You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கனடாவிற்கு பல சிக்கல்களை அவர் உருவாக்குவார் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப், கடந்த திங்களன்று கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 25 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறினார்.
கனடாவை தவிர, மற்றோர் அண்டை நாடான மெக்சிகோவின் பொருட்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு அந்த எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்கு புலம் பெயர்வோர் மற்றும் அந்த வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் சட்ட விரோதமான போதைப் பொருட்களைத் தடுத்து நிறுத்துவதற்கானது என்று டிரம்ப் தெரிவித்தார்.
- உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள்
- சின்மோய் கிருஷ்ண தாஸ்: இந்து துறவி கைதால் இந்தியா - வங்கதேச உறவில் பதற்றம் ஏன்?
- லெபனான் போர்நிறுத்தம்: மத்திய கிழக்கில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவுமா?
- ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?
ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரி விதிக்கும் "நிர்வாக உத்தரவில்" தான் கையெழுத்திட இருப்பதாகத் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
“அனைவருக்கும் தெரிந்தாற்போலவே கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் வழியாக அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறைகளில் நுழைகின்றனர். வருபவர்கள் தங்களுடன் போதைப் பொருட்களைக் கொண்டு வருகின்றனர், அதோடு பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுவரை இந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு மக்கள் புலம்பெயர்ந்தது இல்லை,” என்றார் டிரம்ப்.
டிரம்ப் vs ட்ரூடோ
உலகளவிலேயே மிக நீண்ட தரை வழி எல்லையைப் பகிரும் நாடுகளாக கனடா மற்றும் அமெரக்கா உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்திருந்தார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்கள் இடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவில் பதவியேற்ற பிறகு பாரம்பரிய வெளிநாட்டுப் பயணம் கனடா அல்லது மெக்சிகோவாக இருந்தது. ஆனால் டிரம்பின் முதல் வெளிநாட்டுப் பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு இருந்தது. அதாவது டிரம்ப், தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு செய்தியை வழங்கினார்.
தனிப்பட்ட முறையிலும் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை தீவிர இடதுசாரி என்று சாடுகிறார்.
கனடாவின் பொருளாதார நிலை ஏற்கெனவே மிகுந்த கவலைக்குரிய வகையில் உள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு மேலும் பொருளாதாரம் மந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும்.
கனடாவின் 75 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுடன்தான் நடக்கிறது. இந்நிலையில் இந்த 25 சதவீத வரி விதிப்பு அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
கனடாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்ரூடோவிற்கு இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியிடம் ட்ருடோ தோல்வியடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் வாழ்வதற்கான செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் சீனா மற்றும் இந்தியா உடனான சிக்கல்களால் அமெரிக்கா உடனான வர்த்தகத்தை கனடாவால் தவிர்க்க முடியாத சூழல் நிலவுகிறது.
காலிஸ்தானி இயக்கத்தை ட்ருடோ ஊக்குவிப்பதாக பிரதமர் மோதி அரசு குற்றம் சாட்டுகிறது.
மற்றொரு பக்கம் காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ட்ருடோ குற்றம் சாட்டுகின்றார். இந்த வழக்கில் பைடன் தலைமையிலான அரசு கனடாவிற்கு சாதகமாக உள்ளது.
ஆனால் டிரம்ப் பதவியேற்ற பிறகு காலிஸ்தானி இயக்கம் தொடர்பான விஷயங்களில் ட்ருடோவிற்கு எந்தவோர் ஆதரவும் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
டிரம்ப் - ட்ருடோ மற்றும் மோதி
டிரம்புக்கும் ட்ருடோவுக்கும் இடையிலான உறவு சுமூகமானதாக இருந்ததில்லை. அதேபோல ட்ருடோவுக்கும் மோதிக்கும் சாதகமான உறவு இருந்ததில்லை.
முதல் முறையாக 2014ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக மோதி தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் 2015இல் ஜஸ்டின் ட்ருடோ முதல் முறையாக கனடா பிரதமராகப் பதிவியேற்றர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நரேந்திர மோதியும் ஜஸ்டின் ட்ருடோவும் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றனர்.
ட்ருடோவின் கனடா லிபரல் கட்சி, தன்னை ஒரு முற்போக்கான கட்சியாக அடையாளப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக, தன்னை இந்துத்துவ, வலது சாரி கட்சியாக அடையாளப்படுத்துகிறது.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு நாள் பயணமாக மோதி கனடா சென்றிருந்தார். அந்த நேரத்தில் கனடா பிரதமராக இருந்தவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்டீபன் ஹார்பர்.
கடந்த 2010ஆம் ஆண்டில், அப்போதிருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜி20 உச்சி மாநாட்டிற்காக கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டிற்காக என்று மட்டுமல்லாமல் 42 ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக கனடா சென்றார்.
கனடா பிரதமராக ட்ருடோ பதவியேற்ற பின்னர் நரேந்திர மோதி கனடாவிற்கு செல்லவில்லை.
உலகிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் கனடா நான்காம் இடத்தில் உள்ளது. டிரம்ப் அரசு விதிக்கும் வரி, இதன் உற்பத்தியைப் பாதிக்கும். அதேநேரம் டிரம்ப், அமெரிக்கா உள்நாட்டிலேயே எரிவாயு சக்தியை அதிகரிக்க முற்படுகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டில், ட்ரூடோ அமெரிக்காவில் இருந்து வரும் டிரக் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கினார். இதற்காக, ட்ரூடோவை "கடுமையான-இடது பைத்தியக்காரன்" என்று டிரம்ப் அழைத்தார்.
இதை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். 2018ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் இடையில் டிரம்ப் வெளியேறினார். மேலும் ட்ருடோவை, “மிகவும் நேர்மையற்ற பலவீனமான” தலைவர் என்று விமர்சித்தார்.
ட்ரூடோவுக்கு ஏற்கெனவே இருந்த அச்சங்கள்
கனடாவில் உள்ள அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தலை உற்று நோக்கினார். டிரம்பின் வெற்றி கனடாவின் சிக்கல்களை அதிகரித்துள்ள செய்தியை வெளிப்படுத்துகிறது.
டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் ராய்ட்டர்ஸிடம் பேசிய கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், “அமெரிக்க தேர்தலை நினைத்து கனடாவில் நிறைய மக்கள் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இங்கு அனைத்தும் நலமாக உள்ளது. அமெரிக்காவுடன் ஆழமான உறவு மற்றும் டிரம்புடன் பலமான உறவு கனடாவிற்கு உள்ளது,” என்று தெரிவித்தார்.
டிரம்ப் மீண்டும் அதிபரானால் கனடா மக்களுக்கு மிகுந்த சிக்கல்களை உருவாக்கும். நாட்டின் வளர்ச்சி ஒரு அடி பின்னால் தள்ளப்படும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, டிரம்ப் உருவாக்கும் பொருளாதார திட்டங்களால் 2028ஆம் ஆண்டின் முடிவில் கனடாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.7% சரிவடையும் என்று நிதி விவகார சிந்தனைக் குழுவான டிஜார்டியன்ஸின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிரம்ப் முதல் முறையாக அதிபரானபோது மெக்சிகோ மற்றும் கனடா உடனான வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்ததை மறு ஆய்வு வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஆபத்தாக இருப்பதாகவும் மற்ற இரு நாடுகளும் லாபமடைவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் கனடா இடையே 18 மாதங்கள் நடந்தும் பலனளிக்காததால், இந்த இரு நாடுகளும் மற்ற நாட்டின் பொருட்கள் மீது வரி விதித்தன.
இதற்குப் பின் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்று வெளியானது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி டிரம்ப் இதை மறு ஆய்வு செய்வது பற்றிப் பேசினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ட்ருடோ தனது லிபரல் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சி அமைத்தால், கடந்த ஆட்சியைவிட இம்முறை கனடாவிற்கு கடினமாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். இது ராய்ட்டர்ஸிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாகப் பதிவு செய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)