You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாரடைப்பு மரணங்களைத் தடுக்கும் வாட்ஸ் ஆப் குழுக்கள் - தமிழ்நாடு மருத்துவர்களின் புதிய முயற்சி
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த 40 வயது பெண் துப்புரவுத் தொழிலாளி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்தது தீவிர மாரடைப்பு. லால்குடி மருத்துவமனையில் இதயவியல் நிபுணர்கள் கிடையாது, இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிகளும் கிடையாது. எனினும், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. அதற்குக் காரணம் - மருத்துவர்களின் வாட்ஸ் ஆப் குழு.
தமிழ்நாட்டில் இதயவியல் மருத்துவரும் ஆஞ்சியோபிளாஸ்டி (இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்கும் சிகிச்சை) எனும் அறுவை சிகிச்சை செய்ய வசதியும் இல்லாத 188 சிறிய மருத்துவமனைகள், 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் ஆப் மூலம் நோயாளியின் இசிஜி, மருத்துவ வரலாறு, பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை உடனடியாகத் தெரிந்து கொண்டு, ரத்தக்கட்டை நீக்கத் தேவையான மருந்துகளை மருத்துவர்கள் அப்போதே பரிந்துரைக்கிறார்கள்.
வாட்ஸ் ஆப் செயலியில் சிறிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், பாதிப்புகளை குறைக்க முடியும் என்று இந்தத் திட்டம் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு அதிகரித்து வரும் நேரத்தில் இதுபோன்ற திட்டம் தாமதமின்றி சிகிச்சை பெற உதவி வருவதாக, இத்திட்டம் குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ள ஆய்வு கூறுகிறது.
திட்டம் எப்படி செயல்படுகிறது?
இருதயத்தில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எவ்வளவு சீக்கிரம் ஒருவருக்குக் கிடைக்கிறதோ, உயிரை காப்பாற்றும் வாய்ப்புகள் அவ்வளவு அதிகரிக்கும். ஆனால், 6% முதல் 8% நோயாளிகளுக்கே உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுவதாக, தமிழ்நாடு மாரடைப்பு திட்ட அலுவலரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் நிறுவனத்தின் இயக்குநருமான மருத்துவர் ஜஸ்டின் பால் தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தீவிர மாரடைப்புகள் ஏற்படும் போது உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற இதயத்தில் ரத்தக் கட்டை நீக்குவதற்கான நேரடி சிகிச்சையே உலக சுகாதார நிறுவனத்தாலும் நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்படுவதாகும். ஏனென்றால் ரத்த ஓட்டம் தடைபட்டால் தசைகள் உயிரிழந்துவிடும். பிறகு அவற்றை உயிர்ப்பிக்க முடியாது. ஆனால், அந்த சிகிச்சையை எல்லா மருத்துவமனைகளிலும் செய்வதற்கான வசதிகள் இருக்காது. அதுபோன்ற மருத்துவமனைகளில், ரத்தக் கட்டை கரைப்பதற்கான மருந்தை உடனடியாக கொடுக்கலாம். மருந்தை கொடுத்து அடுத்த 24 மணி நேரங்களில் அறுவை சிகிச்சை செய்வது நல்ல பலன் அளிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன" என்று அவர் விளக்குகிறார்.
உதாரணமாக லால்குடி அரசு மருத்துவமனை திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவக் கல்லூரி இருதயவியல் பிரிவு மருத்துவர்களும், லால்குடி மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உள்ளிடோர் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
"மாரடைப்புக்கான அறிகுறிகளுடன் ஒருவர் வரும்போது, அவருக்கு முதலில் இசிஜி எடுக்கப்படும். அந்த இசிஜி முடிவுகளை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்வோம். திருச்சி மருத்துவக் கல்லூரியிலிருந்து 24 மணிநேரமும் இருதயவியல் பிரிவை சேர்ந்த ஒரு மருத்துவர் பணியில் இருப்பார். அவர் அந்த இசிஜி முடிவுகளை பார்த்து, ரத்தக்கட்டை கரைக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டுமா, இல்லையா என்று கூறுவார்," என்று லால்குடி மருத்துவமனையில் பணிபுரியும் பொது மருத்துவர் முகமது ரஷீத் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.
"சமீபத்தில் எங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 40 வயதான சுகாதாரப் பணியாளர் திடீரென முதுகுவலி என்று கூறினார். நள்ளிரவில் திடீரென முதுகு வலி என்று கூறியதால், சந்தேகப்பட்டு இசிஜி எடுத்துப் பார்த்தோம். அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக ரத்தக் கட்டை கரைக்கும் மருந்து கொடுத்து திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம்" என்கிறார் அவர்.
தமிழ்நாடு அரசு இருதய நலன் கொள்கையை எழுதியுள்ள மருத்துவர் ஜஸ்டின் பால், "தமிழ்நாடு தீவிர மாரடைப்பு (ஸ்டெமி) ஆய்வின் முதன்மை ஆய்வாளராக நான் இருக்கையில், பெரிய மருத்துவமனைகளை சிறிய மருத்துவமனைகளுடன் இணைத்து குறைந்த விலையிலான இருதய ரத்தக் கட்டுக்கு வழங்கப்படும் மருந்தைக் கொண்டு, மாரடைப்பு சிகிச்சை வழங்குவதை சோதித்துப் பார்த்தோம். முதலில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் மட்டுமே சோதனை செய்யப்பட்டது. அது நல்ல பலன் தருகிறது என்று உணர்ந்தோம். எனவே, 2013-2015 ஆண்டுகளில் இதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அரசு ஒப்புதலுக்கு பிறகு 2017-ம் ஆண்டு முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டது" என்கிறார்.
ஒவ்வொரு பெரிய மருத்துவமனையும் அவற்றுக்கு அருகில் உள்ள 10 முதல் 15 சிறிய மருத்துவமனைகளுடன் ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ள இத்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மாரடைப்புகளின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க உதவியது என்று ஆய்வு நடத்தப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (Indian Journal of Medical Research) வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் 71,907 பேருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் கண்காணிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான ஆய்வு காலத்தில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 67% அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவிகிதம் 8.7% முதல் 8.3% ஆக குறைந்தது.
- அரிய குறைபாடு: வலது பக்கம் இருந்த பெண்ணின் இதயம் - இந்திய மருத்துவர்கள் சரிசெய்தது எப்படி?
- பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்தியரின் இதயம்; கைகொடுத்த சென்னை - என்ன நடந்தது?
- மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?
- உடல்நலம்: இளம் வயதில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து - கண்டறிய வழி கூறும் விஞ்ஞானிகள்
இந்த ஆய்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் 12 பெரிய மருத்துவமனைகளும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய மருத்துவமனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில் ஸ்டெண்ட் பொருத்தப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி எனும் சிகிச்சையை, ரத்தக் கட்டை குறைக்கும் மருந்தை எடுத்துக் கொண்ட பின் சிகிச்சை பெற்றவர்களின் சதவிகிதம் 9.1% லிருந்து 33.2% ஆக ஐந்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
அதேபோன்று, மாரடைப்புக்கான சிகிச்சையை சில மணி நேரங்களில் நேரடியாக பெற்றவர்களின் சதவிகிதமும் 5.7% முதல் 9.7% ஆக உயந்திருந்தது.
இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்பட்ட ஆறு பெரிய மருத்துவமனைகளில் ரத்தக்கட்டுக்கான மருந்தைப் பெற்ற பின் ஸ்டெண்ட் பொருத்தும் சிகிச்சைப் பெற்றவர்களின் சதவிகிதம் 0.9% லிருந்து 25.3% ஆக உயர்ந்திருந்தது. உயிரிழப்புகள் 8.5% முதல் 5.8% ஆக குறைந்தது.
"உடனடியாக இதயவியல் மருத்துவரின் ஆலோசனை கிடைப்பது தான் மிகவும் முக்கியமான விசயம். இந்த மருத்துவமனையில் இருதவியல் நிபுணர் கிடையாது. இங்கு பணியில் இருக்கும் மருத்துவர் சருமநோய் மருத்துவராக இருக்கலாம், கண் மருத்துவராக இருக்கலாம். அவரிடம் நோயாளிகள் வரும்போது, அவர் இசிஜி முடிவுகளை பார்த்து, ரத்தக் கட்டுக்கான மருந்தை கொடுக்க வேண்டுமா, இல்லையா என்று தைரியமாக முடிவு செய்ய இயலாது.
இப்போது இதயவியல் மருத்துவர் ஒருவர் உடனடியாக ஆலோசனை தெரிவிப்பதால், முடிவு எடுப்பது குறித்த பயம் இல்லை. மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை இங்கிருந்து 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் சென்று சேர்ந்தனரா என்று தொலைபேசியில் உறுதி செய்துகொள்வோம்" என்கிறார் மருத்துவர் முகமது ரஷீத்.
"1995-ம் ஆண்டு திருநெல்வேலியில் எனது அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது கேத் லேப் கிடையாது, எங்களுக்கு பணமும் கிடையாது. அப்பாவை நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் ஏற்றி அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அந்த நேரத்தில் அதற்கான பணத்தை திரட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. 1995-ம் ஆண்டில் இருதயத்தில் உள்ள இரண்டு அடைப்புகளுக்காக ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு அருகில் உள்ள கேத் லேப் இல்லாததும், சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாததும் எப்படி ஒருவரை பாதிக்கும் என்பதை நேரடியாக அனுபவித்துள்ளேன்" என்று பகிர்ந்துக் கொண்டார் மருத்துவர் ஜஸ்டின் பால்.
ரத்தக் கட்டை கரைக்கும் மருந்தின் விலை சுமார் ரூ.45 ஆயிரமாக தனியார் மருத்துவமனைகளில் இருக்கின்றன என்றும் அதை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜஸ்டின் பால் தெரிவித்தார்.
"ஒரு லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட ஸ்டெண்டுகளின் விலையை அரசு முயற்சியால் ரூ.30 ஆயிரம் அளவில் குறைத்துள்ளோம். அதேபோல, இதற்கான முயற்சிகளையும் சம்பந்தப்பட்ட அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு