'3 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்' – கோவை ஈஷா பள்ளி முன்னாள் மாணவருக்கு என்ன நேர்ந்தது?

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

ஈஷா இருப்பிடப் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரால் தன் மகன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோவை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 4 ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஈஷா யோகா மையம், புகார் தெரிவித்துள்ள பெண், யோகா மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியபோது, பல்வேறு தரப்பினரும் கூறிய புகாரின்படி, அவரை வெளியேற்றிவிட்டதாகவும் அதன்பின் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாக அந்த பெண் பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.

காவல்துறையினர் குறித்த அவருடைய குற்றச்சாட்டுகளை பேரூர் டிஎஸ்பி சிவகுமார் மறுத்துள்ளார்.

கோவை அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் ஈஷா இருப்பிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. யோகா மையத்தின் வளாகத்திலேயே பள்ளி மற்றும் விடுதிகளைக் கொண்டு இந்த இருப்பிடப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், 2013 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலும் ஆறாம் வகுப்பு முதல் 13வது கிரேடு (பிளஸ் 2 வகுப்புக்குப் பின் நடத்தப்படும் ஓராண்டு சிறப்பு வகுப்பு) வரை படித்துள்ளார்.

அங்கு படிக்கும் போது, 2017 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, 3 ஆண்டுகள் சக மாணவர் ஒருவர் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இப்போது அவருடைய தாயாரால் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை

புகாரின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட சக மாணவர் மற்றும் ஊழியர்கள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதியின் காப்பாளர்களாகப் பணியாற்றிய நிஷாந்த் குமார், பிரீத்தி குமார், பள்ளி முதல்வர் பிரகாஷ் சோமையாஜி மற்றும் யோகா மையத்தின் பொது ஒருங்கிணைப்பாளர் சுவாமி அபு ஆகியோர் மீது, போக்சோ சட்டம் 2012 (Pocso Act 2012) பிரிவுகள் 9(1), 10 21(2) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 342 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவானது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த மாணவனுக்கு சக மாணவனால் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாகவும், அதுபற்றி விடுதி மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பெற்றோரிடம் கூறக்கூடாது என்று மாணவர் மிரட்டப்பட்டதாகவும், 2019 மார்ச் மாதத்தில் அந்த மாணவர் தன் பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலமாகவே இது தெரியவந்ததாகவும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

''இதுகுறித்து பள்ளி முதல்வரைத் தொடர்பு கொண்டபோது, அவர் வாட்ஸ் ஆப் அழைப்பில் மட்டுமே பேசினார். பிரச்னையைப் பற்றி சீரியஸாக பேசவில்லை. அதன்பின் பள்ளிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினோம். சம்பந்தப்பட்ட மாணவர் மிகவும் செல்வாக்குமிக்கவர் என்பதால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். ஜக்கி வாசுதேவுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல்துறையை அணுகுவதாகக் கூறினேன்'' என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறியதாக தகவல் பதியப்பட்டுள்ளது.

அதற்குப் பின் கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை பெரும்பாலும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மாணவரின் தாயார், அந்த காலகட்டத்தில் தன் மகன் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை நடந்த எந்த விஷயமும் ஜக்கி வாசுதேவுக்குத் தெரியவில்லை என்று தான் நினைத்ததாகவும் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரை பலமுறை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் அந்த மாணவரின் தாயார் கூறியுள்ளார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மாணவனின் தாயார், ''எனது மகன் ஈஷா இருப்பிடப் பள்ளியில் படிக்கும் போது, அவனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. இப்போது அவனுக்கு 21 வயது. தற்போது இளங்கலை படித்து வருகிறான். முன்பே புகார் கொடுப்பதில் அவனுக்குப் பல சங்கடங்கள் இருந்தன. ஆனால் இதே கொடுமை வேறு மாணவர்களுக்கு நடக்கக்கூடாது என்றே இப்போது புகார் கொடுத்துள்ளோம்.'' என்றார்.

''நாங்கள் 2024 அக்டோபரில் புகார் கொடுத்தோம். புகார் கொடுத்து 3 மாதங்கள் கழித்து ஜனவரியில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அதையும் 3 மாதங்கள் கழித்து சமீபத்தில்தான் கொடுத்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, என்னிடமும் எனது மகனிடமும் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போதிலிருந்து எங்களை இங்கிருந்து துரத்த காவல்துறையினர் மூளைச்சலவை செய்தனர். மிரட்டியும் பார்த்தனர்.'' என்று அவர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டிலிருந்து ஈஷா மையத்துடன் தொடர்பு

தனது கணவரின் நண்பர் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் ஈஷா யோகா மையத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட பின், ''2013 ஆம் ஆண்டிலிருந்து அங்கு சேவை செய்யத் துவங்கினேன்'' என்கிறார் மாணவரின் தாயார்.

இவர் ஒரு வழக்கறிஞர். இவருடைய கணவர் மென்பொருள் பொறியாளர். ஈஷா இருப்பிடப் பள்ளியில் அரசியல் பாட வகுப்பு எடுத்தது உட்பட ஈஷா யோகா மையத்தில் ஊதியமின்றி பல ஆண்டுகளாக பல்வேறு பணிகளைச் செய்ததாக அவர் கூறுகிறார்.

