'இனி பாட மாட்டேன்' - பாடகர் அர்ஜித் சிங் திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன்?

    • எழுதியவர், ரவி ஜெயின்
    • பதவி, பிபிசி இந்திக்காக

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான அர்ஜித் சிங், பின்னணிப் பாடல் உலகில் ஒரு புகழ்பெற்ற நபராகத் திகழ்கிறார். பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடிய பெருமை அவருக்கு உண்டு.

'நான் உன் அருகினிலே', 'நீயே வாழ்க்கை என்பேன்' , 'அடடா என்ன அழகு' போன்ற தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், பின்னணிப் பாடல் துறையில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தபோது, அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது.

இருப்பினும், இசையுடனான தனது தொடர்பு தொடரும் என்றும், தான் தொடர்ந்து இசையமைப்பேன் என்றும் அர்ஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் தனக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த பின்னணிப் பாடல் துறையை விட்டு, வெறும் 40 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அர்ஜித் சிங் அறிவித்தது ஏன்?

அர்ஜித் சிங்கின் இந்த முடிவைப் புரிந்துகொள்வதற்காக அவருக்கு நெருக்கமானவர்களிடம் பிபிசி பேசியது.

'பர்பி', 'ஜக்கா ஜாசூஸ்', 'லூடோ', 'மெட்ரோ இன் டினோ' போன்ற அனுராக் பாசுவின் பல படங்களுக்கு அர்ஜித் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தப் படங்களில் உள்ள சில பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இது குறித்து அனுராக் பிபிசியிடம் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது முடிவைக் கண்டு ஆச்சரியப்படலாம், ஆனால் எனக்கு இது ஆச்சரியமாகத் தெரியவில்லை. அர்ஜித் எவ்வளவு திறமையானவர் என்பதும், அவர் வாழ்க்கையில் பாடுவதைத் தாண்டி இன்னும் நிறைய செய்ய விரும்புகிறார் என்பது குறித்தும் எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"அர்ஜித் சிங் திரைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நான் 'பர்பி' படம் எடுத்துக்கொண்டிருந்தபோது கூட, என்னிடம் உதவியாளராகப் பணியாற்ற அர்ஜித் கேட்டிருந்தார். அவர் ஒரு பள்ளியைத் தொடங்கவும், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவும் விரும்புகிறார். அவரிடம் இன்னும் பல திட்டங்கள் உள்ளன, அவை நமக்கு அவரது மற்றொரு பக்கத்தைக் காட்டும்," என்று தெரிவித்தார்.

'அர்ஜித் திரைப்படம் எடுக்க விரும்புகிறார்'

அர்ஜித் சிங் இயக்குநராகத் தனது முதல் இந்தி திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டதாக பிபிசி நம்பகமான வட்டாரத்திலிருந்து அறிந்துகொண்டிருக்கிறது.

காடுகளை மையமாகக் கொண்ட இந்த ஆக்‌ஷன் சாகசத் திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை அர்ஜித் சிங் மற்றும் அவரது மனைவி கோயல் சிங் ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். "அர்ஜித் சிங்குக்குத் திரைப்படம் எடுப்பது குறித்து ஆழமான புரிதல் உள்ளது" என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.

தனது தொடக்க கால இசைப்பயணத்தில், பிரபல இசையமைப்பாளர் பிரீதமிடம் சில காலம் உதவியாளராகப் பணியாற்றியதன் மூலம் அர்ஜித் சிங் இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

பிரீதம் தவிர, சங்கர்-எஹ்சான்-லாய், விஷால்-சேகர், மிதுன், மான்டி சர்மா போன்ற இசையமைப்பாளர்களுடனும் அர்ஜித் சிங் பணியாற்றியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வசிக்கும் அர்ஜித்

பாலிவுட்டில் தனது பாடல்கள் மூலம் தனியிடம் பதித்த அர்ஜித் சிங், தனது பெரும்பாலான நேரத்தை மும்பையில் செலவிடுவதில்லை, மாறாக மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்திலேயே கழிக்கிறார்.

அவர் தனது மனைவி கோயல் மற்றும் இரண்டு மகன்களுடன் அங்கு வசித்து வருகிறார். அங்கிருந்தபடியே தனது பாடல் பயணம், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இசை நிறுவனம் மற்றும் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றையும் அவர் நிர்வகித்து வருகிறார்.

தனது சொந்த ஊரான முர்ஷிதாபாத்தில் உள்ள வீட்டிலேயே அவர் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அமைத்துள்ளார். கடந்த சில காலமாக, அவர் அங்கிருந்தே தனது பாடல்களைப் பதிவுசெய்து இசையமைத்து செய்து வருகிறார்.

சமீபத்தில், சலீம்-சுலைமான் இசை இரட்டையர்களில் ஒருவரான சலீம் மெர்ச்சன்ட், அதே ஸ்டுடியோவுக்குச் சென்று அர்ஜித் சிங்கின் குரலில் ஒரு பாடலைப் பதிவு செய்தார்.

அந்த இசை இரட்டையர்களில் ஒருவரான சுலைமான், "திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது அர்ஜித்தின் நீண்ட காலக் கனவு, இப்போது அவர் அதில் முழுமையாக கவனம் செலுத்த விரும்புகிறார். அவர் லட்சியவாத சிந்தனை கொண்ட நபர், அவருடைய முடிவை நான் மதிக்கிறேன்," என்றார்.

அர்ஜித் சிங், சத்யஜித் ரேயின் சினிமாக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது இசை குரு ராஜேந்திர பிரசாத் ஹசாரியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பெங்காலி திரைப்படத்தை அவரே தயாரித்து இயக்கினார்.

அர்ஜித் சிங்கின் குடும்ப நண்பரும், முர்ஷிதாபாத்தில் வசிப்பவருமான அனிலவா சட்டர்ஜி, "தற்போது அர்ஜித் ஒரு இந்தி மற்றும் ஒரு வங்கமொழி படத்தை எடுப்பதில் மும்முரமாக உள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது," என்றார்.

ஒரு சிறந்த பாடகராகவும் இசைக்கலைஞராகவும் இருப்பது போலவே, அர்ஜித் ஒரு தாராள குணம் கொண்ட மனிதர் என்றும், உள்ளூரில் மக்களுக்கு உதவுவதில் அவர் எப்போதும் முன்னணியில் இருப்பார் என்றும் அனிலவா சட்டர்ஜி தெரிவித்தார்.

ரியாலிட்டி ஷோவுடன் தொடங்கிய பயணம்

அர்ஜித் சிங் 2005-ஆம் ஆண்டில், தனது 18-வது வயதில் 'ஃபேம் குருகுல்' என்ற இசை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

அர்ஜித் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, நடுவர் ஜாவேத் அக்தர் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக, "இது உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு" என்று கூறினார்.

2011-ஆம் ஆண்டு மோஹித் சூரி இயக்கத்தில், இம்ரான் ஹாஷ்மி நடித்த 'மர்டர் 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பிர் மொஹபத்' பாடல் மூலம் அர்ஜித்திற்கு பாலிவுட்டில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் பாடலின் வெற்றிக்குப் பிறகு, அர்ஜித் சிங்குக்குப் பல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2013-ஆம் ஆண்டு வெளியான 'ஆஷிகி 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தும் ஹி ஹோ' பாடல், அர்ஜித்தை திரையுலகின் முன்னணிப் பாடகர்களின் வரிசையில் இடம்பிடிக்கச் செய்தது.

இளைஞர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ விருதை பெற்றவர்

அர்ஜித் சிங் இதுவரை இரண்டு முறை தேசிய விருதையும், எட்டு முறை பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2018-ல் வெளியான 'பத்மாவத்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பிந்தே தில்' என்ற தனித்துவமான பாடலுக்காக அர்ஜித் தனது முதல் தேசிய விருதை வென்றார்.

இரண்டாவது முறையாக, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த 'பிரம்மாஸ்த்ரா' (2022) திரைப்படத்தின் 'கேசரியா' பாடலுக்காக அர்ஜித்துக்கு தேசிய விருது கிடைத்தது.

சல்மான் கானுடன் சர்ச்சை

அர்ஜித் சிங் பேட்டிகளைத் தவிர்ப்பதற்கும், பத்திரிகையாளர்களிடம் அதிகம் பேசாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கும் பெயர் பெற்றவர்.

அர்ஜித் சிங்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சை நடிகர் சல்மான் கானுடன் ஏற்பட்டது.

2014-ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில், அர்ஜித்தை கௌரவிப்பதற்காக சல்மான் மேடைக்கு அழைத்தார். அப்போது அர்ஜித் மேடைக்கு வந்ததும், சல்மான் நகைச்சுவையாக, "தூங்கிவிட்டீர்களா ?" என்று கேட்டார். அதற்கு அர்ஜித், தொகுப்பாளராக இருந்த சல்மானிடம், "நீங்கள் தான் என்னை தூங்க வைத்துவிட்டீர்கள்" என்று பதிலளித்தார்.

இதற்குப் பிறகு, சல்மான் கான் மற்றும் அர்ஜித் சிங் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

விரைவில், சல்மான் படங்களுக்காக அர்ஜித் பாடிய பாடல்கள் நீக்கப்பட்டு, மற்ற பாடகர்களின் குரலில் அவை மாற்றப்படுவதாகப் பேச்சுக்கள் எழுந்தன.

நீண்ட காலமாக சல்மான் படங்களுக்கு அர்ஜித் பாடவில்லை. ஆனால், இந்த சர்ச்சை ஏற்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 'டைகர் 3' திரைப்படத்தில் சல்மானுக்கு அர்ஜித் பின்னணி பாடினார்.

பின்னர், அர்ஜித் விஷயத்தில் தனக்கு தவறானன புரிதல் இருந்ததாகவும், இதில் அர்ஜித் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் சல்மான் கூறினார்.

இப்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகவுள்ள சல்மான் கானின் அடுத்த படமான 'தி பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படத்தில் 'மாத்ருபூமி' என்ற பாடலை அர்ஜித் சிங் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்ற 'துரந்தர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கஹ்ரா ஹுவா' என்ற காதல் பாடலையும் அர்ஜித் பாடியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு