவுதான்" என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
த.வெ.கவை செழுமைப்படுத்துவாரா செங்கோட்டையன்?
ஆனால், இவர்கள் எல்லோருமே செங்கோட்டையனின் வருகை த.வெ.கவின் அரசியல் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் என்பதில் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு உதாரணமாக இன்றைய செய்தியாளர் சந்திப்பைச் சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆர். மணி.
"இன்றைய செய்தியாளர் சந்திப்பில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன் என த.வெ.கவின் தற்போதைய தலைவர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பெரிய கவனம் கிடைத்திருக்காது. செங்கோட்டையனும் அங்கு அமர்ந்து பேசியதால்தான் இவ்வளவு பெரிய அளவில் எல்லோரும் கவனிக்கிறார்கள்.
செங்கோட்டையன் அங்கு சென்று சேர்ந்திருப்பது த.வெ.கவுக்கு பெரிய அளவில் உதவும். தி.மு.கவும் அ.தி.மு.கவும் கள அரசியலிலும் பிரசாரத்திலும் என்ன செய்வார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அ.தி.மு.கவும் தி.மு.கவுக்கும் இணையான வியூகத்தை அவரால் வகுக்க முடியும். கள அரசியலில் மிக நல்ல வழிகாட்டுதலை அளிப்பார்" என்கிறார் ஆர். மணி.
சுப்புரத்தினமும் இதையே கூறுகிறார். "த.வெ.க.வை பொறுத்தவரை கரூர் நெரிசல் சம்பவத்தில் இருந்து ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதாவது, தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், நெறிப்படுத்தப்பட என்பதை உணர்ந்துள்ளார்கள். விஜயின் ரசிகர்களை அரசியல்படுத்த, நெறிப்படுத்த செங்கோட்டையனின் அனுபவம் உதவும்" என்கிறார் அவர்.
வயதைப் பொறுத்தவரை தனது 70களில் இருக்கும் செங்கோட்டையன், தமது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். அவரால் த.வெ.கவுக்கு பலன் இருக்கலாம். ஆனால், த.வெ.க. அவரது அரசியல் ஏற்றத்திற்கு உதவுமா என்பதற்கான பதில், இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை தெரியலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு