காணொளி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு என்ன?
'கடவுள், வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று'
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் தீர்ப்பை இந்த பைபிள் வசனத்தோடுதான் நீதிபதிகள் வழங்கியிருக்காங்க.
'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றலாம்' என்ற, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உறுதி செய்திருக்கு.
மொத்தம் 170 பக்கம் வழங்கப்பட்டு இருக்கும் தீர்ப்பில் தீபத் தூண் உட்பட சில முக்கியமான விஷயங்கள் பற்றி நீதிமன்றம் பேசியிருக்கு.
அது என்னென்னனு இந்த வீடியோல பார்க்கலாம்.
தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டபடி, இந்த வழக்கில் தீர்ப்பின் தொடக்கத்தில் பைபிளின் ஆதியாகமம் 1:3 வசனமான 'கடவுள், வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று" என்பதை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், இதன்மூலம், 'கடவுள் தம்முடைய வார்த்தையால் ஒளியை தோற்றுவிக்கிறார். இது படைப்பு, நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியைக் குறிக்கிறது' என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
'பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம் சிலரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளனர்
'மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தபோது, சுமூகத் தீர்வு காண்பதற்கு இன்னும் காலதாமதம் ஆகவில்லை என்று கருதினோம். ஆனால், இரு தரப்பு வாதங்கள் தொடர்ந்தபோது இரு சமூகங்களுக்கு இடையே பகை நீடிக்கும் வரை தங்களுக்கு லாபம் என வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களும் சிலரும் குழப்பத்தை ஏற்படுத்தக் காத்திருப்பதை உணர்ந்தோம்' எனக் கூறியுள்ளனர்.
'கருவறையில் உள்ள கடவுளுக்கு நேர்மேலே இல்லாத ஓர் இடத்தில் விளக்கு ஏற்றுவதை சைவர்களின் ஆகம விதிகள் தடை செய்கின்றன என்பதைக் காட்டுவதற்கு இறுதிவரை உறுதியான ஆதாரத்தை சமர்ப்பிப்பதற்கு கோவில் நிர்வாகம் தவறிவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலையிலும் கருவறையின் நேர்மேல் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை எனவும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தேவஸ்தான நிலப்பகுதிக்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூண் அருகே ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் தேவஸ்தான பிரதிநிதிகளை விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சுவது ஆபத்தானதாக உள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
தர்கா அமைந்துள்ள இடத்தின் கீழே உள்ள மற்றொரு பாறையின் உச்சியில் இருக்கும் தீபத்தூண் எனப்படும் கல் தூண், தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாக இருப்பதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ள அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களே உருவாக்கிய கற்பனையான பேய் அதாவது 'imaginary ghost' என நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
தீபத்தூண் பற்றி முரணான விவரணைகள் முன்வைக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.
அந்தத் தூண் ஒரு நிலஅளவை கல் (survey stone) எனக் கூறி எதிர் மனுதாரர் தரப்பில், 1879ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “Account of the Operation of ‘The Great Trigonometrical Survey of India’ – Volume II” என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
இதில், இந்தியா முழுவதும் எவ்வாறு நிலஅளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் இமயமலையில் இருந்து தீபகற்பத்தின் தெற்கு முனை வரை இந்தியாவை வரைபடமாக்குவதற்காக, பல்வேறு நிலப்பரப்புகளில் (terrains) எந்தெந்த முறைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து மிகத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் மலை பற்றி 2 நிலையங்கள் (Stations) குறிப்பிடப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சொல்றாங்க.
ஒன்று சுமார் 550 முதல் 600 அடி உயரமுள்ள, தனியாக நிற்கும் பாறைமலை. அதில், அங்கேயே உள்ள பாறையில் (in situ) வட்டமும் புள்ளியும் பொறிக்கப்பட்டுள்ளன.
மற்றொன்று மலையின் உச்சியில் அமைந்துள்ள மசூதியின் மேடையின் மையப்பகுதி.
இது தவிர, அந்த நிலையத்தில் அடையாளக் கல்லாக (mark stone) எந்தக் கல்லும் பதிக்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அடையாள கல் தொடர்பான அந்த விளக்கத்தையும், திருப்பரங்குன்றம் மலையில் கண்டறியப்பட்ட விவாதத்திற்குரிய தூணின் படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, அந்தத் தூண் இரு முனைகளிலும் செதுக்கப்பட்ட அலங்கார அம்சங்களையும், மேல்பகுதியில் பாத்திரம் போன்ற (bowl shape) அமைப்பையும் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
இதன் மூலம், அந்தத் தூண் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலஅளவீட்டு துறை விட்டுச் சென்ற ஒரு சாதாரண அடையாளக் கல் மட்டுமே என சில தனிநபர்கள் திட்டமிட்டு பரப்பும் கருத்து முற்றிலும் அடிப்படையற்றது என்பது தெளிவாகிறது என தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கு.
சிலரால் அளவை கல் என அழைக்கப்பட்ட தீபத்தூணை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அது கிரானைட் கல் என கூறினார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மற்றோரு மூத்த வழக்கறிஞர் சந்தேகமே இன்றி அது தீபத்தூண்தான், ஆனால் அது கார்த்திகை தீபத்தின்போது இந்துக்களால் பயன்படுத்தப்படவில்லை என கூறியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தவிர நீதிபதிகள் 5 வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர்.
1. தீபத்தூணில் தேவஸ்தானம் விளக்கேற்ற வேண்டும்
2. கார்த்திகை தீபத் திருவிழாவின்போது தேவஸ்தானம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும்.
3. தேவஸ்தானக் குழுவுடன் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.
4. குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்.
5. மலையில் உள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
மறுபுறம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