''என்னுடைய மகன் அந்தப் பள்ளியில் 8 ஆண்டுகள் படிப்பதற்கு ஆண்டுக்கு தலா ஏழரை லட்ச ரூபாய் கல்விக் கட்டணம் உட்பட ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளோம். நான் சத்குருவின் தீவிர பக்தையாக இருந்தேன். அதனால் அவரால் என் மகன் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமென்று நினைத்தேன். இந்த மையத்தை அழிக்க பிற மதத்தினர் முயன்று வருவதாகவும், நான் கொடுக்கும் புகார் அவர்களுக்கு உதவக்கூடும் என்றும் மூளைச்சலவை செய்தனர்.'' என்றார் அவர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஈஷா யோகா மையம், அவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் கூறிய சில குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

''பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த மாணவர், சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடும் காலத்துக்குப் பின் 3 ஆண்டுகள் முழுமையாகப் படித்து வெளியேறினார்'' என யோகா மையத்தின் பதிலில் விளக்கப்பட்டுள்ளது.

யோகா மையத்துக்கு எதிராக புகார் கொடுக்கப்போவது தெரிந்ததும், ராஜமுந்திரியிலுள்ள தங்கள் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

ஈஷா யோகா மையம் அளித்துள்ள விளக்கம்

தமிழக காவல்துறை ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

அனுமதியில்லாமல் தன்னுடைய வாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக அவர் புகார் கூறினார்.

''தகுதியான ஆசிரியர்கள், தக்க பாதுகாப்பு எதுவுமின்றி இயங்கும்'' ஈஷா இருப்பிடப் பள்ளியை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கோரி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பேரூர் டிஎஸ்பி சிவகுமார், ''இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வார்கள் என்று தெரிந்தே அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்ததிலிருந்து திரும்பும் வரை அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம். இத்தகைய வாக்குமூலங்களை வீடியோ எடுக்க வேண்டுமென்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.'' என்றார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும், வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காதது குறித்து பேசிய அவர், ''பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மாணவர் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை இங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்த பின்பே, வழக்கில் ஒரு தெளிவு கிடைக்கும். மற்றவர்களை விசாரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போலீசார் குறித்து அவர்கள் கூறுவது அனைத்தும் பொய்.'' என்றார்

மாணவரின் தாயார் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், ஈஷா யோகா மைய ஊழியர்கள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்தும் ஈஷா யோகா மைய நிர்வாகத்திடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கோரப்பட்டது.

அதற்கு மின்னஞ்சல் மூலம் விரிவான பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்த பெண்ணும், அவரின் கணவரும் ஈஷாவுக்கு எதிராகக் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, விஷமத்தனமானவை, அவதுாறு பரப்பும் வகையில் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.

''அவர்கள் சொல்வதைப் போல் எந்த ஒரு சம்பவமும் பள்ளியில் நடைபெறவில்லை. 2019-ம் ஆண்டு அவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அவை அனைத்துக்கும் உரிய விசாரணை செய்யப்பட்டு, தீர்வு அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டில் சக மாணவர் ஒருவரின் முரட்டுத்தனமான நடவடிக்கை கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவருக்கு இடமாற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு அப்பெண்ணின் மகன் அதே பள்ளியில் 3 ஆண்டுகள் வரை படித்து, வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறினார்.'' என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தை நாடும் மாணவரின் தாயார்

''அந்த மாணவர் தனது மேற்படிப்புக்காக ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்களைக் கோரியபோது, அவர் கேட்டபடியே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது'' என்று கூறும் அந்த விளக்க அறிக்கை, பள்ளியில் படித்தது குறித்து பெருமிதமாக அவர் கருத்தும் பதிவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

''அதே பள்ளியில் தொடர்ந்து அவர் தன்னார்வத் தொண்டு செய்தார்'' என கூறும் அந்த அறிக்கை, மாணவரின் பெற்றோர், இந்த சம்பவம் நடந்த 3 மாதங்களுக்குப் பின்பு, அவர்களின் 7 வயதுடைய இளைய மகனுக்கு இதே பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பித்ததாகவும் கூறுகிறது.

அவர்களின் மகன் ஈஷா இருப்பிடப் பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து வெளியேறிய பின்பு, மாணவரின் தாயார் 2022 ஜூனிலிருந்து அதே பள்ளியில் ''தன்னார்வத் தொண்டு'' செய்ததாகவும் ஈஷாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

அவருடைய நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் அவரை வெளியேற்றி 2024 ஆம் ஆண்டில் தொடர்பைத் துண்டித்துக் கொண்டுள்ளதாகவும் ஈஷா யோகா மையம் விளக்கியுள்ளது.

''பள்ளியை விட்டு நீக்கியதால் அதிருப்தி அடைந்த அந்த பெண், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பொய்யாகக் கூறி நிலைமையைத் திசை திருப்ப முயற்சி செய்கிறார். இது பள்ளி மற்றும் ஆசிரமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். நாங்கள் இதற்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளோம்.'' என்றும் யோகா மையம் தெரிவித்துள்ளது.

யோகா மையம் கூறியுள்ளது குறித்து மாணவரின் தாயாரிடம் கேட்டபோது, ''ஆரம்பத்தில் இருந்தே இதே குற்றச்சாட்டுகளை என் மீது வைக்கின்றனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு கோரியுள்ளேன். யார் ஆதரவாக இல்லாவிட்டாலும் எங்கள் மகனுக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய நீதி கேட்டு நான் தொடர்ந்து போராடுவேன்.'' என்று தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு