அரசுகளை கவிழ்க்கும் இளைஞர் போராட்டங்கள் - நிலையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

கென்யாவில், ஜென் சி இளைஞர்கள் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் இறங்கி, அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

பட மூலாதாரம், Donwilson Odhiambo / Getty Images

படக்குறிப்பு, கென்யாவின் ஜென் சி இளைஞர்கள், தங்கள் நாட்டில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவு இயக்கத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.
    • எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ மற்றும் டெஸ்ஸா வோங்
    • பதவி, பிபிசி உலக சேவை

மொராக்கோவிலிருந்து மடகாஸ்கர் வரை, பராகுவே முதல் பெரு வரை, 13 முதல் 28 வயதுடைய ஜென் சி(Gen Z) இளைஞர்கள், அரசாங்கங்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக மாற்றத்தைக் கோரி போராடியுள்ளனர்.

இந்த இயக்கங்களில் உள்ள பொது அம்சம், சமூக ஊடகங்கள் தான்.

இவை தான் போராட்டங்களைத் தூண்டி, வளர்க்கின்றன.

ஆனால், இந்த ஊடகங்கள் அழிவுக்கான காரணமாகவும் அமையலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மடகாஸ்கரில், மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் அரசை வீழ்த்தியது.

நேபாளத்தில், ஊழல் மற்றும் அரசு அதிகாரிகளின் உறவினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பிரதமரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

கென்யாவில், ஜென் சி இளைஞர்கள் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் இறங்கி, அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

இது, அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகரித்துவரும் பாதுகாப்பின்மை குறித்து நடந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்தது.

பட மூலாதாரம், Klebher Vasquez / Anadolu via Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 27 அன்று, பெருவில் உள்ள காங்கிரஸ் ஆஃப் த ரிபப்ளிக் கட்டடத்தை பாதுகாத்து நிற்கும் போலீசாருடன்,ஜென் சி ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதினர். இது, அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகரித்துவரும் பாதுகாப்பின்மை குறித்து நடந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்தது.

பெருவில், பேருந்து மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுடன் இணைந்து, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மைக்கு எதிராக இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். இந்தோனேசியாவில், நலத்திட்டங்களில் சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக சாதாரண தொழிலாளர்கள் போராடினர்.

மொராக்கோவில்,வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணிகள் நடந்தன. உலகக் கோப்பை மைதானங்களுக்கு பில்லியன் கணக்கான பணத்தை செலவழித்த அரசாங்கத்தை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மொராக்கோவில், மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணிகள் நடந்தன.

பட மூலாதாரம், Abu Adem Muhammed / Anadolu via Getty Images

படக்குறிப்பு, மொராக்கோவில், ஜென் சி இளைஞர்கள் ஏற்பாடு செய்த, நாட்டின் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணி.

இந்த எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்திலும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்ன. அவை கதைகளைப் பகிரவும், ஒற்றுமையை வளர்க்கவும், உத்திகளை ஒருங்கிணைக்கவும், எல்லைகளைக் கடந்து கற்றுக்கொள்ளவும் தளமாக அமைகின்றன.

இந்த போராட்டங்கள், "கடந்த 15 ஆண்டுகளாக டிஜிட்டல் இணைப்பால் உருவான இளைஞர்கள் தலைமையிலான உலகளாவிய போராட்ட அலைகளின் சமீபத்திய அலை" என்று ஜெர்மனியின் 'இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளோபல் அண்ட் ஏரியா ஸ்டடீஸ்' நிறுவனத்தின் ஜான்ஜிரா சோம்பட்பூன்சிரி கூறுகிறார்.

இந்த அலைக்குள் 2010-11 அரபு வசந்தம், 2011 ஆக்குபை வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2011-12 ஸ்பெயினின் சிக்கன எதிர்ப்பு 'இண்டிக்னாடோஸ்' இயக்கம், தாய்லாந்து (2020-21), இலங்கை (2022), மற்றும் வங்கதேசம் (2024) ஆகியவற்றில் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த அலைக்குள் 2010-11 அரபு வசந்தம், 2011 ஆக்குபை வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2011-12 ஸ்பெயினின் சிக்கன எதிர்ப்பு 'இண்டிக்னாடோஸ்' இயக்கம், தாய்லாந்து (2020-21), இலங்கை (2022), மற்றும் வங்கதேசம் (2024) ஆகியவற்றில் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Akila Jayawardana / NurPhoto via Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 2022ல் கொழும்பில், இலங்கையின் சமூக இளைஞர் சங்கத்தை ஆதரிக்கும் ஒரு போராட்டக்காரர், போலீசாரை எதிர்கொண்டார்.

'உறுதியாக வெளிப்படும் ஊழல் '

சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோமென்ட்டின் மூத்த ஆய்வாளர் ஸ்டீவன் ஃபெல்ட்ஸ்டீன், இந்த நிகழ்வை இன்னும் பின்னோக்கி பார்க்கிறார்.

2001-ல் பிலிப்பைன்ஸில் நடந்த இரண்டாம் மக்கள் சக்தி புரட்சியில் எஸ்எம்எஸ் உரைச் செய்திகள் முக்கிய பங்கு வகித்தன. இது தான் டிஜிட்டல் கால போராட்டங்களின் தொடக்கமாக அமைந்தது என அவர் கூறுகிறார்.

"இளைஞர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெகுஜன இயக்கங்களை நடத்துவது புதிதல்ல," என்கிறார் ஃபெல்ட்ஸ்டீன்.

ஆனால், இப்போது மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள், மெசேஜிங் ஆப்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பரவலான பயன்பாடு மக்களை ஒன்றிணைப்பதை மிக எளிதாக்கியுள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்கள்,

பட மூலாதாரம், Prabin Ranabhat / AFP via Getty Images

படக்குறிப்பு, நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்கள், வன்முறை மோதல்களாக மாறியதில், குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

"இதுதான் ஜென் சி வளர்ந்த சூழல். இப்படித்தான் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்பதும் இதன் இயல்பான வெளிப்பாடு தான் ," என்று அவர் கூறுகிறார்.

படங்களும் பதிவுகளும் இப்போது முன்பை விட மிகவும் வேகமாகவும் தொலை தூரங்களுக்கும் பரவுகின்றன.

இது கோபத்தையும் ஒற்றுமையையும் அதிகரிக்கிறது.

"சமூக ஊடகங்கள், சாதாரண பதிவுகளை அரசியல் ஆதாரமாக மாற்றிவிட்டன. பல சமயங்களில் அவை மக்களை ஒருங்கிணைக்கும் குரலாக மாறுகின்றன"என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் அதீனா சரன்னே ப்ரெஸ்டோ.

"அறிக்கைகளிலோ நீதிமன்றங்களிலோ ஊழல் குறித்து பேசப்படும்போது அது மேலோட்டமாகத் தோன்றலாம். ஆனால், மக்கள் அது குறித்து தங்கள் போன்களில் பார்க்கும்போது, ஊழல் உண்மையாகவும் கண்முன் தெரியும் பொருளாகவும் மாறுகிறது."

"இப்போது மாளிகைகள், ஸ்போர்ட்ஸ் கார்கள், சொகுசு ஷாப்பிங் பைகள் ஆகியவை சமூகத்தில் உயர் அடுக்கில் உள்ளோர் பெறும் சலுகைகளையும், சாதாரண மக்களின் கஷ்டங்களையும் தெளிவாகப் பிரிக்கின்றன. இது தனிப்பட்ட அவமானமாக மாறுகிறது. 'ஊழல்' என்ற புரியாத கருத்து, இப்போது எளிதாகப் புரியும் வடிவமாகிறது," என்று அதீனா சரன்னே ப்ரெஸ்டோ கூறுகிறார்.

ஆடம்பர பிராண்டு பெட்டிகளால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே போஸ் கொடுத்த நேபாள அரசியல்வாதியின் மகனின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்,

பட மூலாதாரம், Instagram / sgtthb

படக்குறிப்பு, ஆடம்பர பிராண்டு பெட்டிகளால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே போஸ் கொடுத்த நேபாள அரசியல்வாதியின் மகனின் இன்ஸ்டாகிராம் புகைப்படம், நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை தூண்டியது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நேபாளத்தில் இது போன்ற ஒரு சூழல் தான் காணப்பட்டது.

ஒரு அரசியல்வாதியின் மகன், ஆடம்பர பிராண்டு பெட்டிகளால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தருகே நின்று எடுத்த இன்ஸ்டாகிராம் புகைப்படம், நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது. பிலிப்பைன்ஸிலும் இதேபோல் நடந்தது.

"நேபாளத்தைப் போலவே, பிலிப்பைன்ஸ் இளைஞர்களையும் இது பாதித்தது. ஏனெனில், அரசியலில் உயர் பதவிகளில் உள்ளோர் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அவர்கள் ஏற்கனவே அறிந்த உண்மையை காட்சிப்படுத்தப்பட்டது" என ப்ரெஸ்டோ சொல்கிறார்.

"பிலிப்பைன்ஸில், அரசியல்வாதிகள் வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டங்களில் பணத்தைத் திருடுகிறார்கள். ஆனால், அந்தத் திட்டங்கள் தோல்வியடையும்போது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறக்கின்றனர்."

தாய்லாந்து போராட்டக்காரர்கள், ஹாங்காங்கின் "நீர் போல இரு" எனும் உத்தியைப் பயன்படுத்தினர்.

பட மூலாதாரம், Delphia Ip / NurPhoto via Getty Images

படக்குறிப்பு, தாய்லாந்து போராட்டக்காரர்கள், ஹாங்காங்கின் "நீர் போல இரு" எனும் உத்தியைப் பயன்படுத்தினர். இதன் மூலம், கடைசி நிமிடத்தில் டெலிகிராம் சேனல்கள் வழியாக பேரணி இடத்தை மாற்றி, போலீஸ் அடக்குமுறைகளைத் தவிர்க்கும் வழியைக் கடைபிடித்தனர்.

சமூக ஊடகங்கள், எல்லைகளைக் கடந்து போராட்ட உத்திகளைப் பகிரவும் உதவுகின்றன.

உதாரணமாக, 2019-ல் ஹாங்காங் ஜனநாயக போராட்டங்களில் பிறந்த #MilkTeaAlliance ஹேஷ்டேக், மியான்மர் (முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்டது), தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆர்வலர்களுக்கு மையமாக மாறியது.

தாய்லாந்து போராட்டக்காரர்கள், ஹாங்காங்கின் "நீர் போல இரு" எனும் உத்தியைப் பயன்படுத்தினர். இதன் மூலம், கடைசி நிமிடத்தில் டெலிகிராம் சேனல்கள் வழியாக பேரணி இடத்தை மாற்றி, போலீஸ் அடக்குமுறைகளைத் தவிர்க்கும் வழியைக் கடைபிடித்தனர்.

"கண்காணிப்பையும் கைது முயற்சிகளையும் தவிர்க்க மக்களுக்கு இந்த உத்தி உதவியது," என்று ஜான்ஜிரா சோம்பட்பூன்சிரி கூறுகிறார்.

இரு முனை கொண்ட வாள்

ஆனால், இந்த ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அரசு வன்முறையின் படங்கள் நேரடியாக ஒளிபரப்படும்போது மக்களின் கோபத்தைத் தூண்டி இன்னும் பெரிய போராட்டங்களைத் தூண்டுகின்றன.

பட மூலாதாரம், Anusak Laowilas / NurPhoto via Getty Images

ஆன்லைனில் எதிர்ப்பு குரல் பரவுவதால், பல சர்வாதிகார அரசுகள் தணிக்கை மற்றும் வன்முறையால் அதற்கு பதிலளிக்கின்றன.

ஆனால், இந்த ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அரசு வன்முறையின் படங்கள் நேரடியாக ஒளிபரப்படும்போது மக்களின் கோபத்தைத் தூண்டி இன்னும் பெரிய போராட்டங்களைத் தூண்டுகின்றன.

2024-ல் வங்கதேசத்தில் நடந்த அடக்குமுறையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம் . அவாமி லீக் அரசு இணையத்தை முடக்கியது, டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எதிர்ப்பாளர்களைக் கைது செய்தது, மாணவ ஆர்வலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால், போலீசால் சுடப்பட்ட மாணவர் அபு சயீதின் படம் அவரை தியாகியாக மாற்றியது. இதன் விளைவாக மக்கள் போராட்டத்தின் புதிய அலை உருவானது.

2024 டிசம்பர் 31 அன்று வங்கதேசத்தின் டாக்காவில், பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம் ஏற்பாடு செய்த ஒற்றுமைக்கான பேரணி

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, 2024 டிசம்பர் 31 அன்று வங்கதேசத்தின் டாக்காவில், பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம் ஏற்பாடு செய்த 'ஒற்றுமைக்கான பேரணியில்' மாணவர்களும் அவர்களை ஆதரிக்கும் பொதுமக்களும் கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.

இலங்கை, இந்தோனேசியா, நேபாளம் ஆகியவற்றிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதால் மக்களின் கோபம் வெடித்தது, கோரிக்கைகள் கடுமையாயின, சில இடங்களில் அரசாங்கங்களே கவிழ்ந்தன.

சமூக ஊடகங்கள் ஒரு புறம் எதிர்ப்பு இயக்கங்களை வலுப்படுத்துகின்றன,

ஆனால் அதே நேரத்தில், அவை அந்த இயக்கங்களைப் பிளவுகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்குகின்றன.

"தலைமையற்ற இயக்கங்கள் நெகிழ்வுத்தன்மையையும் சமத்துவ உணர்வையும் தருகின்றன. ஆனால், அவை ஊடுருவல், வன்முறை, அல்லது மாறுபட்ட நோக்கங்களுக்கு ஆட்படலாம்," என்று ஜான்ஜிரா கூறுகிறார்.

 போராட்டக்காரர்

பட மூலாதாரம், Anusak Laowilas / NurPhoto via Getty Images

படக்குறிப்பு, மன்னரை அவமதிப்பதை குற்றமாக்கும் தாய் குற்றச் சட்டத்தின் பிரிவு 112-ஐ நீக்க வேண்டும் எனக் கோரி நடைபெற்ற பேரணியில், ஒரு போராட்டக்காரர் பங்கேற்றார்.

தாய்லாந்தில், #RepublicOfThailand ஹேஷ்டேக் மற்றும் கம்யூனிஸ்ட் சின்னங்களுடன் கூடிய பதிவுகள், 2020ம் ஆண்டு நடந்த ஜனநாயக இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தின. இவை கூட்டாளிகளை அந்நியப்படுத்தின. அதேபோல், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில், தளர்வாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் சில நேரங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தன.

இதற்கிடையில், அரசாங்கங்கள் இப்போது டிஜிட்டல் கருவிகளை ஆர்வலர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

"அரபு வசந்தத்திற்குப் பிறகு, பல அரசுகள் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு, கடுமையான தணிக்கை, மற்றும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தன. இதனால், ஆர்வலர்கள் எப்போதும் ஆபத்தான நிலையிலேயே செயல்பட வேண்டியிருக்கிறது," என்று சோம்பட்பூன்சிரி கூறுகிறார்.

 பழைய தேசியக் கொடியின் நிறங்களில் முகம் பூசித்த லிபியக் குழந்தைகள், ஒரு போராட்டத்தில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Patrick Baz / AFP via Getty Images

படக்குறிப்பு, அரபு வசந்த இயக்கத்தின் போது, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் எழுச்சிகள் ஏற்பட்டன.2011 பிப்ரவரியில், முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடந்துகொண்டிருந்த லிபியாவின் டோப்ருக் நகரில்,பழைய தேசியக் கொடியின் நிறங்களில் முகம் பூசித்த லிபியக் குழந்தைகள், ஒரு போராட்டத்தில் பங்கேற்றனர்.

சமூக ஊடகங்களால் வழிநடத்தப்படும் போராட்டங்களின் நீண்டகால தாக்கம் பற்றியும் வல்லுநர்கள் விவாதிக்கின்றனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி,

1980களிலும் 1990களிலும் 65% ஆயுதமில்லா இயக்கங்கள் வெற்றி பெற்றன.

ஆனால் 2010 முதல் 2019 வரை, அந்த விகிதம் 34% ஆக குறைந்தது.

"வெகுஜன இயக்கங்கள் அரசுகளை மாற்றலாம். ஆனால், நீண்டகால மாற்றம் உறுதியாக வராது," என்று சோம்பட்பூன்சிரி சொல்கிறார்.

"சிரியா, மியான்மர், யேமன் போன்ற நாடுகளில், எதிர்ப்புகள் உள்நாட்டுப் போர்களாக மாறின. பிரிவுகள் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டன. எகிப்து, துனிசியா, செர்பியாவில், சீர்திருத்தங்கள் பழைய ஆட்சியின் அடித்தளத்தை உடைக்கத் தவறின. இதனால், எதேச்சதிகார ஆட்சிகள் மீண்டும் பலம் பெற்றன."

ஹேஷ்டேக்குகளுக்கு அப்பால்

"அதே நேரத்தில், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள், நிறுவனம் சார்ந்த தலைவர்கள், மற்றும் ஆன்லைன் இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பை உருவாக்கும் கூட்டணிகளும் முக்கியமானவை."

பட மூலாதாரம், FITA / AFP via Getty Images

படக்குறிப்பு, இத்தகைய இயக்கங்களுக்கு "கலப்பின உத்திகள்" (Hybrid Strategies) அவசியம் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

"சமூக ஊடகங்கள் நீண்டகால மாற்றத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. அவை அல்காரிதம்கள், வெறுப்பு உணர்வு மற்றும் ஹேஷ்டேக்குகளை நம்பியிருக்கின்றன," என்று ஸ்டீவன் ஃபெல்ட்ஸ்டீன் கூறுகிறார்.

"ஆனால் உண்மையான மாற்றம் ஏற்பட, ஆன்லைனில் தொடங்கும் இயக்கங்கள் நீண்டகால பார்வையுடனும்,

உண்மையான மனித உறவுகளுடனும் இணைந்த அமைப்பாக மாற வேண்டும்."

அதேபோல், இத்தகைய இயக்கங்களுக்கு "கலப்பின உத்திகள்" (Hybrid Strategies) அவசியம் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

"ஆன்லைன் போராட்டங்களை வேலைநிறுத்தங்கள், பேரணிகள் போன்ற பாரம்பரிய எதிர்ப்பு வடிவங்களுடன் இணைக்க வேண்டும்," என்கிறார் சோம்பட்பூன்சிரி.

"அதே நேரத்தில், சமூகம், அரசியல் கட்சிகள், நிறுவனம் சார்ந்த தலைவர்கள், மற்றும் ஆன்லைன் இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பை உருவாக்கும் கூட்டணிகளும் முக்கியமானவை."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு