குஜராத், ராஜஸ்தானில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் நிலை என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள குஜராத், ராஜஸ்தான் கிராமங்களின் தற்போதைய நிலை என்ன ?

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, பூட்டப்பட்டுள்ள வீடு. பைகளையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் வீட்டுக்கு வெளியே வைத்துள்ளனர். பலர் தங்களது வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறியுள்ளனர்.
    • எழுதியவர், ராக்ஸி ககடேகர் சாரா

பனஸ்கந்தாவின் ராதநேஸ்டா, மாவஸரி போன்ற எல்லையோர கிராமங்களாக இருந்தாலும் சரி, ராஜஸ்தானின் பார்மரில் உள்ள லால்பூர் கிராமமாக இருந்தாலும் சரி, அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லையோர கிராமங்கள் என்பதால், ஏதாவது ஒரு ஏவுகணை வந்து தங்களுடைய வீட்டில் விழுந்துவிடுமோ என்று மக்கள் பயப்படுகிறார்கள்.

சிலர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாலும், பலர் ஏற்கெனவே தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறி விட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வீடுகளும் மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் பூட்டப்பட்டுள்ளது.

மூன்று நாட்களாகத் துணிகள் வெளியே உலர வைக்கப்பட்டவாறே கிடக்கின்றன. பசுக்கள், ஆடுகள் போன்ற கால்நடைகள் உதவியற்ற நிலையில் சுற்றித் திரிகின்றன.

சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுதான் பார்மர் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தின் தற்போதைய சூழல்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காலியான கிராமம், பூட்டப்பட்டுள்ள வீடுகள்

இந்த கிராமத்திற்குப் பிறகு ஓர் எல்லைப் பாதுகாப்புப் படை புறக்காவல் நிலையம் வருகிறது. அதையடுத்து பாலைவனம், அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை. இதுதான் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய எல்லையில் உள்ள கடைசி கிராமம்.

மே 6-7 நள்ளிரவில் பாகிஸ்தானில் ஒன்பது வெவ்வேறு இடங்களில் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து, இந்த கிராம மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் பொருட்களுடன் வெளியேறி வருகின்றனர்.

அந்த மக்கள் கால்நடைகளை அங்கேயே விட்டுவிட்டு, கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு, அருகில் வசிக்கும் தங்கள் உறவினர்களின் கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். பிபிசி குஜராத்தி குழு இந்த கிராமத்தை அடைந்தபோது, ​​அங்கு பேசுவதற்குக்கூட யாரும் இருக்கவில்லை.

தேனாராமின் குடும்பம் உள்பட இரண்டு குடும்பங்கள் மட்டுமே தற்போது இங்கு வசித்து வருகின்றன.

"நாங்களும் பயத்தில்தான் உள்ளோம், ஆனால் இவை அனைத்தையும் விட்டுவிட்டு எங்கு செல்ல முடியும்? கிராமத்தில் மீதமுள்ள கால்நடைகளை நாங்கள் தற்போது பராமரித்து வருகிறோம். அவற்றுக்குத் தண்ணீர் வழங்கி வருகிறோம்" என்று தேனாராமின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள குஜராத், ராஜஸ்தான் கிராமங்களின் தற்போதைய நிலை என்ன ?

பட மூலாதாரம், Gurdev Singh

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்த கிராமத்தில் ரிக்‌ஷா ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வரும் மன்சாரம், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "பெரும்பாலான மக்கள் தற்போது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பிற பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களின் வீட்டிற்குச் செல்கிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட உறவினர்கள் யாரும் இல்லை, அதனால் நாங்கள் இங்கேயே இருக்கிறோம். நாங்கள் பயந்துவிட்டோம், ஆனால் என்ன செய்வது? எங்கு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்றார்.

லால்பூர் கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் பெரும்பாலானவை பூட்டப்பட்டுள்ளன. அங்கு இருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். அதே கிராமத்தில் பிறந்த ரேகா என்பவரின் வீட்டுக்கு முன்னால் சர்வதேச எல்லை செல்கிறது.

"பாருங்கள், அங்கு ஒரு மரம் உள்ளது. அதன் மறுபக்கம்தான் எல்லை" என்று அவர் எங்களிடம் எல்லையைச் சுட்டிக்காட்டுகிறார்.

"நாங்கள் வீட்டைவிட்டு எங்கே செல்ல முடியும்? எது நடந்தாலும் இங்கேயே நடக்கட்டும். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். முழு கிராமமும் காலியாக உள்ளது. ஆனால் இங்கேயே இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

ரேகாவின் குடும்பத்தில் சில ஆடுகளும் ஐந்து குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களால் ஆடுகளை எங்கும் அழைத்துச் செல்ல முடியாது, அதனால் அவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். அவரைப் போலவே, அவரது அக்காவும் இன்னும் அதே கிராமத்தில் இருக்கிறார்.

அவர்களுடைய குடும்பத்தில் சிறு குழந்தைகள் இருப்பதால், அவர்கள் இன்னும் கிராமத்தை விட்டு வெளியேறவில்லை.

இதுகுறித்துப் பேசிய அவர், "நாங்கள் இன்னும் அரசிடம் இருந்து சில சமிக்ஞைகள் வருவதற்காகக் காத்திருக்கிறோம். அவர்கள் சொன்னால், நாங்கள் கிளம்புவோம். இல்லையென்றால், நாங்கள் இங்கேயே இருப்போம்" என்கிறார்.

குஜராத் கிராமங்களின் நிலை என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள குஜராத், ராஜஸ்தான் கிராமங்களின் தற்போதைய நிலை என்ன ?

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, ராஜஸ்தானின் பார்மரில் உள்ள லால்பூர் கிராமத்தில் பூட்டப்பட்டுள்ள ஒரு வீடு

பி.கே.டி கிராமம் லால்பூர் கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வசிக்கும் பகோடராமின் பண்ணை வழியாக இந்தியாவுடனான சர்வதேச எல்லையைக் குறிக்கும் ஒரு வேலி செல்கிறது.

இந்த வேலியில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு எல்லைத் தூண் உள்ளது.

"நாங்கள் அனைவரும் நேற்று இரவு எங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டோம். தற்போது நாங்கள் மாவசரி கிராமத்தில் வசிக்கிறோம். அரசாங்க அதிகாரிகள் அந்த இடத்தை காலி செய்யச் சொன்னார்கள். எனவே தாக்குதல் நடந்த உடனேயே நாங்கள் அனைவரும் குஜராத்திற்கு வந்துவிட்டோம்" என்று அவர் கூறுகிறார்.

"வயல்களில் வேலி அமைக்கப்பட்டு இருப்பதால் நாங்கள் பாகிஸ்தானுக்கு மிக அருகில் இருக்கிறோம். முதல் அச்சுறுத்தல் எங்களுக்குத்தான். எனவே முதலில் நாங்கள் பின்வாங்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

பி.கே.டி கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் பனஸ்கந்தாவின் மாவசரி கிராமம் அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு வரை இந்தக் கிராமத்தில் மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான சந்திப்பு தொடர்ந்தது. இந்திய விமானப்படையின் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக இந்த கிராம மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த கிராமத்தின் தலைவரான நர்பத்பாய், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "நாங்கள் அதிகாரிகளுடன் எல்லா வகையிலும் ஒத்துழைத்து வருகிறோம். எல்லையில் உள்ள கிராமங்கள் குறிப்பாக கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மின் தடையை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் சாலைகளில் உள்ள சூரிய விளக்குகளை அணைக்கவும் எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று கூறுகிறார்.

பனஸ்கந்தா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனிபென் தாக்கூர், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அரசு அமைப்பு அதன் சொந்த வழியில் மக்களை மிகச் சிறப்பாகச் சென்றடைகிறது. மக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்கள் அமைப்பும் அவர்களுக்காக உள்ளது. இதனுடன், அரசாங்கமும் , எதிர்க்கட்சியும் கடைசி கிராமம் வரை இணைந்து செயல்படுகின்றன," என்று கூறினார்.

குஜராத்தில் இந்திய நிலவியல் எல்லையில் உள்ள கடைசி கிராமம், ராதநேஸ்டா. வாவ் தாலுகாவில் உள்ள இந்த கிராமத்தில், பல வீடுகளுக்கு இன்னும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை.

இந்த கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் தாக்கூர் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஆனால் எங்கள் ராணுவத்தை நாங்கள் நம்புகிறோம், அவர்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே ஒரு வகையில் நாங்கள் கவலைப்படவில்லை" என்று கூறினார்.

ராதனேஸ்டா கிராமத்தில் ஒரு பிஎஸ்எஃப் சாவடி உள்ளது. அதன் ஒருபுறம் ஒரு பரந்த பாலைவனமும் மறுபுறம் சர்வதேச எல்லையும் உள்ளது.

"கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் மக்களுக்கு அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் எங்களுக்கு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஒரு கிராமத் தலைவர் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு